சந்திராஷ்டம சங்கடங்கள் இனி தேவையில்லை! பாதிப்பு இல்லாத நட்சத்திரங்கள், பரிகாரங்கள்... முழு விவரம்!
சந்திரன் மனோகாரகன். அவன் எட்டில் சென்று மறைவதால் மனம் தொடர்பான சிக்கல்கள் அதிகரிக்கும். தவறான முடிவுகளை எடுப்போம். தேவையற்ற வம்புகள் தேடிவரும். இப்படி எல்லாம் சந்திராஷ்டமம் குறித்து அஞ்சுகிறோம். சந்திராஷ்டமம் குறித்து முழுமையாக அறிந்து கொண்டால், வீண் சஞ்சலங்கள் எழாது.
சந்திராஷ்டமம் என்றால் என்ன?
ஒருவர் பிறந்த நட்சத்திரம் இருக்கும் ராசிக்கு, 8-வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நட்சத்திரங்கள் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக் காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாள்களில் திருமணம் வைக்கா மல் இருத்தல் நலம். இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
சந்திராஷ்டம தினங்களை ஏன் தவிர்க்க வேண்டும்?
அதற்குக் காரணம், ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். அதனால் சந்திராஷ்டம நாட்களில் தொடங்கும் புதிய காரியங்கள் கலகத்திலும் தாமதத்திலும் முடியலாம். எனவேதான் பெரும்பாலானோர் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று முடிவு செய்வர்.
மட்டுமன்றி சந்திரன் மாத்ரு காரகன். எனவே, சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படக்கூடும்.
சந்திராஷ்டமம் எல்லோரையும் பாதிக்குமா?
கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. காரணம், கடகம் சந்திரன் ஆட்சி பெறும் ராசி என்பதாலும், ரிஷபம் சந்திரன் உச்சம் பெறும் ராசி என்பதாலும் அந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நன்மையே செய்வார்.
அதேபோல் ரோகிணி - அஸ்தம் - திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், வளர்பிறையில் பிறந்தவர்களுக்கும் சந்திராஷ்டம தினத்தில் நல்லதே நடக்கும் என்பார்கள்.

சந்திராஷ்டம பரிகாரம் என்ன?
சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.
சந்திராஷ்டம நாள்களில் மன அமைதியும் நன்மையும் நடைபெற அம்பிகையின் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.
`யா தேவி ஸர்வ பூதேஷு சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’
கருத்து: எல்லாம்வல்ல பராசக்தியானவள் அனைத்து உயிர்களிலும், இயற்கையிலும் அமைதியின் வடிவாக விளங்குகிறாள். அந்த அன்னையை வணங்குகிறேன்.
இப்படிச் சொல்லி வழிபட்டால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.
அனுகூல சந்திராஷ்டம்
ஜோதிட நூல்கள் அனுகூல சந்திராஷ்டமம் குறித்தும் விவரிக் கின்றன. சந்திரன் நம்முடைய ராசிக்கு எட்டில் சந்திரன் இரண்டேகால் நாள் உலவுவார். அதில் சந்திரன் ஜன்ம நட்சத்திரத்துக்கு அனுகூலமான நட்சத்திரத்தில் உலவும்போது பாதிப்பு நிச்சயம் குறைவாகவே இருக்கும். இதை அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
எந்தெந்த நட்சத்திரத்துக்கு அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள் எவை என்ற விவரம் இங்கே உங்களுக்காக...
ஜன்ம நட்சத்திரம் - அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள்
அசுவினி -- அனுஷம், கேட்டை
பரணி - கேட்டை, விசாகம்
கார்த்திகை -- அனுஷம்
ரோகிணி -- பூராடம், உத்திராடம்
மிருகசீரிஷம் -- உத்திராடம், திருவோணம்
திருவாதிரை -- திருவோணம், அவிட்டம்
புனர்பூசம்-- அவிட்டம், சதயம்
பூசம் -- சதயம், பூரட்டாதி
ஆயில்யம் -- அவிட்டம், பூரட்டாதி்்
மகம் -- உத்திரட்டாதி, ரேவதி
பூரம் -- பூரட்டாதி, ரேவதி
உத்திரம் -- அசுவினி, பரணி
அஸ்தம் -- பரணி, கார்த்திகை
சித்திரை -- கார்த்திகை, ரோகிணி
சுவாதி -- ரோகிணி, மிருகசீரிஷம்
விசாகம் -- மிருகசீரிஷம், திருவாதிரை
அனுஷம் -- திருவாதிரை, புனர்பூசம்
கேட்டை -- மிருகசீரிஷம், புனர்பூசம்
மூலம் -- பூசம், ஆயில்யம்
பூராடம் -- புனர்பூசம், ஆயில்யம்
உத்திராடம் -- மகம், பூரம்
திருவோணம் -- பூரம், உத்திரம்
அவிட்டம் -- உத்திரம், அஸ்தம்
சதயம் -- அஸ்தம், சித்திரை
பூரட்டாதி -- சித்திரை, சுவாதி
உத்திரட்டாதி -- சுவாதி, விசாகம்
ரேவதி -- சித்திரை, விசாகம்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


