சினிமாவை AI அழித்துவிடாது - சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏஐ குறும்படம்; சாதனை படைத்த சென்னை இளைஞர்கள்

சென்னையில் இயங்கி வரும் அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் நிறுவனமான ஹைபிரிட் ஸ்டுடியோ சமீபத்தில் விங்ஸ் ஆஃப் ஃபையர் என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது.

Hybrid Studio Team

அது முழுக்க முழுக்க ஏ.ஐ-யால் உருவாக்கப்பட்ட குறும்படம். இந்தக் குறும்படம் சர்வதேச ஹிக்ஸ்ஃபீல்டு திரைப்பட விழாவுக்கும் தேர்வானது. நாம் இது குறித்து அந்தக் குறும்படத்தின் இயக்குநரும், ஹைபிரிட் ஸ்டுடியோவின் நிறுவனருமான செந்தில்குமாரிடம் பேசினோம்.

அவர் பேசுகையில், "நானும் என்னுடைய நண்பர்களான ஜெயச்சந்திரன், பாலச்சந்தர் ஆகிய மூவரும் சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தோம். நாங்கள் கல்லூரியில் படிக்கும்போதே அனிமேஷன் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு, 2001 முதல் 2005 வரை அனிமேஷன் துறையில் பணிபுரிந்தோம்.

பல்வேறு அனுபவங்களுக்குப் பிறகு, சொந்தமாக 2008-ல் ஹைபிரிட் ஸ்டுடியோ நிறுவனத்தைத் தொடங்கினோம். அதன் மூலம் திரைப்படங்களுக்குப் புதிய தொழில்நுட்ப உதவியுடன் பிளாஷ்பேக் கதையை அனிமேஷன் மூலம் சொல்லும் டிரெண்டை தமிழ் சினிமாவில் உருவாக்கினோம். மூடர் கூடம், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் அனிமேஷன் & கிராஃபிக்ஸ் பணிகளைச் செய்தோம்.

அதன் மூலம் கிடைத்த அனுபவத்தினாலும் ஏஐ போன்ற தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் அதனை வைத்து படம் எடுக்கலாம் என யோசித்து செய்ததுதான் இந்த விங்ஸ் ஆஃப் ஃபயர் குறும்படம்" என்றவர், "உலகளாவிய போர்களை எதிர்த்தும், மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாகவும், சிறிய பட்ஜெட்டில் மக்களிடம் இது குறித்த எண்ணத்தை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம்.

Wings Of Fire
Wings Of Fire

போர்களில் முக்கியமாக குழந்தைகளும் பெண்களும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுடைய பார்வையில் இருந்தே இந்தக் குறும்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ரஷ்யா - உக்ரைன் போரை மையமாகக் கொண்டு, போரினால் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் வலியைச் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட குறும்படமே "விங்ஸ் ஆன் ஃபயர்".

இந்தக் குறும்படத்தை உருவாக்க Midjourney 2.5, ChatGPT, மற்றும் கூகிளின் Nano Banana Pro உள்ளிட்ட ஏ.ஐ கருவிகளைப் பயன்படுத்தி வெறும் 22 நாட்களில் உருவாக்கி முடித்தோம். ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி எடுத்ததால் ஏஐ கருவிகளின் சந்தாக் கட்டணமும், இதில் பணியாற்றியவர்களின் சம்பளமும் மட்டுமே இதன் பட்ஜெட். இப்படத்தை நான் நேரடியாகச் சென்று எடுத்திருந்தால் கோடிக்கணக்கில் பட்ஜெட் தேவைப்பட்டிருக்கும்" என்றார்.

Hybrid Studio Team
Hybrid Studio Team

தொடர்ந்து பேசியவர், "ஏஐ தொழில்நுட்பம் சினிமாவை அழித்துவிடாது. மாறாக, பெரிய பட்ஜெட் மற்றும் கற்பனை சார்ந்த கதைகளை எளிதாகக் கொண்டுவர இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது. மொழி, தேசம், மற்றும் எல்லைகளைத் தாண்டி எந்தவொரு வரலாற்று அல்லது சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையையும் ஏஐ உதவியுடன் மிகச் சிறப்பாக நம்ம ஊரிலேயே உலகத் தரத்தில் உருவாக்க முடியும்.

இதன் மூலம் சினிமா இன்னும் வளர்ச்சிதான் அடையும். அந்தத் தொழில்நுட்பத்தைக் கையாளும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை எதிர்ப்பதால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நம் கற்பனைத் திறனை அடைப்பதுபோல மாறிவிடும்" எனப் பகிர்ந்துகொண்டார்.

இந்தக் குறும்படம் யூடியூப் தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.