புல்வாமா, தொடர்பான பணம் உங்க வங்கி கணக்கிற்கு வந்துள்ளது - ஓய்வு நீதிபதியிடமே ரூ.2.50 கோடி பறிப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெற்கு ஜோதி நகர் சத்யவிஹார் காலனியைச் சேர்ந்தவர் கணபத் சிங் பண்டாரி (90). ஓய்வுபெற்ற நீதிபதியான இவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சி.பி.ஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் பேசினார். அப்போது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ரூ.50 கோடி ஹவாலா பணப்பரிவர்த்தனையில், கணபத் சிங்கின் வங்கிக் கணக்கிற்கு ரூ.40 லட்சம் வந்துள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய நேரிடும் எனக்கூறி, டிஜிட்டல் அரஸ்ட் செய்து மிரட்டினார். அடுத்த நாளே, ரிசர்வ் வங்கி மேலாளர் என்ற போர்வையில் மற்றொரு நபர் பேசி, வழக்கிலிருந்து தப்பிக்க வங்கிக் கணக்கு விவரங்களைத் தருமாறு கேட்டுள்ளார். அதிகாரிகள் என்ற போர்வையில் வந்த தொடர் மிரட்டல்களால் அச்சமடைந்த முன்னாள் நீதிபதி, தனது வங்கிக் கணக்கு விவரங்களை அவர்களிடம் அளித்ததுடன், அவர்கள் கூறியபடி ஆகஸ்ட் 6 முதல் 10 வரையிலான ஐந்து நாட்களில் 9 தவணைகளாக மொத்தம் ரூ.2.50 கோடியை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.
இறுதியாக, தனது பி.பி.எஃப் கணக்கில் இருந்த பணத்தையும் எடுப்பதற்காக அவர் வங்கிக்குச் சென்றார் ஓய்வுபெற்ற நீதிபதி. அங்கு அவரது பதற்றமான நிலையைக் கண்டு சந்தேகமடைந்த வங்கி மேலாளர், காரணத்தைக் கேட்டறிந்தார். அவர் கூறிய காரணங்களை வைத்து சைபர் மோசடி வலையில் ஓய்வுபெற்ற நீதிபதி சிக்கியது தெரியவந்தது. வங்கி மேலாளரின் வழிகாட்டுதல்படி ஜோதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ராஜஸ்தான் காவல்துறையினர், பறிக்கப்பட்ட பணத்தின் பரிவர்த்தனைகளைக் கண்காணித்தபோது, ரூ.2.50 கோடியில் ரூ.5 லட்சம் கேரளாவைச் சேர்ந்த ஒருவரது வங்கிக் கணக்கிற்குச் சென்றது தெரியவந்தது. உடனடியாக களமிறங்கிய ராஜஸ்தான் போலீஸ் குழு, எர்ணாகுளம் மத்திய காவல் உதவி ஆணையர் சிபி டாம் தலைமையிலான தனிப்படையின் உதவியை நாடியது.

இரு மாநில காவல்துறையினரும் இணைந்து நடத்திய தீவிரத் தேடுதலில், கொச்சி பினானிபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் பதுங்கியிருந்த எர்ணாகுளம் வரப்புழா மண்ணந்துருத்தைச் சேர்ந்த ஆனந்தபாபுவை நேற்று மதியம் அதிரடியாகக் கைது செய்தனர். தனது கணக்கிற்கு வந்த ரூ.5 லட்சத்தைக் காசோலை மூலம் எடுத்து மோசடிக் கும்பலிடம் வழங்கி கமிஷன் பெற்ற இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேல் விசாரணைக்காக ட்ரான்சிட் வாரண்ட் மூலம் ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


