முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி - வைரலாகும் வீடியோ

சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக மகளிரணி நிர்வாகியும், சென்னை மாநகராட்சியின் 95-வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வகையில் பேசியிருக்கிறார்.

சுதா தீனதயாளன் - முதல்வர் விஜய்

இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மேயர் பிரியா, சேகர்பாபு உள்ளிட்டோர் சிரிப்பது போன்று இடம்பெற்றுள்ளது.

அதேவேளையில், சுதா தீனதயாளனின் அந்தப் பேச்சுக்கு மேடையிலேயே கனிமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்து அவரைக் கண்டித்ததாக திமுக மகளிரணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் கவுன்சிலரின் பேச்சைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தவெக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலைய (B-2) காவல்துறையினர் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது அவதூறாகப் பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனை எம்.பி கனிமொழி கண்டித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழி

மேடையில் பேசிய கனிமொழி, “நம் எதிராளிகள் யார்? என்னவாக இருக்கிறார்கள் என்பதை வைத்து, நாம் நம்மை உருவாக்கிக்கொள்ளக் கூடாது. அவர்கள் பேசட்டும். அவர்களுக்கு தெரிந்தது, அவர்களின் தரம் அவ்வளவுதான்.

நாம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்திருப்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்” என திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனைக் கண்டித்திருக்கிறார்.

தவிர முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, “சுதாவுக்கு ஒரு அறிவுறுத்தல். வேகமாகவும், கோவமாகவும் பேசுகிறீர்கள். ஆனால், நாம் நாகரிகத்தில் இருந்து விடுபடாமல் பேச வேண்டும். ஒருமையில் எல்லாம் பேசக் கூடாது” என அறிவுறுத்தியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.