ராமாயணம் திரைப்படம்: 18 மாத உழைப்பு; 4,500 நகைகள்! 3 சாம்ராஜ்யாங்களுக்கு உருவான பிரமாண்ட ஆபரணங்கள்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காவியத் திரைப்படம் ‘ராமாயணம்’. சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் இப்படத்தின் பிரம்மாண்டத்தை பறைசாற்றும் வகையில், இதன் ஆடை மற்றும் ஆபரண வடிவமைப்பு குறித்த வியக்கத்தக்க தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியாவின் முன்னணி நகை பிராண்டான Tribe Amrapali, இப்படத்தின் முதல் பாகத்திற்காக மட்டுமே சுமார் 4,500-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆபரணங்களை வடிவமைத்துள்ளது.

இத்தகைய பிரம்மாண்ட படைப்பிற்குப் பின்னால் சுமார் 18 மாத கால தீவிர உழைப்பு அடங்கியுள்ளது.

ராமாயணம்

இந்தியாவின் பண்டைய கோயில் சிற்பங்கள், கட்டடக்கலை மற்றும் புராண நூல்களை விரிவாக ஆராய்ந்து, திறமையான கைவினை கலைஞர்களைக் கொண்டு இந்த நகைகள் செதுக்கப்பட்டுள்ளன. வழக்கமான திரைப்பட நகைகளைப் போல அனைவருக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பைத் தராமல், கதையின் மூன்று முக்கிய சாம்ராஜ்யங்களின் கலாசாரத்தையும் அரசியலையும் பிரதிபலிக்கும் வகையில் மூன்று தனித்துவமான பாணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராமாயணம்

அயோத்தி  அரச கம்பீரமும் தர்மமும்!

அயோத்தி மன்னர்களின் ஆபரணங்கள் அமைதி, சமநிலை மற்றும் அரச கண்ணியத்தை வெளிப்படுத்துகின்றன. ராமர் கதாபாத்திரத்தில் தோன்றும் ரன்பீர் கபூருக்காக, அவரது சூரிய வம்சத்தைக் குறிக்கும் பிரத்யேக ‘சூரிய முத்திரை’, புனித தாமரை மலர்கள் மற்றும் தர்ம சக்கரக் குறியீடுகள் கொண்ட ஆபரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆடம்பரம் ததும்பாமல், பேரரசின் நெறிமுறையை பறைசாற்றும் நேர்த்தியான சமச்சீர் வடிவமைப்பு இதன் சிறப்பு.

மிதிலை இயற்கையோடு இயைந்த நுண்கலை!

சீதையின் நாடான மிதிலை, மண்ணின் கலை மற்றும் அமைதியை மையமாகக் கொண்டது. சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் ஆபரணங்கள் பூக்கள், மொட்டுகள் மற்றும் கொடிகளின் உருவங்களை மென்மையாகப் பிரதிபலிக்கின்றன. மிதிலையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நுணுக்கங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு, சீதையின் சாந்தமான குணத்திற்கும் இயற்கையோடு இணைந்த எளிமைக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

ராமாயணம்

இலங்கை - பொன்னகரின் அதிகாரமும் ஆதிக்கமும்!

ராவணனின் பொன்நகரமான இலங்கை, அசுர பலத்தையும் அளப்பரிய செல்வத்தையும் நம் கண்முன் நிறுத்துகிறது. ராவணனாக நடிக்கும் யாஷ்-க்கு கூர்மையான விளிம்புகள், கனமான தங்க வடிவங்கள் மற்றும் ஆதிக்கத்தை உணர்த்தும் பிரம்மாண்ட அணிகலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், விபீஷணன் மற்றும் மண்டோதரி கதாபாத்திரங்களின் சாந்தமான குணத்தை வெளிப்படுத்த, அவர்களின் நகைகளில் மென்மையான சமநிலை பேணப்பட்டுள்ளது.

வெறும் காட்சி அலங்காரமாக இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் விவரிக்கும் முக்கிய கருவியாக இந்த ஆபரணங்கள் உருப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியத் திரையுலக வரலாற்றில், ஒரு காவியத்தின் உலகத்தை மறுஉருவாக்கம் செய்ய மேற்கொள்ளப்பட்ட கலைப்பணிகளில் இந்த 4,500 ஆபரணங்களின் உருவாக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.