BKU: அந்த சிக்கலான சூழலில் இதை செய்தோம்; இது என் பர்சனல் வெற்றி! - இயக்குநர் கிரிஷ் ஏ.டி
திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது.
இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கிரிஷ் ஏ.டி பிரேமலு 2-வுக்கு ஒரு வருடம் நேரம் செலவழித்து வீணாக்கிவிட்டோம் எனப் பேசியிருக்கிறார்.
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்த பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அவர் பேசுகையில், "நாங்கள் பிரேமலு முடித்து ஒரு வருடம் கழித்துதான் இந்த பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்தைத் தொடங்கினோம். அதுவரை எங்கள் முழு நேரமும் பிரேமலு 2 பணிகளில்தான் கழிந்தது.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் படத்தைக் கைவிட வேண்டிய சூழல் உருவானது. அது எங்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. எங்களது ஒரு முழு வருட உழைப்பும் நேரமும் வீணாகப்போனது.
உண்மையில் அவ்வளவு நேரத்தை இழக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தச் சிக்கலான காலகட்டத்தில்தான் பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்தைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.

உண்மையில் பிரேமலு 2 திட்டத்திற்கு முன்பே இந்தப் படத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் பிரேமலு ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் யோசனை வந்து அதன் பின்னால் போனோம். பிரேமலு 2 கைவிடப்பட்ட அந்தச் சமயத்தில் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் உறுதுணையாக நின்றார்கள்.
அவர்களின் ஆதரவால்தான் பெத்லஹேம் குடும்ப யூனிட் படத்தின் திரைக்கதையை மிக விரைவாக எழுதி முடிக்க முடிந்தது. ஒருவேளை பிரேமலு 2 நடந்திருந்தால் கடந்த விஷு பண்டிகைக்கு வெளியாகியிருக்கும்.
ஆனால் அதிலிருந்து 3-4 மாதங்கள் கழித்துதான் பெத்லஹேம் குடும்ப யூனிட் வெளியானது. இந்தப் படம் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதை என் பர்சனல் வெற்றியாகப் பார்க்கிறேன்!" எனப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

