கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது மோதியது. காரின் டிரைவர் விபத்தை ஏற்படுத்தியவுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதையடுத்து பக்கத்து தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் சம்பவ இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். சாலை கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் பணியாற்றியவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்களில் 7 பேர் அலிஷெர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள்

விபத்து ஏற்பட்டவுடன் மீட்பு பணிக்காக வந்த பக்கத்து தொழிற்சாலை ஊழியர் ஹர்விந்தர் சிங் இது குறித்து கூறுகையில்,நான் தொழிற்சாலையிலிருந்து வந்தபோது, ​​அங்கு கிராம மக்கள் யாரும் இல்லை. அந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு உடல்கள் மட்டுமே கிடந்தன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளர்கள்என்று தெரிவித்தார்.

பணியில் இருந்த போலீஸார் மருத்துவ வாகனத்திற்கு அழைப்பு விடுத்தும், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆனதாக அவர் தெரிவித்தார். மற்றொருவர் இது குறித்து கூறுகையில், அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை மருத்துமனைக்கு கொண்டு செல்லாமல் நடைமுறைச் சடங்குகளை முடிப்பதில் பிடிவாதமாக இருந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரத்தில் வலியால் துடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸுக்காகக் காத்திருந்தபடியே உயிரிழந்தனர். அவர்களில் பலர் அதிக இரத்தப்போக்கினால் உயிரிழந்தனர்" என்று அவர் கூறினார். போலீஸ் வந்த பிறகுதான் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பிச்சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.