தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது - கலங்கிய சீமான்!

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``எளிமையும் இனிமையும் கொண்ட மிகச் சிறந்த மனிதரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களோடு இணைந்து பணியாற்றிய காலங்கள் அனைத்தும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாகும்.

தேவா

நினைவை விட்டு நீங்காத எண்ணற்ற இசை வடிவங்களை அவர் தமிழ் சினிமாவிற்கு வார்த்துக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி, அண்ணாமலை, பாட்ஷா, வாலி, ஆசை, குஷி, நேருக்கு நேர் ஆகிய திரைப்படங்களில் அவர் அமைத்துக் கொடுத்த வகை வகையான இசை வடிவங்களை எவராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அவர் யாரிடமும் உரத்துப் பேசியோ அல்லது கோபப்பட்டோ யாருமே பார்த்ததில்லை. அவர் மட்டுமன்றி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த முரளி, சபேஷ், சிவா ஆகிய அனைவருமே மிகவும் அன்பாகப் பழகக்கூடியவர்கள்.

நாங்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல இணைந்தே வேலை செய்தோம். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது மனதிற்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. அவரது மறைவு செய்தி எதிர்பாராத பேரதிர்ச்சியாக உள்ளது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் மனதைத் தேற்றிக்கொள்ளலாம். ஆனால், வழக்கம்போல நல்ல உடல்நலத்தோடு இருந்தவர், தேநீர் அருந்திவிட்டு குளிக்கச் சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் பிரிந்துள்ளார் என்பது பெரும் துயரத்தை அளிக்கிறது.

 சீமான்
சீமான்

சமீபகாலமாக நாம் இழக்கக்கூடாத பல மகத்தான ஆளுமைகளை இழந்து வருகிறோம். இயக்குநர் பாரதிராஜா, பாக்கியராஜ் மற்றும் தற்போது தேவா ஆகியோரின் மறைவை ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ மிகவும் கடினமாக உள்ளது. தேவா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக தம்பி ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர்கள் முரளி, சிவா ஆகியோருக்கும் மற்றும் திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மதிப்புமிக்க, மகத்தான, மறக்க இயலாத கலைஞனுக்கு என் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.