Kolkata Stampede: ``என் அம்மா என் கண்முன்பே உயிரை விட்டார்..! - தாயை பறிகொடுத்த இளைஞரின் துயரம்!
மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் பலா் முண்டியடித்து பந்தலில் ஒதுங்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். 25 பேர் காயமடைந்திருக்கின்றனர். காயமடைந்தவா்களுக்கு கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்களில் ஒருவர் சோனு பால் (25). குமோர்துலியைச் சேர்ந்த இவர், தன் தாயுடன் துர்கா பூஜையைக் காண வந்திருந்தபோதுதான் இந்த திடீர் அசம்பாவிதம் நடந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், ``என் அம்மா என் கண் முன்பே நெரிசலில் சிக்கி நசுங்கி உயிரை விட்டார். நானும் பிழைத்திருக்கக் கூடாது. வெளியே பலத்த மழை பெய்ததால், மழைக்கு ஒதுங்குவதற்காக நுழைவாயிலில் நின்றிருந்தவர்கள், உள்ளே நுழைய ஒருவரையொருவர் தள்ளத் தொடங்கினர். அந்தத் தள்ளுமுள்ளுவில் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். நான் எப்படியோ சுதாரித்து எழுந்து என் தாயைத் தேடிச் சென்றபோது, அவர் உயிரற்றுக் கிடந்தார்," என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
மழையின் காரணமாக பந்தலின் நுழைவாயிலில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர். திடீரென மழை தீவிரமடைந்ததால் பந்தலுக்குள் நுழைய மக்கள் முண்டியடித்தனர். பந்தல் அமைக்கப்பட்டிருந்த பகுதி மிகக் குறுகியதாகவும், மின் விளக்குகள் ஏதுமின்றி கடும் இருளாகவும் இருந்ததால் நிலைமை கைமீறிப்போனது. நெரிசலில் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மேலும் பீதி அதிகமானது. குழந்தைகள், பெண்கள் உட்படப் பலரும் ஒருவர் மீது ஒருவராக விழுந்து மூச்சுத்திணறினர்.

அச்சமயத்தில் அவர்களைக் காப்பாற்ற காவல்துறையோ அல்லது தொண்டர்களோ அங்குப் போதிய அளவில் இல்லை. மயக்கமடைந்தவர்களைப் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு அவசர அவசரமாகத் தூக்கிச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தீவிர இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, ``காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை வழங்கவும் துர்கா தேவியைப் பிரார்த்திக்கிறேன்." எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

