இந்த வருடம் சரஸ்வதி பூஜை நாளுடன் இணையும் சூட்சும சக்தி நிறைந்த அபிஜித் நட்சத்திரம்... என்ன விசேஷம்?

அபிஜித் - 28-வது நட்சத்திரம் என்று சிறப்பிப்பார்கள். காலச் சக்கரத்தில் இது மகர ராசியில் - நட்சத்திரங்களில் உத்திராடம் மற்றும் திருவோணத்துக்கு இடையே சூட்சுமமாக வரக்கூடியது. `இதன் தேவதை ப்ரஜாபதி’ என்கிறது வேதம்.

சரஸ்வதி பூஜை

‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றிபெறுதல் என்பது பொருள். ஆக, அபிஜித் வேளையில் செய்யப் படும் காரியங்களுக்கு பன்மடங்காக பலன் கிடைக்கும்.

பிரம்ம ஸ்வரூபமான இந்த நட்சத்திரத்தின் ஸ்தானம் கிருஷ்ண பரமாத்மாவின் தலையில் இருக்கக்கூடிய மயிலிறகு என்கிறது மகா பாரதம். குருக்ஷேத்திரப் போருக்குமுன், எந்த நாளில் போரைத் தொடங்கலாம் என்று கெளரவ தரப்பில் சகாதேவனிடம் கேட்டார்கள். அவன் ஜோதிடத்தில் வல்லுநன். கேட்பது பகைவர் என்றாலும்கூட, பாரபட்சம் இல்லாமல் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் முகூர்த்தத்தைக் குறித்துக்கொடுத்தான். அது, அபிஜித் முகூர்த்த வேளை ஆகும்.

இதையறிந்த கிருஷ்ணர், வானில் இருந்த அபிஜித் நட்சத்திரத்தை எடுத்துத் தன் மயிலிறகில் வைத்துக்கொண்டாராம். ஆகவே, குறிப்பிட்ட வேளையில் அந்த நட்சத்திரத்தின் பலன் இல்லாமல் போகவே, கெளரவர்கள் போரில் தோற்றுப் போனார்கள் என்று மகாபாரதம் தொடர்பாக ஒரு தகவல் சொல்லப்படுவது உண்டு. அதன் பிறகு, அபிஜித்தை உரிய இடத்திலேயே மீண்டும் வைக்க வேண்டும் என்று தேவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

பஞ்சபூத பூஜை

அந்த நட்சத்திரத்தின் வேளையில் செய்யும் காரியங்கள் நிச்சய வெற்றியைக் கொடுக்கும். அதை தீயவர்கள் பயன்படுத்திவிடக் கூடாது என்று தீர்மானித்து, அதை மறைத்து வைக்கவே முடிவுசெய்தார் கிருஷ்ணன். ஆனாலும் தேவர்கள் தொடர்ந்து மன்றாடவே, தினமும் பகல் 11:45 முதல் 12:15 மணி வரையிலும் அபிஜித் நட்சத்திரம் தோன்றும்படி செய்தார் என்றும் தகவல் உண்டு. இதனால்தான் இந்த நட்சத்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுடன் சேராமல் உள்ளது என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். குறிப்பிட்ட இந்த நேரத்தைத் தினமும் வரும் அபிஜித் காலமாக சிலர் ஏற்பார்கள்.

நட்சத்திரங்களில் உத்திராடம் 4-ம் பாதம் மற்றும் திருவோணம் 1-ம் பாதம் வரையிலுமான பாகங்கள் அபிஜித் நட்சத்திரத்துக்கு உரியது. ஆக இந்த நட்சத்திர பாதங்களில் பிறந்தவர்கள், அபிஜித் நட்சத்திரகாரர்கள். இவர்கள் வெற்றியாளர்களாக, தோல்வியைக் கண்டு துவளாதவர்களாக இருப்பார்கள் என்றும் சில நூல்கள் விவரிக்கின்றன. அதேபோல், வருடத்தில் குறிப்பிட்ட தினங்களை அபிஜித் நட்சத்திரம் ஆதிக்கம் செலுத்தும் நாள்களாகச் சொல்வார்கள்.

அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.

உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி இந்த வேளையில் நல்ல செயல்களைத் தொடங்குங்கள்! புது முயற்சி தொடங்குதல், சொத்துக்கள் வாங்க கையெழுத்து போடுதல், வீடு குடிபோகுதல், பதவி ஏற்பு போன்றவைகளுக்கு அபிஜித் நட்சத்திர காலம் உகந்தது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

வரும் திங்கள் கிழமை மகாநவமி திருநாள். சரஸ்வதி பூஜை செய்ய வேண்டிய புனித தினம். அத்துடன் அபிஜித் நட்சத்திரம் ஆதிக்கம் நிறைந்த நாளாகவும் அமைகிறது. அபிஜித்தில் செய்யப்படும் காரியங்களுக்கு பன்மடங்கு பலன் உண்டு என்று பார்த்தோம் அல்லவா?

அந்த வகையில், அன்று தேவியைப் பூஜிப்பதால், பன்மடங்காகப் புண்ணிய பலன்கள் நமக்குக் கிடைக்கும். மறுநாள் விஜய தசமி. அதுவும் மகத்தான வெற்றியைக் கொடுக்கும் திருநாள். ஆகவே, இந்த இரண்டு புண்ணிய தினங்களிலும் அந்த மகாசக்தியை மனதார வணங்கி வழிபடுங்கள். நீங்கள் மனதில் நினைத்திருக்கும் புதிய முயற்சிகளை அன்று தொடங்குங்கள்.

நகைகள் வாங்குவது, சேமிப்புகளைத் தொடங்குவது, சொந்தவீடு- மனை வாங்குவது தொடர்பான முதல் முயற்சிகள், குழந்தைகளுக்குக் கல்வி ஆரம்பம், சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தை போன்ற எதுவாயினும்... அம்பாளை மனதார வணங்கித் தொடங்கலாம்.

அதேபோல் சொந்த வீடு வாங்கும் கனவில் இருப்பவர்கள், சுயமாகத் தொழில் செய்ய விரும்புவோர் அவற்றுக்கான முதல் முதலீடாகக் கருதி ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் முடிப்பில் வைத்து, பூஜையில் அம்பாளிடம் சமர்ப்பித்து வணங்குங்கள். விரைவில் நீங்கள் நினைத்தது நடக்கும். தொழிலில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். வெகுவிரைவில் சொந்த வீடும் அமையும்.

அரசாங்கம் தொடர்பான விஷயங்களுக்கு, உரிய விண்ணப்பங்களை அன்று பூர்த்தி செய்து வைக்கலாம். புது வேலைக்கான முயற்சிகளில் இருப்பவர்கள், வேலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்பலாம். வீட்டில் மங்கல காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளை பெரிய வர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பிக்கலாம்.

அம்பாளின் பூரண அருளும் அபிஜித் நட்சத்திர மகிமையும் இணைந்த இந்த சரஸ்வதி பூஜை திருநாள், உங்களுக்கு சகலவிதமான சந்தோஷத்தையும் வாரி வழங்கட்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.