``ஆம், ஆட்சி மாற்றம்தான் எங்கள் விருப்பம் - பிரசாந்த் பூஷண் அதிரடி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் உண்மையான நோக்கம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் என பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது.

தேர்தல் முறைகேடுகள், எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்டவைகளை முன்வைத்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகளும், CJP அமைப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா, CJP அமைப்பின் அபிரீத் தீப்கே ஆகியோருடன், சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களைச் சந்திதனர்.

பிரசாந்த் பூஷண்

அப்போது பேசிய பிரசாந்த் பூஷண், ``ஜனநாயக நாட்டில் ஒரு அரசுக்கு எதிராக அதிருப்தியைப் வெளிப்படுத்துவதும், தவறுகளுக்கு அரசை பொறுப்பேற்கச் சொல்வதும் குற்றமல்ல. எதிர்க்கட்சிகள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. நாங்கள் தற்போது தேர்தல்கள் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யவே போராடி வருகிறோம். ஆனால், இந்த வகையான அடக்குமுறைகளும், கொடூரங்களும் தொடர்ந்தால், நிச்சயமாக இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆமாம், நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தைத்தான் விரும்புகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?

பா.ஜ.க முன்னதாகப் பல போராட்டங்களை ஆட்சி மாற்றத்திற்காக நடத்தவில்லையா? ஆனால் இப்போது ஆட்சி மாற்றத்திற்கான சதி நடப்பதாகக் கூறுகிறார்கள். சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் இந்தப் போராட்டம், இப்போது ஆட்சி மாற்றத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது" என்று தெரிவித்தார்.


பிரசாந்த் பூஷனின் இந்த அறிவிப்புக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இன்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், `` போராட்டக் குழுக்கள் நாட்டின் இளைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வன்முறை அரசியலில் ஈடுபட வைக்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

பங்களாதேஷில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் ஒரே நோக்கம் அரசைக் கவிழ்ப்பதுதான் அவர்களின் நோக்கம். ஜனநாயகத்தைக் குழப்பத்திற்கோ, அரசியலமைப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குலைப்பதற்கோ அல்லது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தைத் தடுப்பதற்கோ இளைஞர்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை ராகுல் காந்தியும் அவரது தோழர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.