நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறது- அன்புமணி விமர்சனம்

சென்னையில் 1,000 ஏசி மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை ரத்து செய்த தமிழக அரசு, மறு நாளே ரத்து அறிவிப்பை திரும்ப பெற்றது.

"தவறுதலாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவற்றை வாபஸ் பெறுகிறோம். டெண்டருக்கான காலக்கெடுவை நவம்பர் 4 வரை நீட்டிக்க வேண்டும்" என, தேசிய தகவல் மையத்திற்கு (NIC), சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) கடிதமும் எழுதியிருக்கிறது.

இந்நிலையில் தவெக அரசை விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

வெற்றிப் பயணத் திட்டம் - முதல்வர் விஜய்

அதில், " சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு (MTC) 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காகக் கோரப்பட்ட டெண்டர் கடந்த புதன்கிழமை ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாளே அந்த ரத்து உத்தரவு திரும்பப்பெறப்பட்டு டெண்டர் செயல்முறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முரண்பாடான முடிவுகள், நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே காட்டுகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு 1,000 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டதால், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பின்னணியில், நிர்வாகக் காரணங்களால் டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு கடந்த புதன்கிழமை (14ஆம் தேதி) அறிவித்தது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இந்த ரத்து அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டது என்றும், அது திரும்பப்பெறப்பட்டு டெண்டர் செயல்முறை தொடரும் என்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் பின்னர் தெரிவித்தது.

தமிழக அரசு வெளியிட்ட ஒரு டெண்டர் அறிவிப்பு, அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. அரசின் எந்தவொரு முடிவும் பிரிவு அலுவலர்கள் முதல் இயக்குநர்கள் மற்றும் செயலாளர்கள் வரை பல நிலை அதிகாரிகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒரு தனிப்பட்ட அதிகாரி தவறு செய்யலாம், ஆனால் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் எவ்வாறு ஒரே தவறைச் செய்ய முடியும்? எனவே, டெண்டர் ரத்து செய்யப்பட்டதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகளைக் காரணம் காட்ட முடியாது. கொள்கை முடிவுகளை எடுப்பவர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

உலக வங்கியுடன் திமுக அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் கீழ், மொத்த செலவு ஒப்பந்தம் (GCC) மாதிரியின் படி மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நடவடிக்கை மாநகரப் போக்குவரத்து கழகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்பதால், பாட்டாளி மக்கள் கட்சி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த காரணத்திற்காகவே அரசு டெண்டர் செயல்முறையை ரத்து செய்திருந்தால், அந்த முடிவில் உறுதியாக இருந்திருக்க வேண்டும்; அதை மீண்டும் மாற்றியிருக்கக் கூடாது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு, அதன் அரசுப் பிரச்சனைகளைக் கவனமாக ஆராய்ந்து, தெளிவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, அவற்றில் உறுதியாக நிற்க வேண்டும். போதிய ஆலோசனையின்றி அவசர முடிவுகளை எடுத்து, உடனடியாக அவற்றை மாற்றுவது நிர்வாகத்தைப் பலப்படுத்தாது. இனிமேல் அனைத்து முடிவுகளும் முழுமையான ஆய்வுக்குப் பிறகே எடுக்கப்பட வேண்டும் என்றும், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.