``மாநிலத்தில் போட்டி, தேசிய அளவில் கூட்டணி சாத்தியமே - கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?

மாநில அளவில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டி நிலவினாலும், தேசிய அளவில் நாட்டின் நலன் கருதி ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கேரளாவில் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் மாநில அளவில் எதிரெதிர் துருவங்களாகப் போட்டியிட்டாலும், தேசிய அரசியலில் இணைந்து செயல்படுகின்றன. அரசியல் முதிர்ச்சியோடு அணுகினால் மாநில அளவில் போட்டியிட்டுக்கொண்டே, தேசிய அளவில் ஒத்துழைப்பை நல்க முடியும்.

ஸ்டாலின், ராகுல் காந்தி

அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட SIR நடவடிக்கை, ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான அனுபவமும் தாக்கமும் வெவ்வேறு விதமாக உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர்-ன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் அதன் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உணரப்படுகிறது. காங்கிரஸ் ஒரு அகில இந்தியக் கட்சி என்பதால், அனைத்து மாநில நிலவரங்களையும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளது. ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படும் மாநிலக் கட்சிகளுக்கு இதன் முழுமையான வீச்சு உடனடியாகப் புரிய வாய்ப்பில்லை.

அரசியலில் எந்தவொரு கட்சியும், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுபவர் கூடத் தான் தோற்கப்போவதாகக் கூறமாட்டார்கள். கடந்த 30 ஆண்டுகளாக நான் அரசியலில் பார்த்து வருகிறேன். அனைத்துக் கட்சிகளும், வேட்பாளர்களும் அடுத்த தேர்தலில் தாங்களே வெற்றி பெறப்போவதாகக் கூறுவது இயல்பான ஒன்றுதான். தமிழக முதலமைச்சரின் ஆந்திரப் பயணத்தின்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசக் கூடாது.

முதல்வர் விஜய் - சந்திரபாபு நாயுடு
முதல்வர் விஜய் - சந்திரபாபு நாயுடு

ஒரு மாநில முதலமைச்சர் மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும்போது ராஜதந்திர ரீதியாகவும் பரஸ்பர மரியாதையுடனும் வரவேற்பு அளிக்கப்படுவது இயல்பான நடைமுறை. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இங்கு வந்தாலும் இதே அளவிலான வரவேற்பு வழங்கப்படும். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிகள் இருக்கலாம். ஆனால், பக்கத்து மாநிலங்களுடன் நமக்கு எந்தப் பகையும் கிடையாது" என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.