‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் தாக்கம்: 400 குடும்பங்களுக்கு 3 மாத மளிகைப் பொருட்கள் வழங்கி அசத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா!

தென்னிந்தியத் திரையுலகில் தேசிய அளவில் புகழ்பெற்ற முன்னணி நாயகியாக வலம்வரும் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்படக் கதாபாத்திரங்கள் மூலம் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் பலரின் இதயங்களை வென்று வருகிறார். அந்த வகையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘ரணபலி’ படத்தில் தான் ஏற்று நடித்த ‘ஜெயம்மா’ கதாபாத்திரத்தின் ஆழமான தாக்கத்தால், அவர் செய்துள்ள ஒரு நெகிழ்ச்சியான உதவிகரமான செயல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
சினிமாவில் நாம் ஏற்று நடிக்கும் சில கதாபாத்திரங்கள் நம் நிஜ வாழ்க்கையையும் சிந்தனையையும் எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதை ராஷ்மிகா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். “ஜெயம்மாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று பலரும் கேட்கிறார்கள்; அதற்கு எனது பதில் ‘ஆம்’ என்பதுதான். இந்த உதவிகளை நான் இதுவரை ரகசியமாகவே செய்து வந்தேன். ஆனால், இந்தச் செயல் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணத்தை விதைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இப்போது இதை வெளிப்படையாகப் பகிர்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் கட்டமாக மொத்தம் 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ள ராஷ்மிகா மந்தனா, அவர்களுக்குத் தேவையான மூன்று மாத கால மளிகைப் பொருட்களை முழுமையாக வழங்கத் தொடங்கியுள்ளார். அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய இந்தத் தொகுப்பு, அந்தப் குடும்பங்களின் மாதச் சுமையை முற்றிலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தச் சேவையை அடுத்த ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து செயல்படுத்தி, அவர்கள் மளிகைப் பொருள் செலவுக்குச் சேமிக்கும் பணத்தை தங்களது எதிர்காலச் சேமிப்புக்கும் மேம்பாட்டிற்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
உதவி செய்வதற்கு மிகப்பெரிய தொகையோ அல்லது பிரம்மாண்டமான முயற்சிகளோ தேவையில்லை என்றும், ஒரு சிறிய கருணைக்கூட ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் ஆழமாக நம்புகிறார். சினிமா உலகில் தான் கடந்த ஆண்டுகளில் எதிர்கொண்ட படப்பிடிப்புச் சிரமங்கள், தூக்கமில்லாத இரவுகள், கடின உழைப்பு மற்றும் கண்ணீருக்கான உண்மையான பலனும் மகிழ்ச்சியும் இதுபோன்ற ஏழை எளியோரின் புன்னகையில் தான் அடங்கியுள்ளது என்பதை அவர் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களில் வெற்றிகரமான நாயகியாகத் தன் திறமையை நிரூபித்து வருவதோடு மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுடன் பல ஏழை எளிய குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வரும் ராஷ்மிகா மந்தனாவின் இந்த உயர்ந்த குணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது இந்த உன்னதச் செயல் மேலும் பலரை இதுபோன்ற நற்செயல்களில் ஈடுபடத் தூண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


