Jailer 2: அதை தவிர்த்துவிட்டு ஃபுல் மீல்ஸ் வாய்ப்புக்காக காத்திருந்தேன்! - எஸ்.ஜே. சூர்யா

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் நாளை ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த குழுவினர் இதிலும் தொடர, சில புதிய கதாபாத்திரங்களையும் இதில் இணைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரஜினியுடன் இணைந்து நடித்ததில் பெரும் மகிழ்ச்சியோடும் இருக்கிறார். படம் வெளியாகவிருக்கும் நிலையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா சினிமா விகடன் சேனலுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

Jailer 2

அவர் பேசுகையில், "திரையுலகிற்கு வரும் எந்தவொரு நடிகருக்கும் ரஜினி சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே மிகப்பெரிய கனவாக இருக்கும். அதை அடையும்போது ஏற்படும் சந்தோஷத்தையும் அனுபவத்தையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதை உணரத்தான் முடியும்.

இதற்கு முன்பே ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவை சிறிய கதாபாத்திரங்களாக இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.

ரஜினி சாருடன் நடிக்கும்போது நல்ல கதாபாத்திரமாக, ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்தப் பசிக்கான சரியான விருந்தாக ஜெயிலர் 2 அமைந்துள்ளது.

சினிமாவில் ஒரு நடிகர் புதுமுகமாக வரும்போது ரசிகர்கள் கொண்டாடுவார்கள். ஆனால், 5-வது படம் வரும்போதே பலர் காணாமல் போய்விடுவார்கள்.

50 பேர் வந்தால் அதில் 45 பேர் வாஷ் அவுட் ஆகிவிடுவார்கள். மீதி 5 பேர் தடுமாறி 5 ஆண்டுகள் பயணிப்பார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாகத் தன் சொந்த சாதனைகளைத் தானே முறியடித்து ரஜினி சார் வலம் வருவது அசாத்தியமானது.

அவர் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதும், அவர் நம்மிடம் நடித்துக் காட்டுவதும் ஒரு மாபெரும் அனுபவம். ஸ்பாட்டில் ஒரு நடிகராகவும், மனிதராகவும் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்.

SJ Suryah - Jailer 2
SJ Suryah - Jailer 2

எந்தப் பல்கலைக்கழகத்திலும் இதைக் கற்க முடியாது." என்றவர் இயக்குநர் நெல்சன் குறித்து, "இயக்குநர் நெல்சனிடம் ஒரு பெரிய அசாத்தியத் திறமை இருக்கிறது. எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக இயல்பாகச் செய்துவிடுவார்.

வெளியே மிகவும் கூலாகக் காணப்பட்டாலும், காட்சிக்குள் மிகப்பெரிய விஷயங்களை வைத்திருப்பார். ஒரு பஞ்ச் டயலாக் பேசுவதற்கு இணையான கெத்தை, ஒரு டிஷ்யூ பேப்பர் பாக்ஸைத் தள்ளி வைப்பதன் மூலம் அசால்ட்டாகக் கொண்டுவந்துவிடுவார்.

அவருடைய படத்தில் போதி கல்பக் என்கிற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். நெல்சன் சார் நம்மை இயக்கும்போது, ஒரு நடிகனாக நம்மை நாமே மறு உருவாக்கம் செய்துகொள்ள முடியும்.

ஒரு முறை, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சி 3-4 டேக்குகளுக்குப் பிறகு நெல்சன் சார் டேக் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் நான், சார், இன்னும் ஒரே ஒரு டேக் போகலாமா? எனக் கேட்டேன். உடனே ரஜினி சார் சிரித்துக்கொண்டே, என்ன சூர்யா, அவர் ஓகே சொல்வதே பெரிய விஷயம்.

நீங்க ஏன் ஒன் மோரா கேட்கிறீங்க? என்று கலாய்த்தார். ரஜினி சார் என்னைப் பார்த்து, நானும் ஒரு காலத்தில் உங்களைப் போலத்தான் வெறியோடு இருந்தேன், வெரி குட் சூர்யா! என்று பாராட்டவும் செய்தார்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.