FIR போட்டாலே குற்றவாளியா? – இந்த வார்த்தையைக் கேட்டாலே பயம் ஏன்? - சட்டம் சொல்வது என்ன? - 1

சினிமாவில் போலீஸ் அதிகாரி, "உன் மேல FIR போட்டாச்சு... இனிமே உன்னை யாராலேயும் காப்பாற்ற முடியாது!" என்று கடுமையான குரலில் மிரட்டுவதைப் பார்த்திருப்போம். அதனால் நம்மில் பலருக்கும் FIR என்றாலே ஏதோ நம் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஒரு பெரிய விஷயம் போலத் தோன்றும்.

ஆனால் உண்மையில் FIR என்பது அப்படியொரு அச்சமூட்டும் விஷயமா?

இல்லை! FIR (First Information Report) என்பது தண்டனை அல்ல. ஒரு குற்றம் தொடர்பாக காவல்துறைக்குக் கிடைக்கும் முதல் தகவல். அந்தத் தகவலை அடிப்படையாக வைத்துத்தான் அடுத்தகட்ட விசாரணை (Investigation) தொடங்கும். இதைக் கொஞ்சம் சிம்பிளாகப் பார்ப்போம்!

FIR போட்டாலே குற்றவாளியா?

முதலில் அந்தத் தவறான புரிதலைத் தூக்கிப் போடுங்க!

FIR என்பது யாரையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் ஆவணம் கிடையவே கிடையாது.

ஒரு “போலீஸ் வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றம் (Cognizable Offence) நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைக்கும்போது, அந்தத் தகவலின் அடிப்படையில் FIR பதிவு செய்யப்படுகிறது. அதாவது, FIR என்பது “குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்று அர்த்தமில்லை; அதிலும் முக்கியமாக, FIR பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதற்காக மட்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. FIR பதிவு செய்வதும், கைது செய்வதும் இரு வேறு சட்ட நடவடிக்கைகள். அது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்கான முதல் படி மட்டுமே. கைது செய்வதற்கும் சட்டத்தில் தனியான நிபந்தனைகள் உள்ளன.

AI Generated picture

அதேபோல், FIR பதிவு → கைது → குற்றப்பத்திரிகை → குற்றம் நிரூபித்தல் — இவை அனைத்தும் வெவ்வேறு கட்டங்கள். இறுதியில் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றம்தான்

“பாதிக்கப்பட்ட நான்தான் போகணுமா?” – யார் FIR கொடுக்கலாம்?

அப்படியெல்லாம் இல்லை!

பாதிக்கப்பட்டவர் மட்டும்தான் தகவல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சம்பவத்தை நேரில் பார்த்தவர் (Eyewitness), அல்லது அந்தக் சம்பவம் பற்றித் தகவல் தெரிந்த யார் வேண்டுமானாலும் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கலாம்.

"சார், ஒரு விஷயம் நடந்திருக்கிறது..." என்று நீங்கள் நேரில் சென்று வாய்மொழியாகவோ அல்லது மின்னணுத் தகவல் (Electronic Communication) மூலமாகவோ தெரிவிக்கலாம்.

நீங்கள் வாய்மொழியாகத் தரும் தகவலை போலீஸார் எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்து, அதை உங்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும்.

மேலும், பதிவு செய்யப்பட்ட FIR-ன் நகலை தகவல் அளித்தவருக்கோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ இலவசமாக வழங்க வேண்டும் என்பது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) பிரிவு 173(2) வழங்கும் முக்கியமான உரிமை.

“இது எங்க ஏரியா இல்ல. வேற ஸ்டேஷனுக்குப் போங்க!” – அப்படிச் சொல்ல முடியுமா?

இதுதான் நாம் மிக முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!

"இந்தச் சம்பவம் எங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை, அதனால் அங்கே போய் புகார் கொடுங்கள்" என்று சில நேரங்களில் போலீஸ் தரப்பில் உங்களைத் திருப்பியனுப்ப முயலலாம். ஆனால், சட்டம் அப்படிச் சொல்லவில்லை.

BNSS பிரிவு 173(1)-ன் படி, குற்றம் எங்கு வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும்; அந்தக் குற்றத்தின் இடத்தைப் பொருட்படுத்தாமல் , உங்களுக்கு அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் நீங்கள் புகார் அளித்து FIR பதிவு செய்ய முடியும். இதைத்தான் நடைமுறையில் Zero FIR என்று சொல்கிறோம்.

அதாவது, எந்தக் காவல் நிலையத்திற்குப் போவது என்ற குழப்பத்தால் புகார் கொடுப்பதோ அல்லது நீதி பெறுவதோ தாமதமாகக் கூடாது. எந்த ஸ்டேஷனில் தகவல் கொடுத்தாலும், அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு பின்னர் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்ட (Jurisdiction) காவல் நிலையத்துக்கு மாற்றி அனுப்பி வைப்பார்களே தவிர, "எங்கள் எல்லை இல்லை" என்று உங்களைத் திருப்பி அனுப்புவது சரியான நடைமுறை அல்ல!

“புகார் கொடுத்த உடனே FIR போடணுமா?” – உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

இங்கேதான் Lalita Kumari v. Government of Uttar Pradesh என்ற முக்கியமான வழக்கு வருகிறது.

இந்த வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றம், கொடுக்கப்பட்ட தகவலில் புலனாய்வு செய்யத்தக்க (cognizable offence) குற்றம் வெளிப்படையாகத் தெரிந்தால், FIR பதிவு செய்வது காவல்துறையின் கட்டாயக் கடமை என்று தெளிவுபடுத்தியது.

ஆனால், தற்போதைய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) பிரிவு 173(3)-ல் ஒரு குறிப்பிட்ட நடைமுறை இருக்கிறது. 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல், ஆனால் 7 ஆண்டுகளுக்குக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டுள்ள புலனாய்வு செய்யத்தக்க குற்றங்களில் (cognizable offence) , துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பதவிக்குக் குறையாத அதிகாரியின் முன் அனுமதியுடன், சட்டத்தில் சொல்லப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முதற்கட்ட விசாரணை (Preliminary Inquiry) நடத்தி, குற்ற முகாந்திரம் (Prima Facie Case) இருக்கிறதா என்று பார்க்கலாம். அந்த விசாரணையில் prima குற்ற முகாந்திரம் இருப்பது தெரிய வந்தால், அதன்படி அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.

AI Generated Picture

போலீஸ் FIR போட மறுத்தால்... அடுத்து என்ன?

அங்கேயே நின்றுவிட வேண்டியதில்லை. சட்டம் நமக்கு மாற்று வழிகளையும் தந்துள்ளது:

BNSS பிரிவு 173(4)-ன் கீழ், காவல் நிலைய அதிகாரி தகவலைப் பதிவு செய்ய மறுத்தால், அந்தத் தகவலின் சாரத்தை எழுத்துப்பூர்வமாகவும் தபால் மூலமாகவும் சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு (Superintendent of Police - SP) அனுப்பலாம்.

அங்கும் முறையான நடவடிக்கை கிடைக்கவில்லை என்றால், BNSS பிரிவு 175(3)-ன் கீழ் நேரடியாக நீதித்துறை நடுவரை (Magistrate) அணுகி, காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யலாம்.

FIR என்பது விழிப்புணர்வு, அச்சுறுத்தல் அல்ல!

FIR என்ற வார்த்தையைக் கண்டு இனி யாரும் குழப்பமடையத் தேவையில்லை. அது உங்களை முடக்குவதற்கானது அல்ல; மாறாக, உங்களுக்கேற்பட்ட ஒரு சிக்கலுக்கு நீதி கேட்டு, முறையான சட்ட நடவடிக்கை தொடங்குவதற்கான முதல் அஸ்திவாரம்.

எளிமையாகச் சொன்னால், FIR என்பது “இந்தத் தகவல் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்” என்பதற்கான சட்டப்பூர்வ தொடக்கம்.!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.