இயக்குநராவது குறித்து கனவில்கூட நினைத்ததில்லை - அமிதாப் பச்சன் சொல்லும் காரணம் என்ன?

பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கென நிலையான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். பாலிவுட்டில் அதிகமாக நடிகர்கள் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கம் மற்றும் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அமிதாப் பச்சன் ஒரு முறை திரைப்படத் தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து அதில் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தார்.

அதன் பிறகு படங்கள் தயாரிக்கும் வேலையைக் கைவிட்டுவிட்டார். அதோடு இதுவரை திரைப்படங்களை இயக்கும் வேலையிலும் அமிதாப் பச்சன் ஈடுபடவில்லை.

இது குறித்து தனது 84வது பிறந்தநாளையொட்டி அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில், திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், ஒரு திரைப்படத்தை இயக்கும் விஷயத்தைப் பற்றி ஒருபோதும் தீவிரமாகப் பரிசீலித்ததில்லை.

கேமராவிற்குப் பின்னால் நின்று படத்தை இயக்கும் அளவுக்கு திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களை ஆழமாக நான் புரிந்துகொள்ளவில்லை. என்னைச் பொறுத்தவரை, மற்ற படைப்பாளிகள் எனக்கு முன்வைக்கும் சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்வதே தனது பணி.

அமிதாப் பச்சன்

திரைப்படங்களை இயக்குவது பற்றி என்னால் கனவு கூட காண முடியாது. ஏனெனில், அந்தத் தொழில் நுட்பம் எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. மற்ற படைப்பாளிகள் எனக்குச் சவால்களைக் கொடுக்கிறார்கள். நான் அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். அவ்வளவுதான். படப்பிடிப்புத் தளத்தில் சில யோசனைகளை முன்வைப்பேன்.

ஆனால் இறுதி முடிவு எப்போதும் இயக்குநருடையதாக இருக்கும். அவரே முழு அதிகாரமும் கொண்டவர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் எனது கருத்துகளை நிராகரித்துவிடுவார்கள். மகிழ்ச்சியளிக்கும் விதமாக, அந்தப் படங்கள் நல்ல வெற்றியையும் பெற்றன. எனவே, எனது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்றே நான் கருதுவேன். மற்றபடி, என்னுடன் பணியாற்றிய அனைத்து இயக்குநர்களும் மிகவும் இணக்கமானவர்களாகவே இருந்தனர்.

நான் ஒருபோதும் பிடிவாதமான அல்லது ஒத்துழைக்காத நடிகர் என்று பெயர் எடுத்ததில்லை. இயக்குநரே கப்பலின் கேப்டன் என்று நம்புபவன் என்றார்.

படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அடிக்கடி செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அமிதாப்பச்சன் 1984-ல் அரசியலில் நுழைந்தபோது சிறிது காலம் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்தார். ஆனால், மீண்டும் திரையுலகிற்குத் திரும்பிய பிறகு, நடிப்பை விட்டுவிடுவதைப் பற்றி அவர் ஒருபோதும் சிந்தித்ததில்லை.

இது குறித்து அமிதாப்பச்சனிடம் கேட்டதற்கு, தான் ஓய்வு பெறுவதை மக்கள் ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். நான் ஏன் நடிப்பை கைவிடுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்? மக்கள் ஏன் என்னை வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்?" என்றும் கேட்டார்.

அத்துடன், நான் மரணத்தின் விளிம்பு வரை சென்று அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக யாரோ ஒருவர் என்னைப் பாதுகாத்து வந்திருக்கிறார்," என்றும் அவர் தெரிவித்தார். 2026ம் ஆண்டு நிலவரப்படி அமிதாப் பச்சனுக்கு 4 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.