காமராஜரின் நிர்வாக மாண்பு முதல் இன்றைய 110 அறிவிப்புகள் வரை! – தமிழ்நாடு சட்டமன்றத்தின் குரல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் என்பது, அம்மாநில மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும், நிம்மதிக்கும் வழி வகுக்கும் சட்டங்களை இயற்றுகின்ற புனித இடமாகப் பொலிவு பெற வேண்டும். நமது பிரதிநிதிகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒன்று கூடி, நாட்டுக்கு நலம் பயக்கும் விஷயங்களை விவாதித்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 174(1)-ன் படி, ஒரு கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையேயான காலம் ஆறு மாதத்திற்குள்தான் இருக்க வேண்டும்.

சட்டத்தை வகுத்த வல்லுனர்கள் எவ்வளவு எச்சரிக்கையாகவும் துல்லியமாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

சட்டமன்றம்

நமது அரசியலமைப்பின் 208(1) பிரிவின்படிதான் தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 22 அத்தியாயங்களின் கீழ் 292 விதிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றியே அவை உறுப்பினர்கள் செயல்பட வேண்டும். விதி எண் 110-ம் அவற்றில் ஒன்று.

இந்தச் சிறப்பு விதியின் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர அறிவிப்புகளை, துறை அமைச்சரோ, முதல்வரோ, சபாநாயகரின் அனுமதி பெற்று வெளியிடலாம். அவசரம் என்பதால், கால தாமதத்தைத் தடுப்பதற்காக, விவாதங்களிலிருந்து அவை விலக்கு பெறும். ஆனாலும் நடைமுறைக்கு வரும் தேதி போன்ற விபரங்களை சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்க வேண்டும். இது ஒரு சிறப்பு விதி. அவசரகால பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளுக்கு மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்வது மிக முக்கியம்.

அனைத்து உறுப்பினர்களையும் கூட்டி, கூட்டத்தொடர் நடத்துவதன் நோக்கம், நாட்டின் கடைக்கோடி உறுப்பினரும் தன் தொகுதிக்கான தேவைகளை எடுத்துரைக்கவும், அது குறித்த விவாதங்களை மேற்கொண்டு ஒரு தெளிவான முடிவுக்கு வரவும்தான். ஒரு பொருள் குறித்த விவாதத்தின் போதுதான் அதன் சாதக, பாதகங்கள் தெரிய வரும். கிராமங்களில் கூறுவது போல, 234 பேர்களின் கருத்துக்கள் எதிரொலிக்கும் இடம்தான் நமது சட்டமன்றம்.

சரியான விவாதத்திற்கு நேரம் ஒதுக்கிச் செயல்பட்டால், எந்த ஒரு திட்டம் குறித்த நல்லதும் கெட்டதும் விரிவாகவே தெரிந்துவிடும். ஏற்புடைய திட்டம் என்று தெரிந்த பிறகு அது அறிவிக்கப்படுமானால், மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள், ஒத்துழைப்பை நல்குவார்கள். சிரமமின்றித் திட்டம் சிறப்பாக நிறைவேறும்.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

ஆனால் நடைமுறையில் நடப்பது என்னவென்றால், அமைச்சர்களுக்குக் கூட போதிய உரிமை வழங்கப்படாமல், எல்லாவித அறிவிப்புகளையும் முதலமைச்சர்களே விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பது ஏற்புடையதல்ல.

இதன் மூலம் அந்த விதியின் சிறப்புத் தன்மையே மழுங்கடிக்கப்படுகிறது. அமைச்சர்களின் பொறுப்பு குறைக்கப்பட்டு, அவர்களைப் பொம்மைகளைப் போல மாற்றும் சூழல் உருவாகிறது. ஆட்சியாளர்கள் விதி எண் 110-ஐயே எப்பொழுதும் பிடித்துக் கொண்டு தொங்குவது விவாதங்களைத் தவிர்க்கத்தானா என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் மக்களாட்சித் தத்துவமே அடிபட்டுப் போகிறது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த விதி எண் 110, இப்போது விரிவடைந்து பெரும்பாலான அறிவிப்புகள் இதன் கீழேயே வெளியிடப்படுகின்றன.

2011 முதல் 2016 வரையிலான கால கட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் 110 விதியின் கீழ் செய்த அறிவிப்புகளின் எண்ணிக்கை 181 என்று விபரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் தோராய மதிப்பு ரூபாய் 1,72,196 கோடி என்றும் அவை கூறுகின்றன. அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அடுத்த முதல்வர் 453 அறிவிப்புகளை விதி எண் 110-ன் மூலமே அறிவித்தார். சுமார் 3.27 லட்சம் கோடி அளவிலான 1704 பணிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரூபாய் 87 கோடி மதிப்பிலான 1167 பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. மற்ற முதல்வர்களும் 110-ஐப் பயன்படுத்தியிருந்தாலும், இவர்கள் அளவுக்கு பயன்படுத்தவில்லை.

காமராஜர்
காமராஜர்

தற்போதைய அரசு பல எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், மக்கள் வெளிப்படையான விவாதங்களை விரும்புகிறார்கள். இதனால் விதி எண் 110-க்கு சற்றே ஓய்வளிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். தற்போதைய முதல்வர் சுமார் 18 அறிவிப்புகளை விதி எண் 110-ன் கீழ் செய்துள்ளதாகவும், அது 30-க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்த செய்திகள் என்றும் கூறப்படுகிறது. இனிமேலாவது நடைபெறும் சட்டமன்றக் கூட்டங்களில், திட்டங்கள் குறித்த நல்ல விவாதங்கள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படுமானால், நல்ல அரசுக்கான சான்றிதழை மக்கள் அளிப்பார்கள்.

இப்பொழுதோ தகவல் தொழில்நுட்பத்துறை மகத்தான வளர்ச்சியை எட்டியுள்ளது. கர்மவீரர் காமராஜர் காலத்தில் இவ்வளவு வசதிகள் இருந்ததில்லை. இருப்பினும் அவர் குறையின்றி அனைத்தையும் செய்தார். ஓரிரவில் வைரவன் பல கோப்புகளைத் தலைவரின் கையெழுத்துக்காக வைத்திருந்தார். காலையில் பார்த்தால், உயர் அதிகாரிகளின் உயர் பதவி மற்றும் இடமாற்றம் தொடர்பான சில கோப்புகள் மட்டும் கையெழுத்தாகி இருந்தன.

ஓய்வாக இருந்த நேரத்தில், அவற்றை மட்டும் ஏன் அவசரமாக முடித்தீர்கள் என்று வைரவன் கேட்டபோது, தலைவர் கூறிய பதில் சிந்திக்கத்தக்கது. இந்தக் கோப்புகள், கையெழுத்தான தேதியிலிருந்து தனி மனிதர்களுக்குப் பயன் தரக்கூடியவை. எந்த ஒரு தனி மனிதரும் நமது நிர்வாகத் தாமதத்தால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.

திட்டக் கோப்பில் உடனே கையெழுத்துப் போட்டாலும், பலன் பயனாளியைச் சென்றடையச் சில நாட்களாவது ஆகிவிடும், நம் அமைப்பு அப்படிப்பட்டது, ஆகவேதான் அவற்றை உடனடியாக முடித்தேன் என்றார். அவரின் இந்த நிர்வாக மாண்பு என்றும் போற்றத்தக்கது.

-ரெ.ஆத்மநாதன், புளோரிடா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.