சமூகத் தடைகளை உடைத்து சாதித்த பெண் சிங்கம்! – இந்தியப் பெண் சமூகத்தின் விடியல்

பெண்கள் உயர்கல்வி பெறுவதும், மருத்துவம் பயில்வதும் அரிதாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பல்வேறு சமூகத் தடைகளை எதிர்கொண்டு கடந்து, மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பெண் கல்வி, பெண் தொழிலாளர் நலம், சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றிலும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மருத்துவர் கடம்பினி போஸ் 18 ஜூலை 1861 அன்று, தற்போதைய வங்காளதேசத்தில் உள்ள பாகல்பூர் (பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காள மாகாணம்) என்ற இடத்தில் பிறந்தார். இவரது பூர்வீகக் குடும்பம் தற்போதைய வங்காளதேசத்தின் பரிசால் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தகரி என்ற கிராமத்தை சேர்ந்ததாகும்.

பெண்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த கடம்பினியின் தந்தை பிரஜகிஷோர் போஸ், பாகலூரில் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றியதுடன், பிரம்ம சமாஜ இயக்கத்தின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட சமூகச் சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். கடம்பினியின் தொடக்கக் கல்வி டாக்காவில் அமைந்திருந்த பிரம்ம ஏடன் பெண்கள் பள்ளியில் தொடங்கியது.

பின்னொரு காலத்தில் பங்கா மகிளா வித்யாலயா என்று பெயர் மாற்றப்பட்டு, பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்ட கொல்கத்தா இந்து மகிளா வித்யாலயாவில் தனது பள்ளிக் கல்வியை தொடர்ந்தார்.

பெண்கள் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதுவதற்கே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலத்தில், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வை எழுதி 1878-ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியப் பெண்மணியாக கடம்பினி வரலாற்றில் இடம்பிடித்தார். பெத்தூன் கல்லூரியில் உயர்கல்வியைப் பயின்றார். 1883-ஆம் ஆண்டு சந்திரமுகி பாசுவுடன் இணைந்து இளங்கலை பட்டம் பெற்றார். இதன் மூலம் கடம்பினி போஸும் சந்திரமுகி பாசுவும் இந்தியாவின் மற்றும் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகள் என்ற உலகளாவிய சாதனையைப் படைத்தனர்.

கடம்பினியின் கல்வித் திறனை ஆரம்பத்திலேயே உணர்ந்த சமூகச் சீர்திருத்தவாதியான துவாரகநாத் கங்குலி,  கடம்பினி உயர்கல்வி பெறுவதற்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை எழுதுவதற்கும் தொடர்ந்து ஆதரவளித்தார்.

1883 ஜூன் 12 அன்று ஏற்கெனவே திருமணம் செய்து மனைவியை இழந்திருந்த துவாரகநாத்தை, அக்கால சமூகச் சூழல் பெரும் எதிர்ப்பையும் மீறி கடம்பினி திருமணம் செய்து கொண்டார். துவாரகநாத் துணையுடன் திருமணத்திற்குப் பிறகும் கடம்பினியின் கல்விப் பயணம் தொடர்ந்தது. ஆண்கள் பெரும்பான்மையாக இருந்த கல்விச் சூழலில் அவர் பாலினப் பாகுபாட்டையும் கல்விசார் தடைகளையும் எதிர்கொண்டார். அவரது மருத்துவத் தகுதி தொடர்பாகவும் எதிர்ப்புகள் எழுந்தன. 

கடம்பினி காலத்தில் மருத்துவ கல்வியில் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணிபுரிய இங்கிலாந்தில் எல்.ஆர்.சி.பி (LRCP-Licentiate of the Royal College of Physicians), எல்.ஆர்.சி.எஸ் (LRCS-Licentiate of the Royal College of Surgeons), எல்.ஆர்.எஃப்.பி.எஸ் (LRFPS-Licentiate of the Royal Faculty of Physicians and Surgeons) ஆகிய மூன்று சான்றிதழ்களை உள்ளடக்கிய மும்மைத் தகுதி பெற வேண்டும்.

எல்.ஆர்.சி.பி என்பது ராயல் கல்லூரியின் மருத்துவர் தகுதிச் சான்றையும், எல்.ஆர்.சி.எஸ் என்பது ராயல் கல்லூரியின் அறுவை மருத்துவர் தகுதிச் சான்றையும், எல்.ஆர்.எஃப்.பி.எஸ் என்பது ராயல் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் அறுவை மருத்துவர்கள் பேரவையின் தகுதிச் சான்றையும் குறிக்கின்றன. 1892-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சென்ற கடம்பினி எடின்பரோ, கிளாஸ்கோ, டப்ளினிலிருந்து மருத்துவ மும்மைத் தகுதி சான்றிதழ்களைப் பெற்று இந்தியா திரும்பினார். அக்காலத்தில் இந்தியப் பெண் ஒருவர் இங்கிலாந்து சென்று மருத்துவத் தகுதிகளைப் பெற்று வருவது மிகப்பெரிய சாதனையாகும். 

1892-ஆம் ஆண்டில் உயர்கல்விக்காக லண்டனுக்கு சென்றபோது, இந்திய உணவு கிடைக்காததால், கடம்பினி கப்பல் சமையலறைக்கே சென்று சக இந்தியப் பயணிகளுக்காகத் தன் கைகளால் சுவையான உணவைச் சமைத்துப் பரிமாறினார் என அக்கப்பலில் அவருடன் பயணித்த இந்திய வேதியியலின் தந்தை ஆச்சார்யா பிரபுல்ல சந்திர ராய் (பி.சி. ராய்) தனது சுயசரிதையில் வியந்து எழுதியுள்ளார். 


உலகப் புகழ்பெற்ற செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது தோழி ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், "இந்த இளம் இந்தியப் பெண் (கடம்பினி) ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்குத் தாய். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தனது பிரசவத்திற்குப் பிறகு வெறும் 13 நாட்களிலேயே மீண்டும் கல்லூரி வகுப்புகளுக்கு வரத் தொடங்கிவிட்டார். ஒரு வகுப்பைக்கூட அவர் தவறவிடவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா திரும்பிய பின்னர் கடம்பினி, கொல்கத்தாவில் உள்ள லேடி டஃபெரின் மகளிர் மருத்துவமனையில் பணியாற்றினார். அங்கு பெண்களுக்கு மருத்துவச் சேவை வழங்கியதுடன், தனிப்பட்ட மருத்துவப் பணியையும் மேற்கொண்டார்.

1895-ஆம் ஆண்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்க நேபாள அரச குடும்பத்திலிருந்து கடம்பினிக்கு அழைப்பு வந்தது. அரச குடும்பப் பெண்களுக்கு ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதில் சமூகக் கட்டுப்பாடுகள் இருந்த அக்காலத்தில், ஒரு இந்தியப் பெண் மருத்துவர் அரச குடும்பத்திற்காக அழைக்கப்பட்டிருப்பது அவரது மருத்துவப் புகழுக்குக் கிடைத்த முக்கியமான அங்கீகாரமாகும்.

1922-ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் பணிச்சூழல் குறித்து ஆய்வு செய்த அரசாங்கக் குழுவில் அவர் பங்கேற்றார். சுரங்கத் தொழிலில் பெண்கள் எதிர்கொண்ட கடுமையான பணிச்சூழல், உடல்நலப் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தி, அவர்களின் நலனுக்கான மாற்றங்கள் தேவை என்பதை வலியுறுத்தினார். 1889-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் பங்கேற்ற ஆரம்பகாலப் பெண் பிரதிநிதிகளில் ஒருவராகவும் கடம்பினி விளங்கினார். 

துவாரகநாத் கங்குலியின் முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் தனக்கு பிறந்த குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் எட்டு குழந்தைகளை வளர்த்தெடுத்தார். இங்கிலாந்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்குள்ள பாரம்பரிய டாட்லி லேஸ் என்ற மிக நுணுக்கமான ஆடை வடிவமைப்பு கலையைக் கற்றுக் கொண்டார். கொல்கத்தா திரும்பிய பிறகும், தனது ஓய்வு நேரங்களில் தன் குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகளை அவரே அழகிய வேலைப்பாடுகளுடன் தைத்துத் தருவார்.

கடம்பினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் 1898-ஆம் ஆண்டு துவாரகநாத் கங்குலியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. டாக்டர் கடம்பினி கங்குலி தனது வாழ்நாளின் இறுதி நாள் வரை மருத்துவச் சேவையை நிறுத்தவில்லை. 1923 அக்டோபர் 3 அன்று, தனது 62-வது வயதில், ஒரு நோயாளிக்குக் கடுமையான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பினார். வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. தன் கடைசி மூச்சு வரை ஒரு மருத்துவராகவே வாழ்ந்து மறைந்த கடம்பினி கங்குலி, இந்தியப் பெண் சமூகத்தின் விடியலாகக் கருதப்படுகிறார்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.