மயிலாடுதுறை: யாசகம் பெற்ற பணத்தில் நிவாரண நிதி வழங்கிய முதியவர் - நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த முதியவர் ஒருவர் தான் தர்மமாக பெற்ற ரூ.10 ஆயிரம் பணத்தை கல்வி வளர்ச்சிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கிய செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு இதுவரை சுமார் ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட முதியவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 75 வயதான பூல்பாண்டியன் என்ற முதியவர் வந்துள்ளார். இவர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் கல்வி வளர்சிக்கு பயன்படுத்த முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கினார். இதையடுத்து, பணத்தை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சான்று அவருக்கு வழங்கப்பட்டது.
அப்போது தான் யாசகம் பெற்று வருவதாகவும் அதில் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து இதுபோல் கல்வி வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு நிதி வழங்குவதாகவும் கூறியுள்ளார். பூல்பாண்டியன் செயலால் நெகிழ்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அவரை மனதார பாராட்டினார். இந்த சம்பவம் குறைதீர் கூட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து முதியவர் பூல்பாண்டியன் பேசுகையில், ``மும்பையில் தங்கியிருந்த நான் அங்கு சமூக சேவை செய்து வந்தேன்.

இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தேன். அப்போது முதல் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தேவைக்காக நிதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான உபகரணங்கள், கேமராக்கள் போன்ற கல்விக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வருகிறேன். கொரோனா பரவலின் போதும் பொது நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்துள்ளேன்.
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காகச் சுமார் ரூ.1.60 கோடி வரை வழங்கியுள்ளேன். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைத் தொடர்ந்து, முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கினேன்" என்றார். இவரது செயலை அறிந்த பலரும் நெகிழ்ச்சியடைந்து அவரை வாழ்த்தினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


