“சோதனை காலகட்டத்தில் அன்புமணிக்கு உறுதுணையாக நின்றது அதிமுக!” - அக்ரி கிருஷ்ண மூர்த்தி பேட்டி
55-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க, இடைத்தேர்தலில் சிட்டிங் தொகுதிகள் இரண்டையும் த.வெ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதையடுத்து, மீண்டும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியிலுள்ள அதிருப்தியாளர்கள் ஆலோசனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்....
"இடைத்தேர்தலில், அ.தி.மு.க தோல்வியுற்றதற்கான காரணம் என்ன?"
"இதை நாங்கள் தோல்வியாகவே பார்க்கவில்லை. ஏனெனில், ஜனநாயகத்தை பண நாயகம் வென்றிருக்கிறது. நாங்கள்தான் தூயசக்தி; எந்தவிதமான தவறும் செய்யமாட்டோம் என்று நீட்டி முழக்கிவந்த ஆளுங்கட்சியினர், இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரியிறைத்துத்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
பணபலம், படைபலம், அதிகார பலம், ஆட்சி பலம், ஆள் பலம், அமைச்சர்கள் பலம் என அத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எங்கள் கட்சிக்கென்று இருக்கக்கூடிய வாக்குகளை நாங்கள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வாங்கியிருக்கிறோம்.
ஆனால், வி.சி.க., ஐ.யு.எம்.எல்., காங்கிரஸ், ம.தி.மு.க., த.மா.கா என பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தயவோடும் ஆட்சி அதிகாரத்தோடுதான் த.வெ.க இந்த தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறது."
"த.வெ.க வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளின் பலம் என்றால், அ.தி.மு.க தோல்விக்கு கூட்டணியிலிருந்த பா.ம.க விலகி நின்றதுதான் காரணமா?"
"இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பங்குபெறவில்லை; நடுநிலை வகிக்கிறோம் என பா.ம.க சொல்லிவிட்டது. இந்த நிலையில் களத்தில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை!"
"ஆனால், தோல்வி குறித்து அ.தி.மு.க தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் சொல்கிறாரே?"
"எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் நலனுக்காகவும், தொண்டர்களின் நலனுக்காகவுமான முடிவுகளைத்தான் எடுப்பார். அதில் எத்தனை சோதனைகள் பாதிப்புகள் வந்தாலும்கூட தான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார். அதுபோல், தன்னுடைய சுய லாபத்துக்காகவும் ஒருபோதும் அவர் முடிவுகள் எடுக்கமாட்டார். இந்த சூழலில், சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அன்புமணி எங்களை அறிவுறுத்தியிருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரையிலும் மருத்துவர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையிலான பிரச்னைகள் நீடித்துவந்தபோது, அன்புமணிக்கு உரிய ஆலோசனைகள் கூறியவர் எங்கள் பொதுச்செயலாளர்தான். சோதனையான அந்த காலகட்டத்தில் அவரை எங்கள் கூட்டணியில் இணைத்துக்கொண்டு, ஒரு ராஜ்யசபா உறுப்பினர், 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடங்களையும் கொடுத்து அவருக்கு உறுதுணையாகவும் நாங்கள்தான் நின்றோம். இன்றைக்கும் அவரை நாங்கள் மதிக்கின்றோம்."
" நடுநிலை என்ற பெயரில் அன்புமணி செய்த வஞ்சகம்தான் அ.தி.மு.க-வுக்கு பெரும் இழப்பாகிவிட்டது என்கிறாரே டாக்டர் கிருஷ்ணசாமி?"
"அது அன்புமணி ராமதாஸின் முடிவு. அதைப்பற்றி நாங்கள் எதுவும் கருத்து சொல்லமுடியாது. அதேசமயம் கூட்டணிக் கட்சிகளுக்கு எப்போதுமே உரிய மரியாதை கொடுக்கும் கட்சி அ.தி.மு.க."
"எடப்பாடி பழனிசாமி எடுக்கிற முடிவுகள் தொடர்ந்து அ.தி.மு.க-வின் தோல்விக்குத்தான் வித்திடுகிறது என்று கட்சியிலுள்ளவர்களே அதிருப்தியாகிறார்கள்தானே?"
"அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக பணிபுரிவதற்கான வாய்ப்பை 2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் வழங்கியிருந்தனர் மக்கள். அந்த முடிவை ஏற்று எங்கள் பொதுச்செயலாளர் பணிபுரியக் காத்திருந்தபோது, கட்சியிலுள்ள ஒருசிலர் இந்த முடிவுக்கு எதிராக ஒருசில முடிவுகளை எடுத்தனர். அதைத் தவறு என்று சுட்டிக் காட்டினார் எங்கள் பொதுச்செயலாளர். ஆனால் அவர்களோ கேட்கவில்லை.
இதையடுத்து, கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் அறிவித்தார். ஆனால், அதன்பிறகு சம்பந்தப்பட்டவர்களே தங்களை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டதால், பொதுச்செயலாளரும் பெரிய மனதுடன் மன்னித்து சம்பந்தப்பட்டவர்களின் பதவி பாதிக்கப்படாதவாறு உரிய பாதுகாப்பும் கொடுத்தார். இதுதான் நடந்த உண்மை."
"கட்சியில் சர்வாதிகாரத்தன்மையுடன் முடிவுகளை எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்ற அதிருப்தியாளர்கள் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுக்கிறீர்களா?"
"ஒரு முடிவை எடுக்கும் முன்பு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு அந்தக் கருத்துகளின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி முடிவுகளை அறிவிக்கிறார்.
"கட்சியின் நலனுக்கான முடிவை எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் எடுக்கிறார். ஆனால் கட்சியிலுள்ள ஒருசிலரின் எதிர்பார்ப்புகளுக்கு அந்த முடிவுகள் ஏற்புடையதாக இல்லை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கட்சியிலுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் பொதுச்செயலாளரின் முடிவுகளை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.
கட்சியிலுள்ள ஒருசிலருக்கு பதவி ஆசை இருக்கலாம்; அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். அதற்காக கட்சியின் நலனைப் பலிகடாவாக்க எங்கள் பொதுச்செயலாளர் விரும்பவில்லை!"
"கட்சியின் நலனுக்கான முடிவை எடப்பாடி எடுக்கிறார் என்றால், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏன் தவிர்க்கிறார்?"
"கட்சியின் பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று கட்சியில் யார் இணைந்தாலும் அவர்களை வரவேற்று செயல்படத் தயாராக இருப்பதாகத்தான் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லிவருகிறார்.

தவறிழைத்து கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களைக்கூட, திரும்பவும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும்போது அமைப்பு செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என பல்வேறு பொறுப்புகளைக் கொடுத்து ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களுக்கு அவர்களே தலைமை ஏற்று நடத்தும் விதத்தில் அரவணைத்துச் செல்கிறவர் எங்கள் பொதுச்செயலாளர்!"
"அப்படியென்றால், வி.கே.சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள மட்டும் ஏன் தயக்கம்?"
"டி.டி.வி தினகரன் ஏற்கெனவே அ.ம.மு.க பொதுச்செயலாளராக இருந்துவருகிறார். இப்போதும் அவர் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார். இதுபோன்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போதும்கூட அ.தி.மு.க-வும் நாங்களும் ஒன்றாகத்தானே இருக்கிறோம். எங்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை என்றுதான் பதிலளிக்கிறார் டி.டி.வி தினகரன்.
ஒரு காலத்தில், டி.டி.வி தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களே இப்போது இதுகுறித்தான கேள்வியையும் கட்சிக்குள்ளிருந்தே ஒருசிலர் எழுப்புகிறார்கள். அவர்களை அதிருப்தியாளர்கள் என்றோ எதிர்ப்பாளர்கள் என்றோ நாங்கள் சொல்லமாட்டோம். அவர்களது ஆசையை சொல்கிறார்கள். அதேசமயம், கட்சியின் நலன் கருதி யாரை கட்சியில் இணைக்கவேண்டும் என்பதையெல்லாம் எங்கள் பொதுச்செயலாளர்தான் முடிவெடுப்பார்."
"ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு அ.தி.மு.க தொடர் தோல்விகளைச் சந்தித்துவருவது உண்மைதானே?"
"இல்லை... இப்படியொரு கருத்தாக்கம் திட்டமிட்டு பரப்பப்படுகிற சதி. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1977, 1980, 1984 என தொடர்ந்து மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க தோல்வியைத்தான் தழுவியது. மீண்டும் 1989-ல்தான் தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கே வந்தது. ஆனால், 1991-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு தி.மு.க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே தி.மு.க மீண்டும் 1996-ல் ஆட்சிக்கு வந்தது.
ஆக, இப்படி பல்வேறு தோல்விகளைச் சந்தித்த தி.மு.க ஆட்சிக்கு வரமுடியும் எனில், அ.தி.மு.க-வும் ஆட்சிக்கு வரமுடியும்!"
"ஏற்கெனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்றிருந்த (தாராபுரம், மதுராந்தகம்) தொகுதிகளில்கூட அ.தி.மு.க இப்போது மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது கட்சிக்குப் பெரும் பின்னடைவுதானே?"
"ஜனநாயகத்தைப் பண நாயகம் வென்றுவிட்டது. ஜெயலலிதா தலைமையேற்றிருந்தபோதே, 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெறுமனே 4 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. பென்னாகரம் இடைத்தேர்தலில்கூட நாங்கள் டெபாசிட் இழந்தோம். ஆனால், அதே ஜெயலலிதா தொண்டர்களின் பலத்தோடு கடுமையாக உழைத்து, மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராக வரவில்லையா என்ன!

ஆக, அதே அடிப்படையில் வரவிருக்கிற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும்."
"ஜனநாயகம் பணநாயகம் என காரணம் சொல்கிறீர்கள். ஆனால், தாராபுரம், மதுராந்தகம் என இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டதே?"
"ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டதுதான் உண்மை. எனவே தி.மு.க-வும் இதே பாணியைக் கையாண்டு இந்த இடத்தைப் பிடித்திருக்கலாம்!"
"55-வது ஆண்டுவிழாவை அ.தி.மு.க கொண்டாடிவரும் நேரத்தில், இடைத்தேர்தல் தோல்வி என்பது மீண்டும் தலைமைக்கு எதிரான மனநிலையை கட்சிக்குள் உருவாக்கிவிட்டதே?"
"அப்படியில்லை... ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.க-வுக்கென்று 26% வாக்குகள் நிரந்தரமாக இருக்கின்றன. இந்த நிலையில் ஆளுங்கட்சியின் பல்வேறு ஆசை வார்த்தைகள், பொய்யான வாக்குறுதிகளுக்கு மத்தியிலும் எங்களுக்கான 26% வாக்கினை இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பெற்றிருக்கிறோம்.
த.வெ.க தலைவர் விஜய்தான், ஹெலிகாப்டரில் வந்திறங்கி, டிராக்டர் ஓட்டி, முருங்கைக்காய் - எலுமிச்சங்காய் பறித்து என பல்வேறு வித்தைகளைக் காட்டி தற்காலிகமான மாயை வெற்றியைப் பெற்றிருக்கிறார். எனவே பொதுச்செயலாளருக்கு எதிரான மனநிலை என்று எதுவும் கட்சிக்குள் இல்லை!"
"அடுத்து நடைபெறவிருக்கிற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிக்காக என்ன வியூகம் வகுத்துள்ளது அ.தி.மு.க?"
"அ.தி.மு.க வெற்றிக்காக, எங்கள் பொதுச்செயலாளர் சில முக்கிய நடவடிக்கைகளை எடுப்பார். அரசியல் வியூகங்களை வகுப்பார். அதன்படி அ.தி.மு.க நிச்சயமாக வெற்றி பெறும்!"

"நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கட்சிப்பணி செய்யாத சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறீர்களா?"
"கட்சிக்காக எல்லோருமே வேலை செய்தார்கள். யாரும் வேலை செய்யவில்லை என்பதுபோன்ற கருத்து எங்கேயும் எழவில்லை. எனவே, கட்சியை எதிர்த்து யாரும் வேலை செய்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் கேள்விப்பட்டது உண்மையும் அல்ல!"
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


