சேலம்: மங்கி குல்லா கும்பலின் வெள்ளி குடோன் ஸ்கெட்ச் - ₹15 கோடி மதிப்புள்ள 600 கிலோ வெள்ளி திருட்டு!
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி அருகில் உள்ள சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். வெள்ளி வணிகம் செய்து வந்த இவர், வெள்ளிக் கட்டிகளில் இருந்து பொருள்களை உற்பத்தி செய்யும் வெள்ளி பட்டறையை சொந்தமாக நடத்தி வருகிறார். அந்தப் பட்டறைகளில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி பொருள்கள்களை குடோனில் இருப்பு வைத்து வந்திருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக வணிகத்தை முடித்துவிட்டு பூட்டிச் சென்றிருக்கிறார். மங்கி கேப் எனப்படும் குரங்கு குல்லாக்களை அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, காவலாளியைத் தாக்கி கட்டி வைத்து விட்டு சி.சி.டி.வி கேமிராக்களை சேதப்படுத்தி வெள்ளிப் பட்டறைக்குள் நுழைந்திருக்கிறது. பட்டறை, குடோன், கடை என ஒட்டுமொத்த வெள்ளியையும் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ வெள்ளியை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.
இதன் பின்னணி குறித்து தெரிவித்த பள்ளப்பட்டி காவல்துறையினர், " வெள்ளி உற்பத்தியை நாள் கணக்கில் நோட்டம் விட்ட 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். தீபாவளி விற்பனைக்காக குடோனில் அதிக அளவில் வெள்ளி இருப்பதை தெரிந்து கொண்டு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்கள். வெள்ளிக்கட்டிகளை மொத்தமாக மூட்டைக்கட்டிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த காவலாளி சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாநகர காவல் ஆணையர் நேரில் வந்து ஆய்வு செய்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார்கள்" என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


