வெவ்வேறு பயணங்கள், ஒரே கலைப் பார்வை: லலித் கலா அகாடமியில் ‘AURAE – ELEMENTAL’ கண்காட்சி!
சென்னை: வண்ணங்களால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள், கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், வரலாற்றையும் பண்பாட்டையும் நினைவூட்டும் படைப்புகள் எனப் பல்வேறு கலை வடிவங்கள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில், சென்னையில் ‘AURAE – ELEMENTAL Group Art Show 2026’ கலைக் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை லலித் கலா அகாடமியில் அக்டோபர் 9 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், பல்வேறு கலைஞர்களின் தனித்துவமான படைப்புகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ‘Different Journeys, One Artistic Vision’ — வெவ்வேறு பயணங்கள், ஒரே கலைப் பார்வை என்ற கருத்தை மையமாகக் கொண்டு இக்கண்காட்சி நடைபெறுகிறது.
கலைஞர்களின் படைப்பாற்றலையும் கலை வெளிப்பாட்டின் பல்வேறு சாத்தியங்களையும் ஒரே தளத்தில் கொண்டுவரும் முயற்சியாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.
ஓவியம் மற்றும் சிற்பத்தின் காட்சி அமைப்பு!
கண்காட்சி அரங்கிற்குள் நுழைந்தவுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பவையாக, வெவ்வேறு வண்ணங்களில் மற்றும் பாணிகளில் ஓவியங்கள், சிற்பங்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தது.
கண்காட்சியில் காணப்பட்ட ஒரு சிற்பம், உலோக வாஷர்கள், நட்டுகள் மற்றும் வளைய வடிவிலான உலோகப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மனித உருவத்தைக் கொண்டுள்ளது. வழக்கமான சிற்ப வடிவமைப்புகளிலிருந்து மாறுபட்டு, தொழில்துறைப் பொருட்களைப் பயன்படுத்தி மனித முகத்தையும் உடல் அமைப்பையும் உருவாக்கியிருப்பது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய அம்சமாக இருந்தது.

இதுபோன்ற படைப்புகள், சிற்பக்கலைக்கு வழக்கமான மூலப்பொருட்கள் மட்டுமே அவசியமில்லை என்பதையும், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களைக்கூட கலை வெளிப்பாட்டுக்கான ஊடகங்களாக மாற்ற முடியும் என்பதையும் உணர்த்துகின்றன.
மேலும், விலங்கின் எலும்புக்கூடு போன்ற அமைப்பைக் கொண்ட ஒரு நிறுவல் கலைப்படைப்பும் அரங்கில் இடம்பெற்றுள்ளது. மண், எலும்புகள் போன்ற தோற்றமளிக்கும் கூறுகள் மற்றும் பிற பொருட்களை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படைப்பு, வழக்கமான ஓவிய அனுபவத்திலிருந்து மாறுபட்ட காட்சியனுபவத்தை வழங்குகிறது.
இத்தகைய படைப்புகள், கலை என்பது அழகியலை மட்டுமல்லாமல், பார்வையாளர்களிடம் கேள்விகளையும் சிந்தனைகளையும் உருவாக்கக்கூடிய ஊடகமாகவும் அமைகிறது என்பதை நினைவூட்டுகின்றன.

வரலாற்றை நினைவூட்டும் கலைப்படைப்பு!
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பு, ராஜராஜ சோழன் காலத்து நாணய வடிவங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.
‘The Living Imprint’ என்ற தலைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் படைப்பில், வட்ட வடிவிலான இரண்டு உருவாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் வடிவங்களும் எழுத்துகளை ஒத்த குறியீடுகளும் பழங்கால நாணயங்களின் தோற்றத்தை நினைவூட்டுகின்றன.
வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பாரம்பரிய அடையாளங்களைச் சமகாலக் கலை வடிவில் மீண்டும் அணுகும் முயற்சியாக இத்தகைய படைப்புகளைப் பார்க்க முடிகிறது. கடந்த காலத்தைப் பற்றிய ஆர்வத்தையும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் இவை பார்வையாளர்களுக்கு நினைவூட்டுகின்றன.
ஒரே தளத்தில் பல்வேறு கலைப் பார்வைகள்!
இக்கண்காட்சியில் ஆஷின் சேவியர் எம்., ஆஸ்தா சர்மா, பாலச்சந்தர் ஜி., துர்கா வாசுதேவன், குணசேகர் ஜெயபால், ஜெயச்சந்திரன் எஸ்., கலைவாணன்.கே., கார்த்தி மோகன், கார்த்திகேயன் எம்., லதீஷ் குமார் எம்.கே., லூர்த்து அந்தோணி, மகாவிஷ்ணு கே., நம்ரதா சூரியமூர்த்தி, நவ்நீதா லட்சுமி எஸ்., நிதர்ஷன் ஆர்.வி., நிரஞ்சனா பி. உள்ளிட்ட பல கலைஞர்களின் ஓவியங்கள் மற்றும் கலை படைப்புகள் இடம்பெற்றுள்ளது. மேலும், பிரதாப் ஸ்டாலின் எஸ்., சம்பத் குமார், சரவணன் எம்., சரவணா கே., ஷர்மிளா தின்ஜித், சூரியமூர்த்தி ஜி., சுரேஷ் குமார் எம்., விஜய ராகவன் உள்ளிட்ட கலைஞர்களின் படைப்பும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு கலைஞர்களின் படைப்புகள் ஒரே இடத்தில் இடம்பெறுவது, வெவ்வேறு கலை அணுகுமுறைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் புதிய கலை வெளிப்பாடுகளை அறிந்து கொள்ளவும் பார்வையாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
கலைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலம்!
கலைக் கண்காட்சிகள் என்பது படைப்புகளைச் சுவர்களில் காட்சிப்படுத்துவதுடன் முடிந்துவிடுவதில்லை. ஒரு படைப்பை உருவாக்கிய கலைஞரின் சிந்தனையையும், அதை ரசிக்கும் பார்வையாளரின் புரிதலையும் இணைக்கும் தளமாகவும் அவை அமைகின்றன.
ஒரே ஓவியத்தைப் பார்க்கும் இரு பார்வையாளர்கள் அதிலிருந்து வெவ்வேறு உணர்வுகளைப் பெறலாம். ஒருவருக்கு அது இயற்கையின் அழகை நினைவூட்டலாம்; மற்றொருவருக்கு அது வாழ்க்கையின் மாற்றங்களைப் பற்றிய சிந்தனையை ஏற்படுத்தலாம். இந்தப் பல்வேறு புரிதல்களே கலையின் தனித்துவமாகும்.

அந்த வகையில், பல்வேறு கலை வடிவங்களையும் கலைஞர்களின் படைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ‘AURAE – ELEMENTAL’ கண்காட்சி, கலை ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய காட்சியனுபவத்தை வழங்கும் தளமாக அமைந்துள்ளது.
சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெறும் இக்கண்காட்சி, அக்டோபர் 10 முதல் 15-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கலைப்படைப்புகளின் விற்பனையையும் உள்ளடக்கிய கண்காட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியின் பார்வை மற்றும் நோக்கம்!
ஓவியம், சிற்பம், சமகாலக் கலை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் பல்வேறு கலைஞர்களின் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது.
வெவ்வேறு சிந்தனைகள், வெவ்வேறு படைப்புகள், வெவ்வேறு கலைப் பயணங்கள் — இவை அனைத்தும் ஒரே தளத்தில் சந்திக்கும்போது உருவாகும் அனுபவமே ‘AURAE – ELEMENTAL’ கண்காட்சியின் மையக் கருத்தாக வெளிப்படுகிறது.
கண்காட்சி பற்றி அதன் குழுவினர் மற்றும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்....
இந்த ஓவிய கண்காட்சியை ஒருங்கிணைத்த குழு நிறுவர்களில் ஒருவரான பிரதாப் ஸ்டாலின் நம்மிடம் பேசுகையில்,
இந்த அமைப்பை நான் மற்றும் எனது நண்பர்களான சுமணா, நம்ரதா, சுரேஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கினோம். நாங்கள் நால்வரும் சென்னையில் ஒரே பேட்சில் 2002-ல் கலைப் படிப்பை முடித்தவர்கள். இதன் தொடக்கப் புள்ளியாக ஒரே பேட்ச் மாணவர்கள் மற்றும் சூப்பர் சீனியர்கள் என சுமார் 30 பேர் சேர்ந்து சென்னை லலித் கலா அகாடமியில் ஒரு அலுமினி ஷோ (Alumni Show) நடத்தினோம். இதற்கு கிடைத்த நல்ல வரவேற்பை பார்த்து மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக இது வெறும் ஒரே வயதுப் பிரிவினருக்கான கண்காட்சி அல்ல, இதில் சூப்பர் சீனியர்கள், சீனியர்கள், இப்போதைய கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்காத கலை ஆர்வம் கொண்டவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைக்கப்பட்டுள்ளனர். பெரிய கலைஞர்கள் மற்றும் முதல்முறை வரையும் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரது படைப்புகளையும் ஒரே வரிசையில் முறைப்படுத்தி காட்சிப்படுத்தி உள்ளோம்.
இதில் ஸ்கல்ப்சர் (Sculpture), மாடலிங், வாட்டர் கலர் ஓவியங்கள் என மொத்தம் சுமார் 130 கலைப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.பல கலைஞர்கள் தங்களின் முதல் கண்காட்சியாகவும், சிலர் 5வது அல்லது 6வது முறையாகவும் இதில் பங்கேற்றுள்ளனர். கடந்த 7-8 மாதங்களாக வாட்ஸ்அப் குழுக்கள், ஆன்லைன் புரொபைல் பிக்கப், இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் இதற்கான விளம்பரப் பணிகளை தீவிரமாகச் செய்து வந்தோம் அதன் பலனாக இது அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் சென்றுள்ளதை நேரடியாகவே அறிகிறோம். மேலும் இந்த ஒருங்கிணைந்த கண்காட்சியை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இத்தகைய முயற்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், பலரும் தங்களது முதல் வாய்ப்பாக இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சினிமா சார்ந்த பிரபலங்கள் பெரும் வரவேற்பும் ஊக்கமும் தந்து வாழ்த்தி செல்கின்றனர். கலைக்கு வயது, அனுபவம் என்ற எந்தவித வேறுபாடும் கிடையாது; அனைத்து கலைஞர்களின் படைப்புகளையும் ஒரே மேடையில் கொண்டு வருவதே இந்த "ஆரே எலிமெண்டல்" கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
மேலும், இதில் கலந்து கொண்ட இளம் வயது ஓவிய கலைஞர் விஜயராகவனிடம் பேசுகையில், ``நான் அரசு நுண்கலைக் கல்லூரியில் (Government College of Fine Arts) இறுதி ஆண்டு சிற்பவியல் (Sculpture) பிரிவில் கல்வி பயின்று வருகிறேன். இந்த கண்காட்சியில் ஃபைபர் (Fiber) மூலப்பொருளைப் பயன்படுத்தி எனது படைப்புகளை உருவாக்கியுள்ளேன். இந்த கண்காட்சிக்காக 4 மாதங்களாக 25 கலைஞர்கள் இணைந்து கடுமையாக உழைத்து உருவாக்கியுள்ளனர்.




























நாங்கள் கொடுத்த கடின உழைப்புக்கு ஏற்ற நற்பெயரும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது, மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. தான் சொல்ல நினைப்பதை எந்தவித விளக்கமும் இன்றி பார்வையாளர்களின் மனதுடன் நேரடியாக இணைப்பதுதான் கலையின் உண்மையான வெற்றி, நான் செய்ய நினைத்ததை பார்வையாளர்கள் புரிந்து கொள்வது மிகுந்த திருப்தியைத் தருகிறது" என்றார். மேலும், முதல் முறையாக இதுபோன்ற ஒரு கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளதையும், இதில் கிடைத்த பாராட்டுகள், ஆதரவை தொடர்ந்து மேலும் பல புதுமையான படைப்புகளைச் செய்து தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆர்வமுடன் உள்ளதாக கூறினார்.
பார்வையாளர் ஒருவருடன் பேசுகையில், ``இது வெறும் ஒரு ஓவிய கண்காட்சியாக இருக்கும் என்று வந்தேன். ஆனால் இங்கு வந்து இங்குள்ள ஓவியம் மற்றும் அவர்களின் வேலைப்பாடுகளை பார்த்த போது ஆச்சரியமாகவும், மகிழ்சியாகவும் இருந்தது. இதில் கிடைத்த அனுபவம் வித்தியாசமாகவும் இருந்தது. மேலும் எனக்கும் இந்த கலை படைப்புகளின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த மாதிரி கலைஞர்களை ஆதரிக்க இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்து ஆதரவு தர வேண்டும்" எனக் கேட்டு கொண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


