ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சதமடித்து அசத்தல்.. இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவாரா ஜடேஜா?
இந்திய அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சௌராஷ்டிரா அணிக்காக அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் 209 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா 7 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்தார். இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது 16-வது சதமாகவும், சௌராஷ்டிரா அணிக்கான 9-வது சதமாகவும் பதிவானது.
இந்த போட்டியில் பிரேரக் மான்கடுடன் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 205 ரன்கள் கூட்டணி அமைத்ததன் மூலம், சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 392 ரன்கள் சேர்த்தது. இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டு, நியூசிலாந்து தொடருக்கான தேர்வில் கேள்விக்குறி நிலவும் சூழலில் ஜடேஜாவின் இந்த நிதானமான சதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல் தர கிரிக்கெட்டில் 8,500-க்கும் மேற்பட்ட ரன்களையும் 589 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள 37 வயதான ஜடேஜா, அடுத்து வரவிருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சௌராஷ்டிராவின் 392 ரன்களுக்கு பதிலளித்து ஆடிவரும் சத்தீஸ்கர் அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


