கை, கால், வாய் நோய்: குழந்தைகளிடையே அதிகரிக்கும் HFMD பாதிப்பு – பெற்றோர் கவனிக்க வேண்டியது என்ன?

குழந்தைகளை குறிவைக்கும் வைரஸ் தொற்று – பள்ளிகள், Day-care மையங்களில் அதிக கவனம் தேவை

குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளில் ஒன்றான கை, கால், வாய் நோய் (Hand, Foot, and Mouth Disease – HFMD) தொடர்பான பாதிப்புகள் குறித்து தற்போது கவனம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக புனே நகரில் 2026 செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே HFMD பாதிப்புகள் அதிகரித்து வருவதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய குழந்தை நல மருத்துவர் வை. பாலமுருகன், பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிகள், குழந்தை காப்பகங்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் நெருங்கிய தொடர்பு காரணமாக இந்தப் பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறுகிறார்.

மருத்துவர் வை. பாலமுருகன்

HFMD என்றால் என்ன?

``HFMD என்பது Enterovirus குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்களால் ஏற்படும் தொற்று நோய். இது குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் அதிகமாகக் காணப்படுகிறது என்றாலும், பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படலாம். பொதுவாக காய்ச்சல், தொண்டை வலி, வாய்ப்புண்கள் மற்றும் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தடிப்புகள் ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

முக்கியமாக, HFMD-ஐ கால்நடைகளில் காணப்படும் Foot-and-Mouth Disease உடன் குழப்பக் கூடாது. இரண்டும் முற்றிலும் வேறுபட்ட நோய்கள். HFMD மனிதர்களை பாதிக்கிறது; கால்நடைகளின் Foot-and-Mouth Disease மனிதர்களுக்கு ஏற்படாது.

எந்த வைரஸ் காரணம்?

HFMD-க்கு ஒரே ஒரு வைரஸ் மட்டுமே காரணம் அல்ல. பல்வேறு Enterovirus வகைகள் இதை ஏற்படுத்தலாம்.

முக்கியமானவை:

* Coxsackievirus A16

* Coxsackievirus A6 (CV-A6)

* Enterovirus A71 (EV-A71)

CDC-யின் தகவல்படி, CV-A6 HFMD-ஐ ஏற்படுத்தக்கூடிய முக்கிய வைரஸ்களில் ஒன்று. EV-A71 குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் HFMD மற்றும் சில நேரங்களில் தீவிரமான நரம்பியல் பாதிப்புகளுடன் தொடர்புடையதாகக் குறிப்பிடப்படுகிறது.

அறிகுறிகள் என்ன?

HFMD-ன் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போலவே இருக்கலாம்.

ஆரம்ப அறிகுறிகள்:

* காய்ச்சல்

* தொண்டை வலி

* பசியின்மை

* உடல் சோர்வு

* குழந்தை வழக்கத்தைவிட எரிச்சலாக இருப்பது

* நாக்கு, ஈறுகள் மற்றும் வாயின் உட்பகுதிகளில் வலி தரும் சிறிய சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் உருவாகலாம்.

கைகள் மற்றும் கால்களில்:

உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் சிவப்பு தடிப்புகள் அல்லது சிறிய கொப்புளங்கள் தோன்றலாம்.

மற்ற பகுதிகளில்:

பிட்டம், கால்கள் மற்றும் கைகளிலும் தடிப்புகள் தோன்றலாம்.

பள்ளிகளில் ஏன் வேகமாகப் பரவுகிறது?

HFMD மிகவும் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது.

குழந்தைகள் பள்ளி மற்றும் Day-care மையங்களில்:

* ஒன்றாக விளையாடுவது

* பொம்மைகளைப் பகிர்ந்து கொள்வது

* ஒரே பொருட்களைத் தொடுவது

* கைகுலுக்குதல் மற்றும் நெருங்கிய தொடர்பு

* உணவு மற்றும் குடிநீர் பொருட்களைப் பகிர்ந்து கொள்வது

* இருமல்/தும்மல் மூலம் வெளியேறும் துளிகள்

* கழிப்பறை அல்லது diaper மாற்றிய பின் சரியாக கை கழுவாதது போன்ற காரணங்களால் தொற்று பரவக்கூடும்.

வீட்டில் பெற்றோர் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரின் ஆலோசனை

20 விநாடிகள் சோப்புடன் கைகளை கழுவுதல் மிகவும் முக்கியமான தடுப்பு நடவடிக்கையாகும்.

குறிப்பாக:

* கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு

* குழந்தையின் diaper மாற்றிய பிறகு

* உணவு தயாரிக்கும் முன்

* குழந்தைக்கு உணவு கொடுக்கும் முன்

* இருமல்/தும்மலுக்குப் பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

மேலும், குழந்தைகள் அடிக்கடி தொடும் பொம்மைகள், கதவு கைப்பிடிகள், மேசைகள் மற்றும் பிற பொருட்களை சுத்தம் செய்து கிருமிநாசினி மூலம் disinfect செய்ய வேண்டும்.

மிகவும் முக்கியமான ஆபத்து – நீரிழப்பு

வாயில் ஏற்படும் புண்கள் காரணமாக குழந்தைக்கு தண்ணீர் அல்லது உணவை விழுங்குவதில் வலி ஏற்படலாம்.

இதனால் குழந்தைகள் :

* தண்ணீர் குடிக்க மறுப்பது

* அதிகமாக உமிழ்நீர் சுரப்பது

* சிறுநீர் அளவு குறைவது

* சோர்வாக இருப்பது

போன்ற dehydration (நீரிழப்பு) அறிகுறிகளை வெளிப்படுத்தலாம்.

இதுபோன்ற நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

EV-A71 ஏன் மருத்துவர்களின் கவனத்தில் உள்ளது?

பெரும்பாலான HFMD பாதிப்புகள் லேசானவையாக இருந்து 7–10 நாட்களில் குணமடைகின்றன. ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் சில Enterovirus தொற்றுகள் நரம்பியல் சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக EV-A71 தொற்றுடன் meningitis, encephalitis மற்றும் மிகவும் அரிதாக paralysis போன்ற சிக்கல்கள் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. இதனால் குழந்தைக்கு கடுமையான அறிகுறிகள் தென்பட்டால் “சாதாரண வைரஸ் காய்ச்சல்” என்று அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

பெற்றோருக்கு முக்கியமான செய்தி

HFMD தொடர்பான தகவல்களைப் பார்த்து பெற்றோர் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான குழந்தைகள் சிக்கலின்றி குணமடைகின்றனர். ஆனால் இது மிகவும் தொற்றக்கூடிய நோய் என்பதால் சுகாதாரப் பழக்கங்களை கடைப்பிடிப்பது முக்கியம் மற்றும் குழந்தைக்கு காய்ச்சல், வாய்ப்புண், கை–கால் தடிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், மற்ற குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனை பெறுவது பரவலைக் குறைக்க உதவும்" என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் வை.பாலமுருகன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.