ஆஃபர், அவசரம், பதற்றம்... ஆன்லைன் பர்ச்சேஸில் பணம் பத்திரம் மக்களே.!
பண்டிகைக் காலம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. பெரிய இ-காமர்ஸ் தளங்கள் முதல் யூடியூப், இன்ஸ்டா வரை வியாபாரம் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது. அதிரடி ஆஃபர் வலைகள் வீசப்படுகின்றன. எது நிஜமான ஆஃபர், எது ஏமாற்று வேலை என எப்படி அறிவது எனத் தெரியாமல் பலரும் ‘அதிரடிச் சலுகை, குறைந்த விலை’ என்னும் வலையில் சிக்கி பண இழப்பைச் சந்திக்கிறார்கள். இன்னும் பலர் பணம் செலுத்தி வாங்கிய பொருள் தரமற்றதாக இருப்பதைக் கண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
‘‘நான் வெப்சைட்டில் பார்த்த பொருள் மாதிரியே இல்லை. ரொம்ப மோசமாக இருக்கிறது’’ எனப் புலம்புகிறவர்கள் ஏராளம். இன்னும் சிலர் பரிச்சயம் இல்லாத போலியான தளங்களில் கவர்ச்சிகரமான விலை சலுகையைக் கண்டு, ‘இந்தப் பொருளை இவ்வளவு குறைந்த விலைக்கு தர முடியுமா...’ என்றெல்லாம் யோசிக்காமல் வலையில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள்.
ஆன்லைனில் பொருள்களை வாங்கும்போது விலை குறைவாகக் கிடைக்கிறதா என்பதை மட்டுமே பலரும் பார்க்கிறார்கள். நாம் பொருள் வாங்கும் தளம் நம்பகமானதா, நாம் செலுத்தும் பணத்துக்குத் தகுதியான பொருள் கிடைக்குமா, நம் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்பதையெல்லாம் நிறைய பேர் கவனிப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் போலியான ஆஃபர்கள், போலி இணையதளங்கள், மோசடி லிங்குகள் மூலம் உங்களுக்கு வலை வீசப்படலாம். கூடுதல் கவனத்துடன் பர்ச்சேஸ் செய்வது மட்டுமே பண இழப்பில் இருந்து தப்பிக்க உதவும். அடிப்படையாக என்னென்ன விஷயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்..? இணையதள ஆலோசகர்கள் பலரும் வலியுறுத்தும் சில எச்சரிக்கை விஷயங்களைப் பார்ப்போம்.
1. ஆஃபர் விலையை மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது!
‘80% முதல் 90% வரை தள்ளுபடி’, ‘இன்று மட்டுமே ஆஃபர்’, ‘கடைசி நேர சலுகை’ என்பது போன்ற வார்த்தைகளைப் பார்த்தவுடன், வாய்ப்பைத் தவறவிட்டு விடக்கூடாது என அவசரப்பட்டு பொருளை வாங்க ஆர்வம் காட்டுகிறவர்கள் அதிகம். வாங்கப்போகும் பொருளின் விலையை வேறு சில நம்பகமான தளங்களிலும் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். உண்மையில் எவ்வளவு தள்ளுபடி தரப்பட்டுள்ளது என்பதை அப்போதுதான் தெரிந்துகொள்ள முடியும்.
2. இணையதள முகவரியைச் சரிபார்ப்பது முக்கியம்!
பிரபல நிறுவனங்களின் பெயரைப் போலவே இருக்கும் போலி இணையதளங்களை மோசடிக்காரர்கள் பலரும் உருவாக்கலாம். இணையதள முகவரியில் சிறிய எழுத்து மாற்றங்களைச் செய்து ஏமாற்றும் போலி இணையதள முகவரிகளில் சிக்கிவிடாமல் உஷாராக இருப்பது அவசியம். சமூக வலைதளங்களில் வரும் லிங்கை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை நேரடியாக ஓப்பன் செய்வதே பாதுகாப்பானது.

3. தெரியாத லிங்குகளில் பணம் செலுத்த வேண்டாம்!
‘உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது; ரீஃபண்ட் பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்’, ‘தொகை குறைவாகச் செலுத்தியுள்ளீர்; கூடுதல் கட்டணம் செலுத்துங்கள்’ என்று வரும் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் லிங்குகளை நம்பி உடனே கிளிக் செய்யக்கூடாது. குறிப்பாக OTP உள்ளிட்ட விவரங்களை பதிவிடவோ பகிரவோ கூடாது.
4. விற்பனையாளரின் விவரங்களை ஆராய்வது அவசியம்!
பிரபலமான தளத்திலேயே பொருள் வாங்கினாலும் விற்பனையாளர் யார் என்பதைப் பார்ப்பது நல்லது. விற்பனையாளரின் மதிப்பீடு, முந்தைய வாடிக்கையாளர்களின் விமர்சனங்கள், பொருளின் தரம் குறித்த கருத்துகள் போன்றவற்றைச் சரிபார்த்து, பிறகு முடிவு செய்வது நல்லது.
5. போலியான ரிவியூக்களை நம்பாதீர்கள்!
ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் இருப்பதால் மட்டுமே பொருள் சிறந்தது என்று முடிவு செய்ய வேண்டாம். ஒரே மாதிரியான ஸ்டைலில் பல ரிவியூக்கள் இருப்பது, பொருளைப் பற்றி கருத்து ஏதும் சொல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பாராட்டுவது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களையும் படித்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.
6. பணம் செலுத்தும் முறையில் கவனம் தேவை!
பரிச்சயம் இல்லாத இணையதளங்களில் நேரடியாக வங்கி விவரங்களைப் பதிவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நம்பகமான பேமென்ட் செலுத்தும் முறைகளைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
7. கேஷ்பேக், கூப்பன் நிபந்தனைகளின் விதிமுறைகளில் கவனம்!
‘ரூ.2,000 கேஷ்பேக்’, ‘ரூ.5,000 கிஃப்ட் கூப்பன்’ என விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்து, அது முழுமையான பணத் தள்ளுபடி என்று நினைக்க வேண்டாம். பலவிதமான நிபந்தனைகள் இருக்கலாம். கவனமாகவும், முழுமையாகவும் விதிமுறைகளைப் படிக்க வேண்டும்.
8. ரிட்டர்ன் மற்றும் ரீஃபண்ட் விதிகளைப் பாருங்கள்!
ஆன்லைனில் பொருள்கள் வாங்கும்போது சில சமயம் அந்தப் பொருள்கள் நமக்குப் பொருத்தமாக இல்லாமல் இருக்கலாம். எனவே, வாங்குவதற்கு முன் அந்தப் பொருளுக்கு ரிட்டர்ன் வசதி உள்ளதா, எத்தனை நாள்களுக்குள் திருப்பித் தர வேண்டும், ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
9. பொருள் கிடைத்தவுடன் சரிபார்ப்பது அவசியம்!
சிலர் பார்சல் வந்தவுடன் உடனே பிரித்துப் பார்ப்பதில்லை. நான்கு நாள், ஒரு வாரம் கழித்தெல்லாம் பிரித்துப் பார்ப்பவர்களும் உண்டு. உடனடியாகத் திறந்து பொருளைச் சரிபார்ப்பது நல்லது. அப்போதுதான் பொருள் சேதமடைந்திருந்தாலோ, தவறான பொருள் வந்திருந்தாலோ உடனடியாக புகார் செய்ய முடியும்.
10. ‘அவசரப்படுத்தும் ஆஃபர்’ என்றால் கூடுதல் கவனம்!
‘இன்னும் 2 நிமிடங்கள் மட்டுமே இந்தச் சலுகை’ என்று சில தளங்களில் நம்மை பதற்றத்துக்கு உள்ளாக்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட சூழலில் பதற்றப்பட்டு உடனே பணம் செலுத்திவிடக் கூடாது. தரமான பொருள்தானா, விதிமுறைகள் என்ன, சலுகை என்பது உண்மைதானா என்றெல்லாம் ஆராய அவகாசம் தராத தளங்களில் பர்ச்சேஸ் செய்வதைக் கூடுமானவரை தவிர்ப்பதே நல்லது. பெரும்பாலும், இந்த ‘அவசரம்’ மோசடி வலையில் சிக்க வைத்துவிடலாம் என்பதால் உஷாராக இருப்பது நல்லது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைப்பது சரிதான். அதற்காக, அவசரத்திலும் பதற்றத்திலும் நம்முடைய பணத்தை இழந்துவிடக் கூடாது. பர்சனல் தகவல்களை மோசடிக்காரர்களிடம் தந்துவிடக் கூடாது. ‘ஆஃபர்’ என்றவுடன் ஆசைப்படாமல், எல்லாவற்றையும் ஒருமுறை சரிபார்த்த பிறகு பர்ச்சேஸ் செய்வதே புத்திசாலித்தனம் மக்களே!
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

