BB Tamil 10: ஷமாவைக் காப்பாற்ற முயல்கிறதா, பிக் பாஸ் டீம்? பிக் பாஸில் இந்தவாரம் என்ன நடந்தது?

செலிபிரிட்டி போட்டியாளர்களை விடவும் காமன்மேனிலிருந்து வந்தவர்கள் கலக்குகிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் சொல்ல வேண்டிய அளவிற்கு அது தொடர்கிறது. ஷமாவைத் தொடர்ந்து ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸை’ ஜேசன் வென்றிருக்கிறார். அடுத்த பாஸ் முனியம்மாளுக்கு சென்று சேருமா?

BB Tamil 10

ஐந்தாவது வாரத்தில் என்ன நடந்தது?


இந்த வாரத்தின் ஹைலைட்டே வீக்லி டாஸ்க்தான். ‘மேஜிக் போர்ஷன்’. அதாவது அடுத்தவன் உயிரை எடுத்தால்தான், தான் பிழைக்க முடியும் என்கிற ஆதாரமான நல்லெண்ணத்தைக் கொண்ட ஆட்டம். இதில் கூட்டணிகள் சேர்ந்தன, கலைந்தன, பிரிந்தன. 


‘ஒரு பக்கம் WWF ப்ளேயர் மாதிரி அவினாஷ் ஆக்ரோஷமா ஆடறான். இன்னொரு பக்கம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பிளேயர் மாதிரி ஜேசன் குதிக்கிறான். நடுவுல நான் வீடியோ கேமர் மாதிரி இருந்தேன்” என்று தன்னையே கலாய்த்துக் கொண்டு அன்சர் நகைச்சுவையாக சொன்ன மாதிரி அவினாஷ் மற்றும்  ஜேசனின் ஆட்டங்கள் பரபரப்பாக இருந்தன. இந்த இருவரில் ஒருவர்தான்  வெற்றி அடைவார் என்று தோன்றியது. 

ஆனால் முயல் - ஆமை கதை மாதிரி, இறுதியில் முனியம்மாள் - முத்தழகி ஜோடி டாஸ்க்கை வென்றது இனிய ஆச்சரியம். மற்றவர்களின் உயிரை எடுத்து, தங்கள் ஸ்டேஷனை பத்திரமாக பார்த்துக் கொண்ட ஜேசனின் அடாவடியைக் கண்டு காண்டான அன்சர், ‘இந்த அடாவடிக்கே அடாவடியா’ என்று வெகுண்டு எழுந்து “ஜேசனின் பத்து  பாட்டிலையும் நான் தூக்கறேன்’ என்று பொதுவில் கையைத் தூக்கி  சவால் விட்டது, ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அன்சர் தான் சொன்னபடி செய்தாரோ, இல்லையோ, ஆனால் ஒரு கலகத்தை வெற்றிகரமாக விதைத்து விட்டார். ஜேசனின் மீது காண்டாக இருந்த மற்ற போட்டியாளர்களும் இணைந்து கொண்டார்கள். 

ஒரு கட்டத்தில் ‘மலயோடு மோது, எங்கள் தலயோடு மோதாதே’ என்கிற மாதிரி ஜேசனுக்கு எதிராக அவினாஷை கோர்த்து விட முயன்றார் முனியம்மாள். “நீ வீரனா இருந்தா ஜேசன் கிட்ட மோது பார்க்கலாம்’ என்று முனி உசுப்பி விட்டது ராஜ தந்திரம். 

BB Tamil 10
BB Tamil 10

பாலின பாகுபாட்டோடு பேசினாரா ஜேசன்?


‘Playing with the women is unfair. Be like a man’ என்று ஆட்ட மும்முரத்தில் ஜேசன் சொன்னது சர்ச்சையானது. இதை அப்போதே சூடாக விமர்சனம் செய்தார் வினோத். “ஆம்பளைங்க மாதிரி கண்ணியமா ஆடுன்னா என்ன அர்த்தம்.. பொம்பளைங்க கண்ணியமா ஆடறதில்லையா?” என்று வினோத் சொல்ல இருவருக்கும் முட்டிக் கொண்டது. நண்பர்களாக இருந்தவர்கள், பகைவர்களாக மாறினார்கள்.


வார இறுதியிலும் இந்த சர்ச்சை விவாதிக்கப்பட்டது. “உங்க நோக்கம் நல்லதா இருக்கலாம். ஆனா பாலின பாகுபாடு தொடர்புடைய சொற்கள் நம்மையும் மீறி வரக்கூடாது. காலம் மாறி விட்டது. பெண்கள் பலவீனமாவர்கள் அல்ல’ என்று விசே விளக்கிய போது மண்டையை ஆட்டிக் கொண்ட ஜேசன். பிறகு வினோத்திடம் இது தொடர்பாக மீண்டும் மோதியது பார்க்க நன்றாக இல்லை. 


விசே சொன்ன மாதிரி, ஜேசனின் நோக்கம் தவறில்லாமல் இருக்கலாம். யாரிடமோ போராடிக் கொண்டிருந்த ஜேசனை பின்பக்கமாக இழுக்க முயற்சி செய்தார் முனியம்மாள். அப்போது ‘உங்களையும் இதே மாதிரி இழுத்தா ஒப்புக் கொள்வீர்களா?” என்று ஜேசன் கேட்க, அதன் பொருள் உணர்ந்து சட்டென்று விலகி விட்டார் முனி. 

ஓர் ஆணுடன் கட்டிப் புரண்டு சண்டை போடுவது மாதிரி ஒரு பெண்ணிடம் போட முடியாது. போடவும் கூடாது என்று ஜேசன் நினைப்பது உலக நடைமுறையில் சரி. ஆனால் ஆண் என்பவன், ஒரு பெண்ணை பலவீனமான நபராக பார்ப்பதின் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பொதுவாகவே ஜேசனுக்குள் superiority complex இருக்கிறது. பெண்கள் யாரும் புகார் சொல்லாத வரை, ஜேசனின் இந்தக் கருத்து பொருத்தமாக இல்லை.


‘Play like a man’ என்று வியாக்கியானம் பேசும் ஜேசன், முந்தையதொரு டாஸ்க்கில் ஷமாவை குழந்தை மாதிரி ஒரு கையால் தூக்கிக் கொண்டு வந்து போட்டதை மாத்திரம் எப்படி நியாயப்படுத்துவார்?  ஷமாவின் மீது ஒரு நிரந்தரமான ஓரவஞ்சனை இருப்பதை ஜேசன் பல சமயங்களில் வெளிப்படுத்தி வருகிறார். இதை ஒளித்து வைக்காமல் நேர்மையாக வெளிப்படுத்துவது பாராட்டத்தக்கது.

தன்யாவுடனான எல்லைப் பிரச்சினையில் ‘இது என்னோட இடம். இந்தப் பக்கம் செருப்பு வெச்சா வெளில பறக்கும்’ என்று ஜேசன் ஆக்ரோஷப்பட்டதெல்லாம் ஓவர். நூறு நாட்களுக்கும் குறைவாக தங்கப் போகும் இடத்திலேயே ‘என்னோட இடம்’ என்கிற மனப்பான்மை வந்து விடுகிறது. எனில் உலகம் முழுவதும் நிகழும் எல்லைப் பிரச்சினைகள், அது தொடர்பான சண்டைகள் நிகழ்வதில் ஆச்சரியமில்லை. நிலத்தின் மீதான அதிகாரம். எதிர் வீட்டுக்காரனின் செருப்பு நம் வீட்டின் பக்கம் வந்தாலே எரிச்சல் ஆகும் ஆசாமிகள்தான் நாம். 

BB Tamil 10
BB Tamil 10

‘இநதக் காட்டுப் பயக்குள்ளயும் ஒரு பூ பூத்திருக்குது பாரேன்’ என்கிற மாதிரி ஜேசனுக்கும் சாந்தினிக்கும் இடையில் நட்புணர்வு சார்ந்த ஒரு நேசம் உருவாகியிருக்கிறது. முகேஷ்- ஷாதிகா மாதிரியே இவர்களும் அவ்வப்போது தனிமையில் ரகசியம் பேசுகிறார்கள். ஒட்டுமொத்த வீடே ஜேசனை வில்லனாக பார்க்கும் போது அவரிடமிருக்கும் ஹீரோவை பார்த்திருக்கிறார் சாந்தினி. ‘சுமாரான ஆட்டக்காரரான சாந்தினி, இன்னமும் எப்படி உள்ளே இருக்கிறார்?’ என்கிற கேள்வி தொடர்ந்து வரும் நேரத்தில், பலமான ஆட்டக்காரரான ஜேசனை சார்ந்திருப்பதின் மூலம் சாந்தினி தப்பிக்க நினைக்கிறாரா? 

‘வாச’மில்லா மலரிது, வசந்தத்தை தேடுது - TTF வாசன்

இந்த வாரம் வைல்ட் கார்டாக வந்த கரிஷ்மா, ஆரம்பத்திலேயே ஷமாவிற்கு எதிராக ஒரு திரியை பற்ற வைத்து வீட்டை பரபரப்பாக்கினார். அது வெற்றிகரமாக பற்றிக் கொண்டு பலரும் ஷமா மீது பாய்ந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு கரிஷ்மா என்ன செய்கிறார் என்பதே தெரியவில்லை. தனக்கு தரப்பட்ட ‘கேட் கீப்பர்’ வேலையையும் சரியாக செய்யாமல் சொதப்பினார். 


ஏறத்தாழ வாசனும் கரிஷ்மா மாதிரியேதான் இருக்கிறார். பைக்கில் வேகமாக உள்ளே வந்தவர், பிக்அப் ஆகாமல் ஸ்டார்டிங் டிரபுளில் தவிக்கிறார். ‘அவருக்கு புரிய வைக்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது’ என்று மற்றவர்கள் காரணம் சொல்லும் போது ‘தெய்வ திருமகள்’ விக்ரம் மாதிரியே மந்தமாக பார்க்கிறார். சில காரணங்களுக்கு உடனே கோபப்படுகிறார். 


ஆனால் ஆசாமி அப்படியொன்றும் முழு மந்தமில்லை. வீக்கெண்ட் எபிசோடில் வாசன் மீது முத்தழகி மைக் மாட்டாத பிரச்சினை குறித்து புகார் சொன்ன போது “எதையும் தப்பா புரிஞ்சுக்கிட்டு பழி போடாதீங்க. இப்படித்தான் ராகவ் நொண்டி நடந்த விஷயத்தையும் தப்பா பேசினீங்க’ என்று சரியான பாயிண்டை வைத்தார். ‘எதையும் அரைகுறையா தெரிஞ்சு பேச மாட்டேன்’ என்று வாசன் சொல்வது சரிதான். ஆனால் அவர் முழுவதும் புரிந்து கொள்வதற்குள் அவருடைய எவிக்ஷன் நடந்து விடும் போலிருக்கிறது. அவர் பைக் ஓட்டும் வேகத்திற்கு வெளியே ஆயிரம் ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் வீட்டிற்குள் நடைவண்டி கூட ஓட்டவில்லை. 

ஷமாவைக் காப்பாற்ற முயல்கிறதா, பிக் பாஸ் டீம்?


மூன்றாவது வைல்ட் கார்ட், அக்ஷிதா. மேடையிலேயே அண்ணன் -தங்கை சண்டையை காட்டியவர்கள். வீட்டிற்குள் அதிக  ஃபயராக இருப்பார்கள் என்று பார்த்தால் பாச மலர்களாக மாறி விட்டார்கள். அதுவரை சாதா ரவுடியாக இருந்த அவினாஷ், தங்கை உள்ளே வந்தவுடன் ஸ்பெஷல் ரவுடியாக மாறி மற்றவர்களிடம் உக்கிரமாக சண்டை போடத் துவங்கியிருக்கிறார். அவரைக் கட்டுப்படுத்துவதிலேயே அக்ஷிதாவின் பெரும்பாலான நேரம் கழிந்தது.  ‘நாம டீமா இருக்க வேணாம்’ என்று தங்கை அட்வைஸ் செய்தாலும், சென்டிமென்ட்டாக பேசி ‘மேஜிக் போர்ஷன்’ டாஸ்க்கில் தங்கையுடன் இணைந்தது அவினாஷ் செய்த பெரிய தவறு. வந்தவுடனேயே லீடர் ஆன அக்ஷிதாவால் பெரிய மாற்றம் எதையும் நிகழ்த்த முடியவில்லை. 


ஷமாவிற்கு எதிராக கரிஷ்மா கொளுத்திப் போட்ட திரி நன்றாகப் பற்றிக் கொண்டாலும் வார இறுதியில் மிக எளிதாக அதை அணைத்து விட்டார் விஜய்சேதுபதி. “என்னைக் காப்பாத்தறதுக்கு முன்னுரிமை தரணும். இல்லைன்னா நான் சமைக்க மாட்டேன்” என்று LP டீல் போட்டதை முதலில் மறுத்தாலும் பிறகு ஷமா ஒப்புக் கொண்டது தவறு. “அவங்க தலைவர் பதவியை சுயநலத்துக்காக பயன்படுத்தலை. உங்களுக்கெல்லாம் சாப்பாடு கிடைக்கணும்ன்ற பொதுநலத்துக்காகத்தான் பயன்படுத்தினாங்க” என்று விசே சொன்னது ஒரு மாதிரி லாஜிக்காக தெரிந்தாலும் சப்பைக்கட்டாக தெரிந்தது. 

BB Tamil 10
BB Tamil 10

அனைத்து பொதுநலமும் சுயநலத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ‘தன்னை ஏன் ரயிலில் இருந்து தள்ளி விட்டார்களா?” என்று தன்னைப் பற்றி காந்தி யோசித்த அந்த தருணத்தில் இருந்துதான் ஒரு தேசத் தந்தை உதயமானார். ஆனால் இங்கு நடந்தது வேறு. தனக்கு சலுகை தராவிட்டால் சமைக்க மாட்டேன் என்று LP பிளாக்மெயில் செய்ததற்கு ஷமா நிச்சயம் உடன்பட்டிருக்கக்கூடாது. ‘எல்லோருக்கும் சாப்பாடு கிடைக்கணும்’ன்ற நல்லெண்ணம் ஒருவேளை ஷமாவிற்கு இருந்திருக்கலாம். ஆனால் பிக் பாஸ் டீமிற்கு இருந்திருக்க முடியாது. உணவு, தூக்கம் போன்றவற்றைப் பறிப்பதின் மூலம் போட்டியாளர்களுக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்துவது இந்த ஷோவின் அடிப்படைகளுள் ஒன்று. எனில் ஏன் ஷமாவை இந்த விஷயத்தில் காப்பாற்ற முயல்கிறார்கள்?

நீச்சல் குளத்தில் ஆடிய போது தவறுதலாக கயிறு அவிழந்த காரணத்தினால் ஜாவித்தை அவசரம் அவசரமாக வெளியே அனுப்பினார்கள். இதற்காக குறும்படமெல்லாம் போட்டு காட்டினார்கள். ஆனால் அஷ்மிதா -சாவின்யா இடையிலும் கயிறு அவிழ்க்கப்பட்ட சம்பவத்தை எப்படி சௌகரியமாக மறந்தார்கள் அல்லது மறைத்து விட்டார்கள்?

‘இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு’  - முனியம்மாளின் அலப்பறை


இதுவரையான ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு முதல் காரணமாக இருந்த முனியம்மாள், தலைவர் ஆனால் எப்படி இருக்கும் என்கிற ஆசை தோன்றியது. இந்த வாரத்தில் அவர் எதிர்க்கட்சி தலைவர் என்ற போது ‘அப்படிப் போடு.. இந்த வாரம் பயங்கர எண்டர்டெயின்மென்ட் இருக்கும்’ என்று தோன்றியது. அதற்கேற்ப ஆரம்பத்தில் “ஆளும் அணியை ஒரு பதட்டத்திலேயே வெச்சிருக்கணும். நம்மள பார்த்தாலே அவங்க கதி கலங்கணும்’ என்று சுவாரசியமாக ஆரம்பித்தார் முனி. ஆனால் அதற்குப் பிறகு பெரிதாக எங்கும் தெரியவில்லை. உயிர் வாங்கும் டாஸ்க்கில் மூழ்கி காணாமல் போய் விட்டார். 


யாரும் ஜோடி சேர விரும்பாத முத்தழகியை இணைத்துக் கொண்டு வீக்லி டாஸ்க்கில் முனியம்மாள் கலக்கியது ஒரு நல்ல சம்பவம். தன்னால் இயன்ற வரைக்கும் ஆட்டத்தை ஆடினார். கலகங்களை விளைவித்தார். “எனக்கு ஜெயிக்கறோம்.. தோக்கறோம்ன்றதெல்லாம் முக்கியமில்ல. இந்த ஆட்டத்தை ஆடினது பிடிச்சிருந்தது” என்று வெள்ளந்தியாக சொல்லும் முனியம்மாளின் ஸ்டேட்மெண்ட், ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்வுமனின் அடையாளம். 

BB Tamil 10
BB Tamil 10

ஒரு பக்கம் இந்த சீசனே ஈ ஓட்டிக் கொண்டிருக்க, முனியம்மாள் ஈ ஓட்டியதும் ஒரு பிரச்சினையாக ஆனது. ‘இலையில் சோறு போட்டு, ஈயைத் தூர ஓட்டு’ என்கிற எல்கேஜி பாடல் மாதிரி, சாப்பிட ஆரம்பித்த முனியம்மா மேட்டை தட்டி ஈயை ஓட்ட, அருகிலிருந்த அவினாஷிற்கு எரிச்சல் வந்தது. ‘அந்த மேட்டை மறுபடியும் சரியா வைங்க’ என்று அவர் சொல்ல ‘கொஞ்சம் நகர்ந்திருந்தா என்ன பிரச்சினை. முடியாது போ’ என்று முனி மறுக்க சண்டை ஆரம்பம். மேட் நகர்ந்ததை காரணமாகச் சொன்னால் எடுபடாது என்று அவினாஷ் நினைத்தாரோ, என்னமோ ஈ அடித்த பிரச்சினையை பெரிதாக்கி விட்டார். 

டாஸ்க் இடையில் பசி தாங்காமல் உள்ளே வந்த முனியம்மாள், ஒரு கிண்ணத்தில் சோறு கிடைத்ததும், தன்னிச்சையாக கண் கலங்கியது உருக்கமான காட்சி. “சின்ன வயசுல சாப்பாடு கிடைக்காம ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்” என்று கண்ணீர் விட்டவர், “சீமாப்பாவை கட்டினதுல இருந்து சோத்துக்கு கஷ்டமில்ல’ என்று வெள்ளந்தியாக சிரித்தார்.

ஷாதிகா மீது லட்சுமிபிரியாவின் பொசசிவ்னஸ்?


புயலுக்குப் பின் அமைதி மாதிரி, உக்கிரமாக நடந்து முடிந்த ‘மேஜிக் போர்ஷன்’ டாஸ்க்கிற்குப் பிறகு கடிதம் எழுதிக் கொள்ளும் சென்டிமென்ட் டாஸ்க் நடந்தது. இதில் கடிதம் கிடைத்தவர்கள் உருக்கமாக கண்கலங்க, கடிதம் கிடைக்காதவர்கள் ஏங்கினார்கள். குறிப்பாக தன் தோழியான ஷாதிகா, தன்னை கை விட்டது குறித்து லட்சுமி பிரியாவிற்கு பயங்கர வருத்தம். தனது ஆட்சேபத்தை கோபமாகவும் காட்டி விட்டார். ஷாதிகாவுடன் முகேஷ் நெருங்கிப் பழகுவதில் இவருக்கு பொசசிவ்னஸ் ஏற்படுகிறது. 

BB Tamil 10
BB Tamil 10

பாட்டில் டாஸ்க்கில் வென்ற முனியம்மாளும் முத்தழகியும் அடுத்த வார தலைவர் போட்டிக்கு தகுதியாகியிருக்கிறார்கள். அன்சரும் இதில் இணைந்திருக்கிறார். அன்சர்தான் அடுத்த வார தலைவர் என்கிற மாதிரியான தகவல் வெளியாகியிருக்கிறது. வீடு எப்படியாக மாறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். 


ஷமா செய்த சமரசம் பொதுநலமா, அல்லது சுயநலமா? கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.