”உன்னோட கஷ்டத்தை நான் போக்குறேன்னு சொன்னான்; இன்னைக்கு அவனே இல்ல” - ஒற்றை மகனை இழந்த தாயின் கண்ணீர்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி வீரலட்சுமி. வீரலட்சுமி, 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கந்தசாமி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்ததால் அவரை மறுமணம் செய்து கொள்ள உறவினர்கள் வலியுறுத்திய போதும், பிறக்கக்கூடிய குழந்தையை நல்லபடியாக பெற்று எடுத்து வளர்ப்பது மட்டுமே தன்னுடைய வாழ்வின் கடமை, மற்ற எதுவும் தனக்கு தேவையில்லை என்று கூறியது மட்டுமன்றி அவருடைய மகன் கொம்பு ராஜா பிறந்த பிறகும் வீரலட்சுமி மறுமணம் செய்து கொள்ளாமல் தன் மகனுக்காக வாழ்ந்தார்.  

கொம்புராஜா

கொம்பு ராஜாவும் தன்னுடைய தாய் சொல்லை தட்டாமல், படிப்பிலும் கபடி விளையாட்டிலும் அதிதீவிரம் காட்டினார். கபடி போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளையும் அவர் பெற்று தன்னுடைய தாய்க்கு பெருமை சேர்த்தார்.  தாய்க்குப் பெருமை சேர்த்தது மட்டுமன்றி தாய் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கொம்பு ராஜா, ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை ஒரு கனவாகவும் லட்சியமாகவும் கொண்டிருந்தார். அவர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது  ’அக்னிபாத்’ மூலமாக அந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.  இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட அக்னிபாத் தேர்வில் தேர்வாகி  மகிழ்ச்சியுடன் கடந்த 26-6-2026 -ம் தேதி முதல் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் மையத்தில் பயிற்சியில் இருந்து வந்துள்ளார்.

தன்னுடைய கனவு நனவாகி விட்டது  என்று  மகிழ்ச்சியுடன்  இருந்த நிலையில், கடந்த 3-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மைதானத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  கொம்பு ராஜா இறந்து விட்டார். பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு,  அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான நாகம்பட்டிக்கு கடந்த 5-ம் தேதி கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதை மற்றும் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கண்ணீருடன் பேசிய வீரலட்சுமி, “நீ ஒத்த புள்ளய வச்சுருக்க. ராணுவத்துக்கெல்லம்  அனுப்ப வேண்டாம்னு சொன்னாங்க.

கண்ணீருடன் வீரலட்சுமி

 ”நீ தாம்மா கஷ்டப்பட்ட.. நான் வேலைக்கு போய் உன் கஷ்டத்தை  நீக்குகிறேன், கஷ்டப்படாதீங்கமா”ன்னு சொன்னான், 2-ம் தேதி வெள்ளிக்கிழமை பேசினவன்,  3-ம் தேதி சனிக்கிழமை இல்ல.. என் புள்ள படத்த பாத்துகிட்டு உசுர விட்டுக்கிட்டு இருக்கேன்.” என்றார். ஏற்கெனவே கணவன் இல்லாத நிலையில், தற்போது தனக்குத் துணையாக இருந்த  ஒற்றை மகனும் இல்லாததால் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் வீரலட்சுமி. அவருக்கு  மத்திய, மாநில அரசுகள்  உதவி தரம் நீட்ட வேண்டும் என, கிராம மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.