நிலுவையில் உள்ள ரூ.5,110 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார்.

முதலில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

CM Vijay

முதல்வர் விஜய், "தமிழ்நாடு பல்வேறு பண்பாடுகளைக் கொண்டது. அதை இன்று வரை பேணிப் பாதுகாத்து வருகிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படையில் நமது அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.

கல்வி, சுகாதாரம், வேளாண் வளர்ச்சி என அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து நம் மாநிலம் பங்களித்து வருகிறது.

ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, அதன் பலன் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை. இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலம். அவர்களின் தொழில்நுட்ப அறிவு, புதுமைச் சிந்தனை ஆகியவற்றை உலகளவிலான வாய்ப்புகளுடன் இணைப்பதே நமது இலக்கு.

சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டத்தில் 54 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதை பயன்பாட்டில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தின் தடம்-4ல் பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் வழித்தடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்தவும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மற்றும் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை எனச் சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலான மூன்றாம் கட்டத் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

இதேபோன்று, தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த முன்மொழிவை மாண்புமிகு பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் ஓசூரில் இருந்து கர்நாடகாவின் பொம்மசந்திரா வரையிலான மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மத்திய அரசு உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய சில முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டு - திருச்சி பிரிவு, NH81 சாலையில் திருச்சி - பஞ்சப்பூர் - ஜெயங்கொண்டம் - கரூர் பிரிவு, கரூர் - கோயம்புத்தூர் பிரிவு ஆகியவற்றை 6 வழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்வதுடன், NH87 சாலையில் மாதவரம் முதல் சோழவரம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும்.

இத்திட்டங்களுக்கு உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிச் செயல்படுத்துவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆதரவாக அமையும். இவற்றுடன், மாண்புமிகு பிரதமரின் கவனத்திற்கு மேலும் சில முக்கிய கோரிக்கைகளையும் முன்வைக்கின்றேன். மாநிலங்களுக்கு இடையே நீர் சமநிலையைக் கொண்டுவர நதிகள் இணைப்பு மிக மிக அவசியமாகும்.

CM Vijay
CM Vijay

தென்னிந்திய மாநிலங்களில் நீர் வளத்தைப் பெருக்குவதற்கு கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் ஒரு பொன்னான வாய்ப்பாகும். எனவே, மத்திய அரசு இத்திட்டத்திற்கு முதன்மை முன்னுரிமை அளித்து, தேசியத் திட்டமாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வழிவகை செய்யும் வகையில், இதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரசின் பங்கான ரூ.5,110 கோடி நிலுவையில் உள்ளது. எந்தவித நிபந்தனைகளுமின்றி இந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.