Nobel Prize வாங்கும் முதல் தமிழ் வம்சாவளி - நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான விருது; யார் இவர்?

2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை பெறவுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு பெறுவது இதுவே முதல்முறை.

யார் இவர்?

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இந்தியத் தமிழ் வம்சாவளிப் குடும்பத்தில் பிறந்த இவர், 1967-இல் அங்குத் சொந்தமாகச் சட்ட நிறுவனம் ஒன்றை நிறுவினார்.

1980-களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று, 1988-ல் சட்ட அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

நவநீதம் பிள்ளை

1995-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ருவாண்டாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் (ICTR) நீதிபதியாகவும் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அங்கு, பாலின வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவது ஆகியவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்பதைச் சட்டப்பூர்வமாக நிறுவியதில் அவர் பெரும் புகழ்பெற்றார்.

பணிகள்

அதைத் தொடர்ந்து சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகச் பணியாற்றினார்.

மேலும், 2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கான ஐ.நா.வின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்ட நவி பிள்ளை, 2019-ல் மியான்மர் மீது சுமத்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தின் தற்காலிக நீதிபதியாகவும் பொறுப்பேற்றார்.

நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை

ஏன் நோபல் பரிசு?

நோபல் பரிசு வலைதளத்தின் தகவலின் படி, சர்வதேச சட்ட ஒழுங்கை மேம்படுத்துவதில் நவி பிள்ளையின் விலைமதிப்பற்ற பங்களிப்பை நார்வே நோபல் குழு சிறப்புறக் கவனிப்பதுடன், அவரது சட்டப் புலமை, தனிப்பட்ட நேர்மை மற்றும் இணையற்ற தைரியத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.

போர்களும் மோதல்களும் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில், சர்வதேச சட்ட நிறுவனங்களும் நீதிபதிகளும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் வேளையில்,

வன்முறை இன்றி மோதல்களைத் தீர்க்கும் திறன் சர்வதேச சட்டத்தின் ஆட்சியை நம்பியே உள்ளது என்பதை நோபல் குழு நினைவூட்ட விரும்புகிறது.

போர் அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் ஒரு சர்வதேச சட்ட அமைப்பே அமைதியான உலகத்திற்கான முதன்மை நிபந்தனையாகும்.

தற்போது அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தைத் தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.