மும்பையின் நெருக்கடி எனக்கு பிடிக்காது - புனே மலையடிவார பண்ணை வீட்டில் நானா படேகரின் இறுதிச்சடங்கு
இன்று காலை கோவாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமான நடிகர் நானா படேகர் எப்போதும் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்.
பொதுவாக நானா படேகருக்கு சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வேலை அதிகமாக மும்பையில்தான் இருக்கும். ஆனால் அப்படி இருந்தும் தனது வீட்டை மும்பையில் அமைத்துக்கொள்ளாமல் புனேயில் அமைத்துக்கொண்டார்.
நானா படேகர் பல தசாப்தங்களாக மும்பையில் பணிபுரிந்து வந்தாலும், மும்பையைத் தனது வீடாகக் கருதவில்லை என்று பலமுறை தெளிவுபடுத்தினார். பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் மும்பையில் சொகுசு பங்களாவில் வசித்து வரும் நிலையில், நானா படேகர் புனே அருகில் உள்ள சின்ஹாட் மலைப்பகுதியில் நிலத்தை விலைக்கு வாங்கி பண்ணை வீடு அமைத்து வாழ்ந்து வந்தார்.
அவர் தனது பண்ணை வீட்டில் தனக்கு தேவையான உணவு தானியங்களைத் தானே விவசாயம் செய்து வந்தார். அங்கு அவர் விவசாயம் செய்தார். தானே சமையல் செய்து சாப்பிட்டார். மலையேற்றத்தில் ஈடுபட்டார். ஆனால் திரைப்படத் துறையின் கூட்டங்கள், பார்ட்டிகளில் இருந்து விலகி வாழ்ந்தார்.
அவர் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், நான் மும்பையைச் சேர்ந்தவன் அல்ல. நகரத்தில் நான் பார்த்த மக்கள் கூட்டம் மற்றும் மாற்றங்கள் எனக்கு சங்கடமாக இருக்கிறது. 1985 மற்றும் 1986 இல் எனக்குத் தெரிந்த மும்பை, இப்போது மாறிவிட்டது.
இந்த மும்பை என்னுடையது அல்ல. சிங்காட் பள்ளத்தாக்குக்கு அருகில் இருக்கும் பண்ணை வீட்டில் இருக்கும்போது வாரத்தில் ஒரு நாள் மலையேற்றத்தில் ஈடுபடுவேன். எனக்கு முருத், கோவா, புனே, மும்பை மற்றும் கெட் (பண்ணை) ஆகிய இடங்களில் ஒரு வீடு உள்ளது.
நான் வேலை மற்றும் என் அம்மாவுக்காக மட்டுமே மும்பைக்கு வருகிறேன். எனக்கு இந்த மும்பை பிடிக்கவில்லை. எனக்கு இங்கு தங்குவது பிடிக்கவில்லை. நான் கிராமங்களில் அல்லது புனே அல்லது கோவாவில் தங்க விரும்புகிறேன். ஆனால் இங்கே இல்லை" என்று படேகர் கூறினார்.
நானா படேகரின் பண்ணை வீடு புனே அருகில் உள்ள சிங்காட் அருகே உள்ள டோன்ஜே-கடக்வாஸ்லா பகுதியில் இருக்கிறது. இந்தப் பண்ணை வீடு சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பாலிவுட் பிரபலத்தின் வீடு போன்று அல்லாமல் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.
மரத்தாலான தளபாடங்கள், டெரகோட்டா தரையமைப்பு மற்றும் பசுமையால் சூழப்பட்ட பெரிய திறந்தவெளிகள் கொண்ட ஒரு எளிய வீடாக அமைந்துள்ளது. நானா படேகர் அங்கு விவசாயம் செய்து கால்நடைகளை வளர்த்து வந்தார். அவர் பயிர்கள் மற்றும் காய்கறிகளைப் பயிரிட்டதாகவும், மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயற்கையுடன் நெருக்கமாக இருப்பதை நான் விரும்புகிறேன். நான் இதயத்தில் ஒரு விவசாயி" என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
நானாபடேகரின் மறைவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட மாநில அரசியல் தலைவர்கள் சரத்பவார், சுப்ரியா சுலே, ஏக்நாத் ஷிண்டே உட்பட தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.
தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நானா படேகரின் திடீர் மரணம் ஒரு பெரிய அதிர்ச்சியாகும். அவர் ஒரு சிறந்த நடிகராகவும், நண்பராகவும் இருந்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும் மராத்தி மற்றும் இந்தி சினிமாவிற்கு அர்ப்பணித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
பண்ணை வீட்டில் இறுதிச்சடங்கு
நானா படேகரின் இறுதிச் சடங்குகள் மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து நீர் பாதுகாப்புக்காகப் பாடுபடும் நானா படேகரின் நாம் அறக்கட்டளையின் அதிகாரி கணேஷ் தோரட் வெளியிட்டுள்ள செய்தியில், "நானா படேகரின் உடல் இன்று மாலை சுமார் 5 மணிக்குள் (புனேவிற்கு) கொண்டு வரப்படும், பின்னர் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அவரது பண்ணை வீட்டின் வளாகத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்படும். இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மூத்த நடிகரின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிராவின் கலாசார விவகார அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட செய்தியில், நடிகர் நானா படேகர் மராத்தி நாடகங்கள், மராத்தி மற்றும் இந்தி சினிமாவுக்கு ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அவரது இறுதிச்சடங்குகளை முழு அரசு மரியாதையுடன் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்று அமைச்சர் ட்வீட் செய்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


