Nana Patekar: 13 வயதில் ரூ.35 சம்பளம் - பெயிண்ட்டராக சினிமா பயணத்தைத் தொடங்கிய நானா படேகரின் கதை
பாலிவுட் நடிகர் நானா படேகர்(75) இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். நானா படேகர் தனது இளமைக் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தார்.
இதனால் தனது 13 வயதிலேயே வேலை செய்ய ஆரம்பித்தார். கடந்த 50 ஆண்டுகளில் இந்தி மற்றும் மராத்தி திரைப்படத்துறையில் படிப்படியாக உயர்ந்து ஒரு கட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்தார்.
அவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு நாடகத்தில் அதிக அளவில் நடிக்க ஆரம்பித்தார். அங்குதான் அவர் தனது மனைவியையும் சந்தித்தார்.
இளம் வயதில் பணக்கஷ்டத்தில் இருந்தது குறித்து நானா படேகர் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், சினிமா போஸ்டர்களை வரைந்ததாகவும், தினசரி சாப்பாடு மற்றும் 35 ரூபாய் ஊதியமாகச் சம்பாதிப்பதாகவும் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சினிமா சுவரொட்டிகளை ஓவியமாக வரையத் தொடங்கியபோது, எனக்கு 13 வயதுதான். பல கிலோமீட்டர்கள் நடந்து வேலைக்குச் சென்றேன்.
தினமும் ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டேன். அந்த ஆண்டுகள் எனது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டம். மக்கள் பணம் இல்லாத ஒருவரை ஒரு சுமையாகக் கருதுகிறார்கள்.
மும்பை சுனாபட்டியில் உள்ள தனது பணியிடத்திற்குச் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று என் குடும்பத்திற்கு உதவி செய்தேன் என்று குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நானா படேகர், காமன் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தீவிரமான, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களில் நடித்து நற்பெயரைக் கட்டியெழுப்பினார். அங்குஷ் மற்றும் பரிந்தா போன்ற படங்கள் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தன.
கிராந்திவீரில் அவரது நடிப்பு அவருக்குச் சிறந்த நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. ரூ.35 மட்டும் சம்பளம் வாங்கிய நானா படேகர் சம்பளம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. 1990களின் நடுப்பகுதியில், நானா படேகர் இந்தி சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரானார்.
அக்னி சாக்ஷி படத்தின் வெற்றிக்குப் பிறகு நானா படேகரின் சம்பளம் ஒரு படத்திற்கு ரூ.1.25 கோடியை எட்டியது. அந்த நேரத்தில், இந்தி திரையுலகில் திரைப்பட ஊதியத்தைப் பொறுத்தவரை அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக நானா படேகர்தான் அதிக சம்பளம் வாங்கினார்.
ரூ.80 கோடி சொத்து
நானா படேகரின் சொத்து மதிப்பு குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பல ஊடகச் செய்திகளில் அவரது சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், ஒரு திரைப்படத்திற்கு அவர் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இந்த அளவுக்கு சம்பளம் வாங்கினாலும் நானா படேகர் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். 2015 ஆம் ஆண்டில், அவர் மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரேவுடன் இணைந்து NAAM அறக்கட்டளையை நிறுவினார்.
இது மகாராஷ்டிராவில் வறட்சி மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது. பேட்டி ஒன்றில், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ முடிவு செய்தபோது, தன்னிடம் சுமார் 1 முதல் 1.5 கோடி ரூபாய் வரை இருந்ததாகக் குறிப்பிட்டார்.
திரைப்படங்களில் நடித்ததைத் தாண்டி, ராணுவத்துடன் நானா படேகரின் தொடர்பு இருந்தது. 1990-ல் அவர் இந்தியத் தரைப்படையின் டெரிட்டோரியல் ஆர்மியில் (Territorial Army) இணைந்தார். தனது ராணுவ அனுபவத்தைக் கொண்டு, பிரஹார்: தி ஃபைனல் அட்டாக் (Prahaar: The Final Attack) திரைப்படத்தைத் தயாரித்தார். அப்படத்தில் மேஜர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நானா படேகர் மூன்று ஆண்டுகள் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதுடன், அப்பயிற்சிக் காலத்தில் ஜெனரல் வி.கே. சிங்குடனும் இணைந்து பணியாற்றினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


