`முதல்வர் விஜய் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? - அமைச்சர் ராஜ் மோகன் அளித்த பதில் இதுதான்!

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``இந்தியாவின் பிரதமர் மோடியும், தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்யும் ஏன் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை? ஏன் செய்தியாளர்களைப் புறக்கணிக்கிறார்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதிலளித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நான், அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் போன்றோர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறோம். என்னைப் போன்ற எளியோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நாங்களும் முதல்வரும் வேறு வேறல்ல.

விஜய், மோடி

இது ஜனநாயக பூர்வமான அரசு மற்றும் கட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். முதல்வர் தனது சமூக வலைதளங்கள் வாயிலாக நன்கு பகுப்பாய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் மூலம் தன் கருத்தை தெளிவுபடுத்தி வருகிறார்" என்றார்.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள், `தேசிய அளவிலான ஞானேஷ் குமார் விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் மௌனமாக இருப்பது ஏன்? புதிய தலைமைச் செயலகம் குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் இதுவரை முதல்வர் அது குறித்து எதுவும் கூறவில்லையே எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், ``இது மக்கள் மன்றமே தவிர சட்டமன்றம் அல்ல. இங்கு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனடியாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அதிகாரிகள் முதற்கொண்டு ஆய்வுகள் மேற்கொண்டு, மக்களிடமும் கருத்துகளைக் கேட்கின்றனர். இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும். முதல்வர் அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் ஏற்ற நல்லதொரு முடிவையே எடுப்பார்.

சென்னையில் சிறுமிக்கு நடந்த பாலியல் அநீதி மிகவும் கண்டனத்திற்குரியது. அதேவேளையில், சிங்கப்பெண் படை தொடங்கப்பட்ட பிறகு பல்வேறு நன்மைகள் நடந்துள்ளன. இந்த சிங்கப்பெண் படையும் முதற்கட்டத்திலிருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் போது, சமூகத்தில் மிகப்பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சத்யபாமா
சத்யபாமா

பொதுவாழ்வில் 25 ஆண்டுகளைக் கடந்து சேவை செய்து வரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எந்த வன்முறையும் இல்லாமல் அமைதியான முறையில் தவெக-வின் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அதற்கு முதல்வருக்கு நன்றி. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் வதந்திகளை ஊடகங்கள் தீர விசாரிக்காமல் செய்திகளாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் வேட்பாளர் சத்தியபாமாவை பெட்டி பாமா என்றும், உருவக்கேலி செய்தும், வீடியோக்களை வெட்டி ஒட்டியும் திட்டமிட்டு கருத்து வன்முறை திணிக்கப்படுகிறது. அதேபோல, கோயில்களில் தமிழ் எழுத்துகள் நீக்கப்பட்டதாகப் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும், கரூர் அரசு மருத்துவமனையில் முந்தைய ஆட்சிக்காலத்தில் அச்சிடப்பட்ட இந்தி எழுத்துகள் கொண்ட மருந்துப் பைகளைத் தற்போதைய நிகழ்வு போலப் பரப்பியதும் பொய்ப் பிரசாரங்களாகும்." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.