மும்பை உணவகத்தில் தோசையில் செத்த எலி; ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் கைது; பின்னணி என்ன?

கடந்த மாதம் 24ம் தேதி மும்பை போரிவலியில் உள்ள ராதாகிருஷ்ணா ஹோட்டலுக்கு மான்சி ஆச்சார்யா என்ற பெண் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் சாப்பிட வந்திருந்தார்.

அவர்கள் மைசூர் மசாலா தோசை ஆர்டர் செய்தனர். அவர்கள் ஆர்டர் செய்த தோசை கொண்டு வந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் தோசைக்குள் செத்த எலி இருப்பதாக ஆச்சார்யா குற்றம் சாட்டினார்.

தோசைக்குள் ஒரு சிறிய இறந்த எலியைக் கண்டுபிடித்தபோது, ​​அவரது சகோதரர் ஏற்கனவே தோசையின் சிலவற்றை சாப்பிட்டு இருந்தார். எலி இருப்பதைப் பார்த்தவுடன் அவர் உடனடியாக வாந்தி எடுத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து உடனே போரிவலி போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு அந்த ஹோட்டலின் லைசென்ஸை உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சஸ்பெண்ட் செய்தது.

இதனால் ஹோட்டல் மூடப்பட்டது. இந்தப் பிரச்னை இத்தோடு முடியவில்லை. ஹோட்டல் உரிமையாளுக்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்தது. எலி இருந்த அந்த வீடியோவை மேலும் பரப்புவோம் என்று ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்தன.

அதோடு ஹோட்டல் உரிமையாளரின் உறவினர்களையும் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து செய்திகளைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது. போனில் பேசிய பெண் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பலமுறை தொலைபேசி அழைப்புகள் மூலம் ஹோட்டல் உரிமையாளரை அழைத்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரூ.6 லட்சம் கொடுப்பதாகக் கூறி இப்பிரச்னையில் ஹோட்டல் உரிமையாளர் சமரசம் செய்து கொண்டார்.

சிக்கிய புகார் செய்த பெண்

முதல் கட்டமாக ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது. எஞ்சிய தொகையைக் கொடுக்கும் முன்பாக ஹோட்டல் உரிமையாளர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து பணம் கேட்டு மிரட்டிய பெண்ணைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்தனர்.

எஞ்சிய பணத்தை வந்து வாங்கிச் செல்லும்படி ஹோட்டல் உரிமையாளர் மூலம் அப்பெண்ணிற்கு அழைப்பு விடுத்தனர். பணத்தை வாங்க வந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸார் கைது செய்தனர்.

அந்தப் பெண் வேறு யாருமல்ல. ஏற்கனவே ஹோட்டல் மீது எலி புகார் செய்த ஆச்சார்யாதான். இதையடுத்து அப்பெண்ணைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டு தோசையில் எலியை வைத்துவிட்டு பணம் கேட்டு மிரட்டினார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதில் தொடர்புடைய மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.