`தலைமைப் பொறுப்பு புதிதல்ல; எனினும் முன் நிற்கும் சவால்கள்.! - இறங்கி அடிப்பாரா ஸ்மிருதி மந்தனா?!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அணியை வழிநடத்திய ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, இந்திய அணியின் புதிய முழுநேர வெள்ளைப் பந்து கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை பி.சி.சி.ஐ நியமித்துள்ளது.

2013-ல் இந்திய அணியில் அறிமுகமான மந்தனா, கடந்த சில ஆண்டுகளாக அணியின் முக்கியமான வீராங்கனையாகவும், ஹர்மன்ப்ரீத் கவுரின் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். தற்போது இந்திய அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு ஏற்கெனவே உள்ளது. முழுநேர கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 18 டி20 சர்வதேச போட்டிகளிலும், 4 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

தலைமைப் பொறுப்பு புதிதல்ல!

மந்தனாவுக்கு இப்போது கேப்டன் பொறுப்பு கிடைத்திருப்பது புதிய அனுபவம் என்றாலும், தலைமைப் பொறுப்பு அவருக்குப் புதிதல்ல.

ஸ்மிருதி மந்தனா

இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கவுரின் துணைக் கேப்டனாக இருந்ததுடன், அவருக்குப் பதிலாக சில தொடர்களில் அணியை வழிநடத்தியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அணியை எப்படி கையாள வேண்டும், களத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்பதில் அவருக்கு ஏற்கெனவே அனுபவம் இருக்கிறது. அதற்கு மேலாக, Women’s Premier League-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் மந்தனா செயல்பட்டு வருகிறார்.

WPL-ல் இரண்டு முறை சாம்பியன்!

மந்தனாவின் கேப்டன்சி திறனைப் புரிந்துகொள்ள WPL பயணம் முக்கியமானது.

2024-ல் RCB-யை முதல் முறையாக WPL சாம்பியனாக்கிய மந்தனா, 2026-லும் அணியை மீண்டும் கோப்பை வெல்லச் செய்தார். 2026 இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 203 ரன்கள் எடுத்த நிலையில், மந்தனா 41 பந்துகளில் 87 ரன்கள் விளாசி RCB-யின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அந்த சீசனில் 377 ரன்களுடன் ஆரஞ்சு கேப்பையும் வென்றார்.

RCB கேப்டன் ஸ்மிருதி மந்தனா

இந்த வெற்றியின் மூலம் WPL-ல் இரண்டு முறை கோப்பையை வென்ற இரண்டாவது அணியாக RCB உருவானது. அதே நேரத்தில், இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருதையும் மந்தனா பெற்றார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் முன்பே, ஒரு பெரிய டி20 பிரான்சைஸ் (Franchise) அணியை இரண்டு முறை சாம்பியனாக்கிய அனுபவம் மந்தனாவுக்கு இருக்கிறது.

மூன்று வடிவங்களிலும் முக்கிய வீராங்கனை!

கேப்டனாக மட்டுமல்லாமல், பேட்டராகவும் மந்தனாவின் இடம் இந்திய அணியில் மிகவும் முக்கியமானது. 2013-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

2026 செப்டம்பரில் ஹாங்காங் அணிக்கு எதிரான டி20 போட்டியில் 124 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக மிதாலி ராஜை முந்தினார். அந்த சதம் அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் 18-வது சதமாகவும் அமைந்தது. இதன் மூலம் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் பெற்றார். மேலும், மூன்று சர்வதேச வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையும் மந்தனாவுக்கு உள்ளது.

மந்தனா முன் நிற்கும் சவால்கள்!

கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள மந்தனாவுக்கு முன் மிகப்பெரிய சவால், இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்திய அணி 2025-ல் முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அந்த வெற்றிக்குப் பிறகு அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்போது அந்த அணியைத் தொடர்ந்து வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மந்தனாவுக்கு வந்துள்ளது.

Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா
Smriti Mandhana - ஸ்மிருதி மந்தனா

அதே நேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளும், இளம் வீராங்கனைகளும் இருக்கின்றனர். ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா உள்ளிட்ட வீராங்கனைகளிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதும் கேப்டனாக மந்தனாவின் முக்கியப் பணியாக இருக்கும்.

அதில் இன்னொரு சவால், கேப்டன்சியையும் தனது பேட்டிங்கையும் சமநிலைப்படுத்துவது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில், களத்தில் அணியின் முடிவுகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.

கேப்டனாக முதல் தொடர் – ஜிம்பாப்வே!

முழுநேர கேப்டனாக மந்தனாவின் முதல் தொடர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடரில் முதலில் மூன்று டி20 போட்டிகளும், பின்னர் மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. டி20 தொடர் ராய்ப்பூரிலும், ஒருநாள் தொடர் வடோதராவிலும் நடைபெறுகிறது. இந்திய அணியின் டி20 அணிக்கு மந்தனாவும், துணைக் கேப்டனாக ஷஃபாலி வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுரின் ஒரு முக்கியமான அத்தியாயத்துக்குப் பிறகு, புதிய தலைமைப் பொறுப்பு தொடங்குகிறது. துணைக் கேப்டனாக அணியை அறிந்தவர்; இந்திய அணியை ஏற்கெனவே வழிநடத்தியவர்; WPL-ல் இரண்டு முறை கோப்பை வென்றவர். இப்போது அந்த அனுபவங்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து இந்திய அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஸ்மிருதி மந்தனாவிடம் வந்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.