தவெக: மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை? - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார்.

அமைச்சர் ரமேஷ் அவரைச் சமாதானப்படுத்தி சூழலை இலகுவாக்கினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சபையில் தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி ஏன் அப்படி கோபப்பட்டார் எனக் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.

தவெக திருவெறும்பூர் எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய லோக்கல் தவெகவினர் சிலர், நவல்பட்டு விஜி ஒன்றும் ரசிகர் மன்றத்தில் இருந்தோ மக்கள் இயக்கத்தில் இருந்தோ வந்தவர் இல்லை. அவர் திமுகக்காரர். அங்கே கே.என்.நேரு Vs அன்பில் மகேஸ் பாலிட்டிக்ஸில் சிக்கி முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார். இவர் கே.என்.நேரு ஆதரவாளர் என்பதால் தொகுதிக்குள் அன்பில் மகேஸ் கேங் இவருக்கு மரியாதையே கொடுக்காது.

தேர்தல் நெருக்கத்தில் எங்களின் தலைமை அன்பில் மகேஸின் திருவெறும்பூர் தொகுதிக்கு ஒரு வலுவான வேட்பாளரைத் தேடியது. சிட்டிங் அமைச்சரின் தொகுதி என்பதால் பெரிதாக யாரும் நிற்க விரும்பவில்லை. நிற்கிறேன் என விருப்பம் தெரிவித்தவர்களும் வலுவானவராக இல்லை.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுதான் நவல்பட்டு விஜி சீனுக்குள் வருகிறார். லோக்கல் மா.செவைப் பிடித்து எங்களின் தலைமைக்குத் தூது விடுகிறார். மகேஸை எதிர்க்க திமுகவிலிருந்தே ஒரு ஆள் வருவதால் எங்களின் தலைமையும் அவரை வேட்பாளர் ஆக்கியது.

தமிழகம் முழுவதையும் போல திருவெறும்பூர் தொகுதியிலும் எங்களின் தலைவர் முகத்துக்காகத்தான் ஓட்டு விழுந்து விஜி வென்றார். ஆனால், அமைச்சரையே தோற்கடித்ததால் தலைமை தன்னைக் கவனித்து அமைச்சர் பதவி வழங்கும் என எதிர்பார்த்தார்.

நவல்பட்டு விஜி
நவல்பட்டு விஜி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வென்ற ரமேஷை அமைச்சராக்கிவிட்டு, துறையூரில் வென்ற ரவிசங்கரை துணை சபாநாயகராக்கிவிட்டு இவரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். எம்.எல்.ஏ ஆனவுடன் ஏற்கனவே கட்சியில் இருக்கும் மக்கள் இயக்க நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு தன்னுடைய ஆட்களை கட்சிக்குள் நுழைக்க முயன்றார்.

அதனால் லோக்கல் நிர்வாகிகளுக்கும் விஜிக்கும் முட்டிக் கொண்டது. பனையூரில் நடந்த ஓர் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே ஆதவ் அர்ஜுனாவிடம் கொஞ்சம் ஏத்தமாக, நாங்கெல்லாம் எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிங்க யாரும் எங்களை மதிக்கிறது இல்ல. கொஞ்சம் கண்டிச்சு வையுங்க என எகிறியிருந்தார்.

வேறு கட்சியிலிருந்து வந்த உங்களுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியதே பெருசு. பக்குவமாக நடந்துக் கொள்ளுங்கள் என ஆதவ்வும் விஜியை எச்சரித்துவிட்டார்.

எம்.எல்.ஏக்களை மாவட்டச் செயலாளர் ஆக்கியபோது திருவெறும்பூரின் மா.செவாக விஜியை நியமித்தார்கள். திமுகவில் மா.செக்கள் குறுநில மன்னர்கள் போல இருப்பார்கள். மாவட்டத்துக்குள் அவர்கள் வைத்ததுதான் சட்டம். கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் மா.செவுடன் கலந்தாலோசிக்காமல் மாவட்டத்துக்குள் வரமாட்டார்கள். ஆனால், இங்கே மாவட்டச் செயலாளர் பதவிக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது.

அது ஒரு நிர்வாக வசதிக்கான பதவி மட்டுமே. மாவட்ட அமைச்சர்களும் தலைமையுமே எல்லா முடிவையும் எடுக்கும். சிட்டிங் அமைச்சரைத் தோற்கடித்ததற்கு அமைச்சர் பதவியும் கொடுக்கவில்லை. அதிகாரமில்லாத மா.செ பதவியைக் கொடுத்து உட்கார வைத்துவிட்டார்களே எனும் ஆதங்கம் அவரிடம் உண்டு.

விஜி
விஜி

இந்த நிகழ்ச்சியிலும் சீனியர் எம்.எல்.ஏவான இவர் நிற்கும்போது அமைச்சர் ரமேஷ் முசிறி விக்னேஶூக்கு மெழுகுவர்த்தியைக் கொடுத்துவிட்டார். அவரும் ஏற்றிவிட்டு விஜியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுக்காமல் காங்கிரஸ் எம்.பியிடம் கொடுத்துவிட்டார். ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் விஜியை இது இன்னும் கடுப்பேற்றிவிட்டது.

அதனால்தான் மேடையிலேயே கொந்தளித்துவிட்டார். ஆனாலும், விஜியின் இடத்தில் மக்கள் இயக்கத்தில் இருந்து வந்த ஒரு ஆள் இருந்திருந்தால் அமைதியாகத்தான் போயிருப்பார். இவர்தான் இப்படி அவசரப்பட்டு ரியாக்ட் செய்து நெகட்டிவ் ஆக்கிவிடுகிறார். இதை எங்களின் தலைமை ரசிக்காது என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.