விவாகரத்து பெற்ற மனைவிக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஒன்று கூடிய ஆண்களின் கோரிக்கைகள் என்னென்ன?

தற்போது பித்ரு பக்‌ஷா எனப்படும் 16 நாள் சடங்குகள் நடந்து வருகிறது. இந்த 16 நாட்களில் இறந்த உறவுகளுக்கு திதி அல்லது திவசம் கொடுக்கப்படுவது வழக்கம்.

ஒவ்வொருவரும் தங்களது இறந்த உறவுகளுக்காக ஆறுகள், கடல்கள் மற்றும் நீர்நிலைகளில் இது போன்ற சடங்குகளைச் செய்வது வழக்கம். மும்பையின் தென்பகுதியில் உள்ள பானகங்கா குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் இறந்தவர்களுக்காக உறவினர்கள் திதி கொடுப்பது வழக்கம். பானகங்கா தீர்த்தம் என்பது ராமர் வனவாசம் சென்ற காலத்தில் உருவாக்கியது என்று கூறப்படுவதுண்டு.

இந்தப் பானகங்கா தீர்த்தத்தில் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் கூடினர். அவர்கள் அனைவரும் திருமண உறவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது மனைவிகள் அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதையடுத்து பிரிந்து சென்ற தங்களின் மனைவிக்கு 40க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று சேர்ந்து பானகங்கா தீர்த்தத்தில் திதி கொடுத்தனர்.

ஆண்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் தி வாஸ்தவ் அறக்கட்டளையின் நிறுவனர் அமித் தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதற்கு நாட்டியம்ச பிண்டம் எனப் பெயரிட்டு சடங்குகளை வழிநடத்தினார்.

இது குறித்து தேஷ்பாண்டே கூறுகையில், பிரிந்த உறவுகளுக்கு இந்த அடையாள இறுதிச்சடங்குகளைச் செய்வதன் மூலம், கடந்தகால மன உளைச்சலில் இருந்து விடுபடவும், தங்கள் வாழ்க்கையை முன்னேற்றவும் ஆண்கள் உதவி பெறுகிறார்கள். திருமணம் மற்றும் விவாகரத்து சட்டபூர்வமான நிகழ்வுகள் என்றாலும், இந்து திருமண சடங்குகளுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட தெளிவின்மை உள்ளது.

இந்து மத நூல்கள் விவாகரத்து பற்றி குறிப்பிடவில்லை, மேலும் இந்தச் சடங்குகள் ஒரு மத சபதத்திற்கு முறையான முடிவைக் குறிக்கின்றன" என்று தேஷ்பாண்டே கூறினார்.

இந்த அறக்கட்டளை குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் இருந்து ஆண்களுக்குப் பாதுகாப்பு பெறுதல், பாலின வேறுபாடுகளை நீக்குதல், பெண் என்ற குறிப்புகளை மனைவி என்று மாற்றுவது உட்பட பல்வேறு கோரிக்கைக்காக இந்த அமைப்பு போராடி வருகிறது.

மேலும் ஆண்களை பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க தனிச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.