BB Tamil 10: அலைப்பறை செய்த ஜோடி; சிக்ஸர் அடிக்கும் முனியம்மாள் - 4வது வாரம் எப்படி? | சுரேஷ் கண்ணன்

அதிக அளவிலான எவிக்ஷன்களும் அதிக அளவிலான வைல்ட் கார்ட் என்ட்ரிகளும் கொண்ட சீசனாக இது இருக்கும் போல தெரிகிறது. என்ன குறளி வித்தையாவது காட்டி சீசனை உசுப்பேற்ற முயல்கிறார்கள்.

ஏதாவதொரு மாற்றத்தை செய்து கொண்டே இருந்தால் ஷோவின் மீது கவனம் கூடும் என்கிற கணக்கு போல. ‘மாற்றம்’ என்பதுதானே தமிழக மக்களின் சமீபத்திய டிரெண்டிங் விருப்பம்.

செலிபிரிட்டிகளை விடவும் காமன்மேன் வாய்ப்பில் வந்தவர்கள் ஆட்டத்தை திறமையாக ஆடுகிறார்கள். புதிதாக வந்திருக்கும் வாசன், கரிஷ்மா, அக்ஷிதா ஆகியோர் என்ன செய்வார்கள் என்று பார்க்கலாம்.

BB Tamil Season 10

நான்காவது வாரத்தில் என்ன நடந்தது?

இந்த வாரத்தில் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களையும் சுவாரசியமான காரெக்டர்களையும் மட்டும் விரிவாகப் பார்க்கலாம்.

முதலில் விஜய் சேதுபதியிடமிருந்தே துவங்கி விடுவோம்.

கமல்ஹாசன் ஹோஸ்ட்டாக இருந்தவரை, வார எபிசோடுகளைப் பார்க்காதவர்கள் கூட, கமலுக்காகவே வீக்கெண்ட் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் உண்டு. ஆனால் விஜய் சேதுபதி வந்தவுடன், பிக் பாஸ் லைவ் உட்பட பார்ப்பவர்கள் கூட வீக்கெண்ட் நிகழ்ச்சியைப் பார்த்து சோர்வாகி விடுகிறார்கள். இதற்கு நானே சாட்சி.

கமலின் விசாரணையே அத்தனை சுவாரசியமாக இருக்கும். ஆட்டத்தில் சறுக்கிய போட்டியாளரிடம் முகத்தில் அறைவது போல் கேள்வி கேட்காமல், சுற்றி வளைத்து சிலந்தி வலை மாதிரி பின்னி முத்தாய்ப்பாக ஓரிடத்தில் நிறுத்தி கொக்கியைப் போடும் போது எந்தவொரு போட்டியாளரும் தப்பிக்க முடியாது. கோர்ட் ரூம் டிராமா மாதிரி இந்த மாதிரியான காட்சிகள் பார்க்கவே சுவையாக இருக்கும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், போட்டியாளர் தான் செய்த தவறை தானே உணர்ந்து ஒப்புக் கொள்ளுமளவிற்கு அழுத்தமான வார்த்தைகளில் விவரிக்கும் கமல், அதே சமயம் அவரது மனம் காயப்படாமலும் ஜாக்கிரதையாக நடந்து கொள்வார். அவர் நிகழ்த்தும் வார்த்தை விளையாட்டுகள், அதிலிருக்கும் அபாரமான நகைச்சுவை, இயன்ற வரை ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் போன்றவை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும்.

சில விஷயங்களுக்கு தன்னுடைய திரை வாழ்க்கை, சொந்த அனுபவம் போன்றவற்றில் இருந்து உதாரணம் சொல்லி இன்ஸ்பயர் செய்வார். (‘நான் இருந்த ஊரில் ஒரு ராஜாஇருந்தார்’ என்கிற மாதிரி சமயங்களில் இது ஓவர் டோஸாகவும் ஆகி விடும்). மிக முக்கியமாக புத்தகப் பரிந்துரை. வாரம் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை சுருக்கமாக விவரிப்பார்.

‘மிஸ் யூ கமல்’ என்று சொல்ல வைக்கிறாரா, விஜய் சேதுபதி?

ஆனால் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்த போது இந்த மாதிரியான சுவாரசியங்கள் பெருமளவு காணாமல் போய் விட்டன. அஃப்கோர்ஸ், கமல் மாதிரியே விஜய் சேதுபதியும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூற முடியாது. விசே அவருடைய ஸ்டைலில் நடத்துவதுதான் முக்கியம்தான். ஆனால் சுவாரசியம்?

ஒரு திறமையான நடிகராக விசேவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் பிக் பாஸ் ஷோவின் ஹோஸ்ட் ஆக என்னால் அதிகம் ரசிக்க முடியவில்லை. ‘சுவாரசியமா ஆடுங்க’ என்று போட்டியாளர்களை தொடர்ந்து வலியுறுத்தும் விசே, தன்னுடைய ஹோஸ்ட் பணியை சுவாரசியமாக ஆக்க வேண்டாமா?

மாறாக விசே என்ன செய்கிறார்? கறாரான வாத்தியார் மாணவர்களை அதட்டி உட்கார வைப்பது போல நடந்து கொள்கிறார். போட்டியாளர்களை முழுமையாக பேச விடுவதில்லை. விசேவின் மனதிற்குள் ஒரு பதில் இருக்கிறது. அது கிடைக்கவில்லையென்றால் உடனே டென்ஷன் ஆகிறார். எதையோ சொல்ல முற்படுபவர்களை ‘உட்காருங்க’ என்று உடனே துண்டிக்கிறார்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

நடிகரைத் தாண்டி விசே ஒரு நல்ல சிந்தனையாளர் என்பது அவரது நேர்காணல்களின் மூலம் தெரிகிறது. அத்தகைய நுண்ணுணர்வுகளை இந்த ஷோவில் கை விட்டு விட்டு பிக் பாஸ் டீமின் மௌத் பீஸாக மட்டுமே இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. போட்டியாளர்களுக்கு எத்தனை நெருக்கடி தர முடியுமோ அத்தனையும் தந்து ஆட்டத்தை பரபரப்பாக்குவதுதான் பிக் பாஸ் டீமின் நோக்கம்.

அவற்றில் பொருத்தமற்ற டாஸ்க்குகள், விதிகள் இருந்து அவற்றைப் பற்றி போட்டியாளர்கள் பேசினால் அவற்றை சரியான பார்வையில் அணுகுவது தொகுப்பாளரின் பணி. ஆனால் விசே என்ன செய்கிறார் என்றால், பிக் பாஸ் டீம் தரும் அதே நெருக்கடியை போட்டியாளர்களின் மீது சுமத்துகிறார்.

உதாரணத்திற்கு, ஆளும் அணி vs எதிரணியாக வீடு இருந்த போது, ஓர் அணி இன்னொரு அணிக்கு உதவக்கூடாது என்று விதி இருந்தது. ஆனால் தான் சாப்பிட்ட தட்டை தானே அலசி வைத்து விடலாம் என்று எதிரணியில் சிலர் யோசித்து செயல்படுத்தினார்கள். இது அடிப்படை நாகரிகம். ஆனால் வார இறுதியில் வந்த விசே “எதிர் டீமிற்கு உதவவா வந்தீர்கள்?” என்று கேட்டு கண்டித்தார்.

“உடலளவில் பலமாக இருக்கிற ஆண்களோடு, பெண்களும் பலவீனமானவர்களும் பிஸிக்கல் டாஸ்க்கில் எப்படி போட்டி போட்டு ஜெயிக்க முடியும்?” என்கிற கேள்வியை ஷமா விதம் விதமாக கேட்டார். அவருடைய சந்தேகமும் கேள்வியும் நியாயமானது.

BB Tamil Season 10
BB Tamil Season 10

உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச போட்டிகள் வரை சமபலம் உள்ளவர்களை மோதச் செய்யும் அளவில்தான் விதிகள் இருக்கின்றன. ஆனால் பிக் பாஸில் மட்டும் இப்படிப்பட்ட விதிகள் இருக்காது. “உங்களுக்கு கேம் புரியுதா இல்லையா.. பிக் பாஸ் ஷோவை முன்னாடி பார்த்திருக்கீங்களா.. இல்லையா?” என்று கேட்டு ஷமாவை கண்டித்து அமர வைத்தார் விசே. இந்த வீக்கெண்ட் ஷோவில், வாசனின் நண்பரையும் கூட பேச விடாமல் கட் செய்தார்.

விசேவின் இந்த இயந்திரத்தனமான ஹோஸ்டிங்கால் வார இறுதியைக் காணும் சுவாரசியம் குறைகிறதோ என்று தோன்றுகிறது.

‘நான் வளர்கிறேனே மம்மி’ என்கிற மாதிரி ஒவ்வொரு வாரமும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் போட்டியாளர் முனியம்மாள்தான்.

பிக் பாஸ் ஆட்டம் என்பது சிக்கலானது. நுட்பமானது. பழம் தின்று கொட்டை போட்ட புத்திசாலிகளே உள்ளே வந்த பிறகு மிகவும் தடுமாறிப் போயிருக்கிறார்கள். செலிபிரி்ட்டிகளே குப்புற வீழ்ந்திருக்கிறார்கள். ஆனால் கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த ஒருவர் இந்த ஆட்டத்தின் சூட்சுமத்தை தன்னிச்சையாகப் படித்து விட்டு சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்.

‘நான் ரொம்ப நல்லவன் சார். அதிகமா பேச மாட்டேன். இன்னொருத்தர் மனம் காயப்படும் படி எதையும் செய்ய மாட்டேன். நான் நானா இருப்பேன்” என்று ஒருவர் இருந்தால் அது வெளி வாழ்க்கைக்கு சரி. ஆனால் பிக் பாஸ் ஆட்டத்திற்கு ஒத்து வராது. அவர் நல்லவராக மட்டுமல்ல, வல்லவராகவும் இருந்தால்தான் இங்கு சர்வைவ் ஆக முடியும்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

‘ஓ அமைதியாக இருந்தால் பிரச்சினையா.. சரி.. வருவோர்.. போவோரிடமெல்லாம் ஒரண்டை இழுக்கிறேன்.. என் இருப்பை காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அடாவடித்தனம் செய்ய வேண்டுமொ, அதையெல்லாம் செய்கிறேன்..” என்று ஒருவர் முடிவெடுத்து செயற்கையாக செயல்பட்டால் அவரும் கூட வீழ்ந்து விடுவார். சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, பார்வையாளர்களே அவரை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். வாக்களிப்பில் தோற்று அவர் வெளியே செல்ல வேண்டியதுதான்.

அப்படியும் இல்லாமல், இப்படியும் இல்லாமல் நடுவாந்திரமாக வண்டியை ஓட்டிக் கொண்டு சேஃப் கேம் ஆடலாம் என்றும் இருக்க முடியாது. எங்காவது உங்களின் சுயம் அம்பலமாகி நிச்சயம் மாட்டிக் கொள்வீர்கள். இந்த ஆட்டத்தின் ஃபார்மட் அப்படி.

இப்படியொரு சிக்கலான ஆட்டத்தில்தான் முனியம்மாள் தொடர்ந்து சிக்சராக அடித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களைப் பற்றி ஏதாவது கருத்து சொல்லும் டாஸ்க் என்றால் பெரும்பாலோனோர் மென்று முழுங்கி, மற்றவர்களின் முகத்தைப் பார்த்து தயங்கிக் கொண்டிருக்கும் போது முனியம்மாள் மட்டும் உடனுக்குடன் பெயர்களைச் சொல்கிறார். அது தனிமனித விரோதத்திலிருந்து எழுவதாக இல்லாமல் சம்பந்தப்பட்ட டாஸ்க்கிற்கு பொருத்தமானதாக இருக்கிறது.

நன்றாக படித்தவர்கள், நகர வாழ்க்கையின் எக்ஸ்போஷர் உள்ளவர்கள், செலிபிரிட்டி அந்தஸ்தைக் கொண்டவர்கள்... இவர்களைப் போன்ற போட்டியாளர்களே இந்த ஆட்டத்தை எப்படி ஆடுவது என்று திகைத்துக் கொண்டிருக்கும் போது கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் முனிம்மாள், இந்த ஆட்டத்தின் நுட்பத்தை தன்னிச்சையாகப் புரிந்து கொண்டு சிறப்பான பங்களிப்பை அளிப்பது எனக்கு ஒருவகையான ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

BB Tamil Season 10
BB Tamil Season 10

நகரத்தின் செயற்கையான ஒப்பனைகளோ, வரவழைத்துக் கொண்ட புத்திசாலித்தனங்களோ அல்லாமல், ஒரு நீர்வீழ்ச்சி மாதிரி தன்னிச்சையாக பொங்கி வழிந்து கொண்டேயிருக்கும் முனியம்மாளைப் பார்க்க அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. ஒரு குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு வீடெங்கும் ஒற்றையாளாக விளையாடிக் கொண்டிருப்பதைப் போல அவர் பாட்டுக்கு செயல்பட்டு இந்த ஆட்டத்தை நகர்த்திக் கொண்டே செல்கிறார்.

அஃப்கோர்ஸ், முனியம்மாளிடம் சில எதிர்மறைப் பண்புகள் இருக்கின்றன. அடாவடியாக பேசுவது, நடந்து கொள்வது, வேலை செய்யாமல் டபாய்ப்பது போன்ற பலவீனங்களும் உள்ளன. ஆனால் அவையெல்லாம் இணைந்துதான் முனியம்மாள் சுவாரசியமான போட்டியாளராக இருக்கிறார். இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் அனுபவிக்கிறார். ‘இந்த ஆட்டத்தின் இறுதி வரை தான் இருக்க மாட்டோம்’ என்கிற தெளிவான புரிதல் கூட அவரிடம் இருக்கிறது.

வீக்கெண்ட் எபிசோடுகளில், விஜய் சேதுபதியை எதிர்கொள்ள முடியாமல் மற்ற போட்டியாளர்கள், தத்தளித்துக் கொண்டிருக்கும் போது முனியம்மாள் மட்டும் எந்தவொரு கேள்வியையும் அநாயசமாக எதிர்கொள்கிறார். பார்வையாளர்கள் கைத்தட்டி ரசிக்கிறார்கள். விஜய்சேதுபதியும் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொள்கிறார். முனியம்மாள் வீட்டின் கேப்டன் ஆனால் எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

BB Tamil Season 10
BB Tamil Season 10

நடந்து முடிந்த ஹோட்டல் டாஸ்க்கில், ஊழியர்களிடம் பிழியப் பிழிய வேலை வாங்கி டார்ச்சர் செய்வதுதான் டாஸ்க்கை கையாளும் சிறந்த வழி என்பதாக கெஸ்ட்டுகள் புரிந்து கொண்டார்கள். கெஸ்ட்டுகளிடம் கெட்ட பெயர் வாங்காமல் பணிவாக இருப்பதுதான் பெஸ்ட் என்று ஊழியர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே ஹோட்டல் டாஸ்க் மிக மிக மந்தமாக நகர்ந்தது.

ஆனால் இதை எண்டர்டெயினிங் கலந்து சுவாரசியப்படுத்தியதில் முனியம்மாவின் பங்கு முக்கியமானது. ரிசப்னிஸ்ட் என்றாலே நுனி நாக்கு ஆங்கிலத்துடன், வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்கிற ஸ்டீரியோடைப்பை உடைத்து முனியம்மாளிற்கு ரிசப்னிஸ்ட் பணி தரப்பட்டதே சுவாரசியம். இயங்காத கணிணியில் படபடவென்று டைப் செய்வது, வேலை செய்யாத டெலிபோனில் பேசுவது, ராகவ்விடம் அசடு வழிவது, அன்சரிடம் ஒரண்டை இழுப்பது என்று அசத்தினார்.

அஷ்மிதா, சவின்யாவிற்கான கூடுதல் தண்டனையாக கயிற்றின் அளவை மூன்றடியாக குறைத்த போது ‘அஷ்மிதா ஏற்கெனவே கயித்தை நல்லா சுத்தி வெச்சிருக்காங்க. ரெண்டும் ஒண்ணுதான்’ என்று முனி அடித்த கமெண்ட் சுவாரசியம். முகேஷிற்கும் ஷாதிகாவிற்கும் இடையே நடந்த ‘லவ் டிராக்கில்’ முகேஷின் அம்மா என்கிற பாத்திரத்தில் முனியம்மாள் அடித்த கமெண்ட்டுகள் அனைத்தும் சிரிக்க வைத்தவை.

விதிகளை மீறி ஆப்பிளை எடுத்து தின்றது, பசி தாங்காமல் கிச்சனுக்குள் புகுந்து உணவு எடுத்தது, இரவு நேரத்தில் டாஸ்க் தவிர்த்து தூங்கச் சென்றது போன்ற விதிமீறல்களையும் செய்து கலகவாதியாக இருக்கிறார் முனியம்மாள். உழைக்கும் மக்களால் பசியையும் தூக்கத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதற்கான உதாரணம்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

உருக்கமான காரணத்துடன் வெளியேறிய ஜென்டில்மேன் - குமரன்

பிக் பாஸிற்கு பிடிக்காத ஒரே தமிழ் வார்த்தை ‘நிதானம்’. பொறுமையை குணாதிசயமாக கொண்ட போட்டியாளர்கள் மலினமான சொற்களால் இங்கு அவமானப்படுத்தப்படுவது வழக்கம். இந்த வரிசையில் அதிகம் வசை பாடப்பட்டவர் குமரன். ‘மிக்சர் மாமா’, ‘சிம்ப்ளி வேஸ்ட்’ என்கிற பட்டப்பெயர்கள் அவருக்கு கிடைத்தன. “நீங்க ஆட்டத்துல இருக்கீங்களான்னே தெரியல” என்று சக போட்டியாளர்களாலும் விசேவாலும் தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டவர்.

ஒருவர் இயல்பிலேயே பொறுமையானவராகவும், பிறர் மனம் காயப்படும் சொற்களை எளிதில் சொல்ல முடியாதவராகவும், வாய்ச்சண்டை போடத் தெரியாதவராகவும் இருப்பதெல்லாம் நல்ல குணங்கள்தான். ஆனால் பிக் பாஸ் ஆட்டத்தில் மட்டுமல்ல, வெளியுலகிலும் அதுவே மைனஸ் பாயிண்ட்டாக மாறி விடும். அதுதான் குமரனுக்கும் நிகழ்ந்தது.

சீஸ் ஹவுஸ் டாஸ்க்கில், ஷமாவிற்கு மயக்கம் வந்து விழுந்த போது பதறியவர்களுள் ஒருவர் குமரன். ஆனால் ஷமாவோ “நீங்க ஜேசனுக்கு ஜால்ரா போடுகிற ஆள்’ என்று அவரையே திட்டினார். அப்போதுதான் குமரனுக்கு கோபம் வந்து “நான் உங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணேன்’ என்றார். ஆனால் வீக்கெண்ட் ஷோவில் ‘குமரனுக்கு ரோஷமே வரலை’ என்று பொய்யாக குற்றம் சாட்டினார் ஷமா. குமரனின் வாதம் அங்கு எடுபடவில்லை.

பிக் பாஸ் போன்ற கோக்குமாக்கான போட்டிக்கு தான் தகுதியான நபரா, அங்கு நம்மால் தாக்குப் பிடிக்க முடியுமா என்று உள்ளே நுழைவதற்கு முன்னால் நிறைய யோசிக்க வேண்டும். ஒருவன் தன்னை முதலில் அறிந்தால்தான் உலகத்தை ஜெயிக்க முடியும்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

குமரனை பலவீனமான போட்டியாளர் என்று நினைத்து LP கயிறு கட்டியது புத்திசாலித்தனமான கணக்கு. அவர் சவால் வேண்டும் என்று நினைத்திருந்தால் அவினாஷை தேர்ந்தெடுத்திருக்கலாம். LP கணக்கு போட்ட மாதிரியே குமரன் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார். தனக்காக பேசும் வாய்ப்பு வந்த போது சிறப்பாக தன்னை வெளிப்படுத்தினார்.

பணப்பெட்டி வாய்ப்பு வந்த போது அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது குமரனின் புத்திசாலித்தனம். பலவீனமான போட்டியாளர் என்று தொடர்ந்து முத்திரை குத்தப்படும் தான் இந்த வாரம் எப்படியும் வெளியேற்றப்படுவோம் என்பதை உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது. இதையும் வெளியேறுவதற்கான காரணத்தை அவர் சொன்னது உருக்கமானது.

பெற்றோர்களை அவர்களின் இறுதி நாட்களில் முழுமையான அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொள்வது பிள்ளைகளின் அவசியமான கடமை. அப்போது அந்தக் கடமையைச் செய்யாமல், பிறகு குற்றவுணர்வு அடைந்து வருந்துவதால் உபயோகமில்லை. அந்த வகையில் ஒரு நல்ல மகனாக நடந்து கொண்ட குமரன், எவிக்ஷனின் போது சக போட்டியாளர்களால் ‘ஜென்டில்மேன்’ என்கிற நன்மதிப்புடன் வெளியேறியது கம்பீரம். சில போட்டியாளர்கள் வெளியேறும் போதுதான், பார்வையாளர்களுக்கு உண்மையான வருத்தம் வரும். அப்படியொரு வருத்தத்தை தனது நற்குணங்களால் ஏற்படுத்தினார் குமரன்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

கயிறு இழுக்கும் போட்டியில் அதிக அலப்பறை செய்த ஜோடி

கயிறு மாட்டிக் கொண்ட ஜோடிகளில் அஷ்மிதா - சவின்யா ஜோடியின் போராட்டம்தான் அதிகமாக இருந்தது. ஒருவகையில் சவின்யாவிற்குத்தான் அஷ்மிதா நன்றி சொல்ல வேண்டும். அதுவரை பலவீனமான போட்டியாளர்களுள் ஒருவராக அஷ்மிதா சொல்லப்பட்டுக் கொண்டு வந்தார். ஆனால் சவின்யாவுடன் நிகழ்த்திய தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் அஷ்மிதாவுடன் மனவலிமை அவருக்கே தெரிய வந்தது. ‘ரைட்ரா.. இனி இந்த வீ்ட்ல எவ்ள அடிச்சாலும் தாங்குவன்டா’ என்கிற தெளிவு கிடைத்திருக்கிறது.

சிலர் வாய்ச்சண்டைகளில் ஒரே வார்த்தையை அல்லது வாக்கியத்தை திரும்பத் திரும்ப கத்திக் கொண்டே இருப்பார்கள். உருப்படியான எதையும் அவர்கள் லாஜிக்காக சொல்ல முடியாது என்பதே காரணம். சவின்யாவின் வாய்ச்சண்டையும் இப்படித்தான் இருந்தது. உதாரணத்திற்கு ‘பொய்.. பொய்.. பொய்..’ என்று சவின்யா கத்திக் கொண்டே இருந்தது பார்க்க எரிச்சலாக இருந்தது. உடல் வலிமையான அஷ்மிதாவிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் செல்ல வேண்டிய பரிதாபம் வேறு சவின்யாவிற்கு நேர்ந்தது. ஆனால் பாத்ரூம் செல்வது, பீரியட்ஸ் நேரம் போன்ற விஷயங்களுக்கு கூட இருவரும் இழுபறியாக அடித்துக் கொண்டதை ரசிக்க முடியவில்லை.

ஒரு பழைய நீதிக்கதை நினைவிற்கு வருகிறது. வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்ட புறாக்கள், தனித்தனியாக முயன்ற போது தப்பிக்க முடியவில்லை. வேடன் நெருங்கி வருவதைப் பார்த்த மூத்த புறா ஒன்று, ‘நாம் அனைவரும் ஒரே நேரத்தில் பறந்தால் வலையுடன் பறந்து தப்பிக்கலாம்’ என்று சொன்ன யோசனையைப் பயன்படுத்தி தப்பித்தன. இதைப் போலவே கயிறு கட்டிக் கொண்டதின் மூலம் ஒரு நெருக்கடிக்குள் மாட்டினாலும் இருவரும் சமயோசிதமாக யோசித்திருந்தால் டாஸ்க்கையும் வித்தியாசமாக ஆடி, வாய்ச்சண்டை போடும் விபத்தை தவிர்த்திருக்கலாம்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

இந்த வாரத்தை சுவாரஸ்யப்படுத்தியவர்கள் - அய்யம்பேட்டை…

ஹோட்டல் கெஸ்ட்டுகள் ரெவ்யூ தரும் நேரம். ஏறத்தாழ அனைவரும் தன்யாவை கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இதே விஷயத்தைத்தான் வினோத்தும் சொன்னார்.

ஆனால், அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்கிற கேரக்டரில் நின்று ரஜினி ஸ்டைலை லேசாக தொட்டுக் கொண்டு தன்னுடைய சொந்த சொற்களை வைத்து ரெவ்யூ செய்த அவரது பாணி இருக்கிறதே?! அட்டகாசம்.. இந்த சீசன் ஆரம்பித்து இப்போதுதான் முதன்முறையாக இப்படியொரு சுவாரசியத்தைப் பார்க்கிறேன். (சீசன் மூன்றில் சாண்டி, கவின் கோஷ்டியெல்லாம் இப்படி அடிக்கடி சிரிக்க வைப்பார்கள்)

வினோத்தின் பேச்சிற்கு சக போட்டியாளர்கள் அனைவருமே விழுந்து விழுந்து சிரித்தார்கள். கழுவி ஊற்றப்பட்ட தன்யா கூட சிரித்தார். நல்ல நகைச்சுவையின் அடையாளமே இதுதான்.

டாஸ்க் முடிந்ததும் "உங்க பர்பாமன்ஸ் செம. இந்த வார ஹைலைட் இதுவாத்தான் இருக்கும் என்று மனமார பாராட்டினார் ராகவ். பிக் பாஸூம் வினோத்தை பாராட்டி "எனக்கு இந்த இந்திரன்தான் வேணும் கன்டினியூ என்று சொன்னது நன்று. போலவே அப்பு கமல் பாத்திரத்தையும் அவர் நடித்துக் காட்டியது சிறப்பு.

ஏற்கெனவே சொல்லியிருந்தேன். இந்த சீசனில் கடைசி வரை தாக்குப் பிடிக்கக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராக வினோத் இருப்பார். அத்தனை நிதானமும் திறமையும் இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் டைட்டில் அடிப்பதற்கு கூட வாய்ப்பிருக்கிறது.

ஹோட்டல் டாஸ்க்கிற்காக தன் தோற்றத்தையே மாற்றிக் கொண்டு சந்திரபாபுவின் ஸ்டைலில் வந்த ராகவ்வின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. ஊழியராக வேலைகளையும் நிறைய செய்தார். ஆனால் தனது கெட்டப்பைக் கொண்டு இன்னமும் அதிகமாக சுவாரசியப்படுத்தியிருக்கலாம். ராகவ் அதைச் செய்யாமல் போனது குறை.

BB Tamil Season 10
BB Tamil Season 10

ஜேசனின் எரிச்சல் தரும் உடல்மொழி - பூமராங் கர்மாவை அனுபவித்த தன்யா

பெரும்பாலான சமயங்களில் வீடு ரணகளமாக இருக்கும் போது அன்சர் அடிக்கும் கமெண்ட்டுகள்தான் ஆறுதலை அளிக்கின்றன. குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம் தரும் அன்சர், பாய்ஸ் டீமில் ஐக்கியமாகி தன்னை தொலைத்து விடாமல் தனியாக ஆடினால் மேலும் பிரகாசிப்பார்.

தனது உடல்மொழியின் மூலம் மற்றவர்களை வெற்றிகரமாக சீண்டி எரிச்சல் அடைய வைப்பதில் ஜேசன் திறமையானவராக இருக்கிறார். இந்த ஆட்டத்தைப் புரிந்து கொண்டு ஆடும் ஜேசன், ஷமாவை தனது பரம எதிரியாக நிர்ணயித்துக் கொண்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் வன்மத்தைக் கொட்டுவது நெருடலாக இருக்கிறது. ஒருவர் மீதுள்ள எரிச்சலை ஒளித்துக் கொள்ளாமல் அப்படியே வெளிப்படுத்துவது ஜேசனிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம். அதுதான் அவரது இயல்பா, அல்லது ஸ்ட்ராட்டஜியாக பயன்படுத்துகிறாரா என்று தெரியவில்லை. இவரும் பாய்ஸ் டீமில் குழு மனப்பான்மையுடன் ஆடுவது பலவீனம்.

கெஸ்ட்டாக இருந்த போது ஊழியர்களை டார்ச்சர் செய்து இன்பம் கண்டார் தன்யா. இதன் மூலம் டாஸ்க்கை தான் திறமையாக ஆடியதாக அவர் நினைத்துக் கொண்டது கூட ஓகே. ஆனால் அதே ஆயுதங்கள் தன்னை நோக்கி நிச்சயம் திரும்பும் என்பதையும் அவர் யூகித்து அதற்கேற்ப தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். மாறாக போட்டியாளர்களால் தாக்கப்படும் போதெல்லாம் கண்ணீரை ஆயுதமாக வைத்து விக்டிம் கார்ட் ஆட்டம் ஆடியது எரிச்சலாக இருந்தது.

“யம்மா.. தாயி ஏதாச்சும் சோறு இருந்தா போடுங்கம்மா’ என்று ஹோட்டல் டாஸ்க் 2.0-வில் கெஸ்ட்டுகளை மூன்று நாட்களாக கதற விட்டதில் தன்யாவின் பங்கு முக்கியமானது. (உங்க கிட்ட தன்யா மாட்டலை. நீங்கதான் தன்யா கிட்ட மாட்டியிருக்கீங்க!) ரீஎன்ட்ரியில் கெத்தாக பேசி உள்ளே சென்ற ஜாவித், இயன்றவரை தன்யாவை டிரிக்கர் செய்ய முயன்றாலும் கண்ணீரைப் பார்த்து மனம் இளகி விட்டுக் கொடுத்து விட்டார்.

கயிறு அவிழாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்தான். ஆனால் நீச்சல் குளத்தில் தண்ணீர் பட்டு கழன்று விழுந்ததற்கெல்லாம் குறும்படம் போட்டதும், ஜாவித்தை எவிக்ட் செய்ததும் ஓவர் ரியாக்ஷன்.

BB Tamil Season 10
BB Tamil Season 10

குடுமிப்பிடிச் சண்டை போடுவதில் பெண்கள் வல்லவர்களா?

கயிறு கட்டிக் கொண்ட ஜோடிகளின் விஷயத்தில் ஒரு சுவாரசியம் இருந்தது. ஆண் - பெண் ஜோடிகளில் சண்டை என்பது பெரிதாக நிகழவில்லை. ஆனால் பெண் - பெண் என்கிற ஜோடியாக அமைந்து விட்ட அஷ்மிதாவும் சவின்யாவும் பயங்கரமாக அடித்துக் கொண்டார்கள். இதில் ஒருவிதமான நீதி இருக்கிறது. ஆண்களால் சில நாட்களிலேயே எவ்வித நிபந்தனைகளும் அற்ற உண்மையான நட்பை ஏற்படுத்திக் கொள்ள முயலும். ஆனால் பல வருட நட்பாக இருந்தாலும் பெண்கள் தங்களுக்குள் ரகசிய ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிற பகைமையுடன் இருப்பார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.

கெஸ்ட்டாக இருந்த போது அடித்துக் கொண்ட அஷ்மிதா - சவின்யா ஜோடி, ஊழியர்களாக மாறிய போது சண்டைகளை குறைத்துக் கொண்டார்கள். உருப்படியான வேலை இருக்கிற போது சண்டை போடுவது போன்ற விஷயங்களுக்கு நேரமிருக்காது என்பதும் சுவாரசியமான நீதிதான்.

குமரன், ஜாவித், சவின்யா ஆகிய மூவரும் வெளியேறிய நிலையில், வாசன், கரிஷ்மா, அக்ஷிதா உள்ளே நுழைந்திருக்கிறார்கள். வாசனுக்கும் ஜேசனுக்கும் ஆரம்பத்திலேயே முட்டிக் கொண்டது.

BB Tamil Season 10
BB Tamil Season 10

காமன்மேன் ஷோவில் ஏற்னெவே மோதிய அனுபவத்தில் ஜேசனுக்கு கடுமையான சவாலாக கரிஷ்மா இருப்பார் என்று தெரிகிறது. ஷமா, கரிஷ்மா என்று இரண்டு எதிரிகளை அவர் சமாளித்தாக வேண்டும். ‘அண்ணன்ற பாசம்லாம் காட்ட மாட்டேன். என்னோட கேமை ஆடுவேன்’ என்று சென்றிருக்கிற அக்ஷிதா அதைக் காப்பாற்றுவாரா என்று பார்க்க வேண்டும். (ஜேசனுக்கு நம்பர் ஒன்று ரேங்க் கொடுத்ததெல்லாம் ஓவருங்க அம்மணி!) புதிதாக நுழைந்திருப்பவர்களாவது ஆட்டத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்துவர்களா அல்லது ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்களா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும்.!

இந்த வார பிக் பாஸில் உங்களை கவர்ந்த விஷயங்களை கமென்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.