தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே? - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 215 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. 1,397 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 800 அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கன்வாடியிலுள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முறை முட்டைகள் வழங்கப்படுகின்றன.

சத்துணவு முட்டை (கோப்பு படம்)

இந்த நிலையில், பள்ளிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளில் ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 முட்டைகள் வரை வீதம் வழங்காமல் எண்ணிக்கையை குறைத்து வழங்குவதுடன், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் கிராம மக்களுக்கு ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதூர் அருகேயுள்ள சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சிலர் முட்டைகளை வாகனத்தில் வைத்து ரூ.5-க்கு விற்பனை செய்துள்ளனர்.

முட்டையில் வைக்கப்பட்டுள்ள சீலைப் பார்த்து விட்டு “இது அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு அனுப்பப்படும் முட்டைதானே?” என சிலர் கேட்க வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனராம். மறைமுகமாக ஒரு சில இடங்களில் நடக்கும் இந்த முட்டை விற்பனை, வாகனத்தில் வந்து பகிரங்கமாக விற்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. இது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.

முட்டை - (கோப்பு படம்)

இதில் சம்மந்தப்பட்டுள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துமாவுகளை ஒரு மூட்டை ரூ.500 முதல் ரூ.1,000 வரை விற்பதாகவும், சமையலுக்காக வழங்கப்படும் பருப்புகளை சிறிய ஹோட்டல்களுக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.