அதைப் படிக்கணும்னு தோணுச்சு- முதல் தலைமுறையாகப் படிக்கும் பழங்குடிக் குழந்தைகளுக்கு கல்வி சுற்றுலா
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வாழும் பழங்குடிக் குழந்தைகளிடம் கல்வி மீதான ஈடுபாட்டை வளர்க்க, ஐ.ஐ.டி, இலயோலா போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள புலிகள் காப்பகங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஊராளி, சோளகர், இருளர் உள்ளிட்ட பழங்குடியினர் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக அரசும், தனியார் சேவை அமைப்புகளும் இம்மக்களுக்கு கல்வியைப் புகட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக இன்றைக்குப் பெருமளவில் பழங்குடிக் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.
அனைவரும் படித்த முதல் தலைமுறை தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் கல்விக்காகப் பணியாற்றி வருகிற தனியார் சேவை நிறுவனம், 50 பழங்குடி மாணவ, மாணவிகளுக்கு கல்விச்சுற்றுலாவை ஒருங்கிணைத்து சென்னைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
முதல் தலைமுறையாக கல்வி கற்கும் அப்பள்ளி மாணவர்களை கல்லூரிப் படிப்பை நோக்கி நகர்த்தும் வகையில், இலயோலா கல்லூரி, எம்.எஸ்.எஸ்.டபிள்யூ உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
இங்கே குறிப்பிட வேண்டியது பெரும்பாலான மாணவர்களின் கனவுத்தலமாகத் திகழும் ஐ.ஐ.டி-க்கு இம்மாணவர்களை அழைத்துச் சென்றதுதான். சத்தியமங்கலம் வனப்பகுதியை விட்டு பெரிதும் வெளியே வந்திருக்காத அக்குழந்தைகளுக்கு இதன் மூலம் புதிய அனுபவம் கிடைப்பதோடு, இம்மாதிரியான கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான தகுதியைத் தாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற உந்துதலையும் இச்சுற்றுலாவின் வழியே ஏற்படுத்த முடியும் என்கிறார் அந்நிறுவன இயக்குநர் கருப்புசாமி.
“சத்தியமங்கலம் அருகே உள்ள மலைப்பகுதியான ஆசனூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கல்வி மையங்களை நிறுவி மாலை நேர வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். நெடுங்காலமாகவே இம்மக்களுக்கு கல்வி சென்று சேராததால் இவர்களிடம் குழந்தைத் திருமண முறை இருந்தது. கல்வியறிவைக் கொண்டு வருவதன் மூலமாக மட்டுமே இவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நோக்கில் இவர்களிடம் கல்வியைக் கொண்டு சேர்த்தோம்.

இன்றைக்குப் பெரும்பாலும் பள்ளி செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற நிலை உருவாகியிருப்பதால் குழந்தைத் திருமண முறை முற்றிலுமாகக் காணாமல் போய்விட்டது. பழங்குடி மாணவர்கள் என்பதால் அரசு மூலமாக கல்வி உரிமைத்தொகை கிடைக்கிறது.
நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு எங்களது அமைப்பு சார்பாக கல்வி ஊக்கத்தொகையும் வழங்குகிறோம். அவர்களுக்குப் படிப்பின் மீதுள்ள ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில்தான் இச்சுற்றுலாவை ஒருங்கிணைத்தோம்.
50 மாணவர்களை சென்னைக்கு அழைத்துச் சென்றோம். பழங்குடியினர் நலத்துறையின் இயக்குநர் அண்ணாதுரை அவர்களை முதலாகச் சந்தித்தோம். அவர் மாணவர்கள் கல்வி சார்ந்து சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் சவால்களைக் கேட்டறிந்ததோடு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக இலயோலா கலை அறிவியல் கல்லூரிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றோம். அங்கே பழங்குடியின மாணவர்களுடன் எம்.எஸ்.டபிள்யூ (Master of social work) பயிலும் மாணவர்கள் தங்களது கல்வி சார்ந்து உரையாடினர்.
அதன் பிறகு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் கல்வி மையத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். அங்கே முத்தமிழ் தலைமையிலான நீலம் கலை இலக்கிய அமைப்பைச் சார்ந்த கலைப் பயிற்றுநர்கள் குழந்தைகளுக்கு கலை சார்ந்த பயிற்சிகளோடு, விளையாட்டு, பாடல், நடனம் ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டினர்.

அடுத்த நாள் ஐஐடிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றோம். மின் மற்றும் மின்னணுப் பொறியியல், இயந்திரவியல் மற்றும் பெருங்கடல் தொழில்நுட்பப் பொறியியல் ஆகிய துறைகளில் உள்ள பேராசிரியர்கள் மாணவர்களுக்குப் புரியும்படியாக அத்துறைகளின் அடிப்படையை விளக்கிக் கூறினர்.
பெருங்கடல் தொழில்நுட்பப் பிரிவில் அமைக்கப்பட்டிருந்த செயற்கையான கடல் போன்ற அமைப்பைப் பெரும் வியப்போடு கண்டனர். அதனையடுத்து அவர்களை பிர்லா கோளரங்குக்கு அழைத்துச் சென்றோம். அங்கே ராக்கெட் மாதிரிகள் மற்றும் விண்வெளிக் காட்சிகளைப் பெரும் வியப்போடும் ஆர்வத்துடனும் கண்டு களித்தனர்.
பின்னர் அவர்கள் மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்றதோடு இச்சுற்றுலா நிறைவடைந்தது. இன்றைக்குப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களையும் கல்லூரியை நோக்கி நகர்த்துவதுதான் இச்சுற்றுலாவின் நோக்கம்.

ஐ.ஐ.டி போன்ற மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் இங்குள்ள பழங்குடி மாணவர்கள் சென்று பயில வேண்டும் என்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இச்சுற்றுலாவில் மாணவர்கள் தங்க இடம் தந்த அகரம் ஃபவுண்டேசன், கலைப் பயிற்சி கொடுத்த நீலம் கலை இலக்கிய அமைப்பு மற்றும் ஐ.ஐ.டி, இலயோலா உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்" என்கிறார் கருப்புசாமி.

இந்த அனுபவம் குறித்து 11ம் வகுப்புப் படித்து வரும் பழங்குடியின மாணவி மைதிலி கூறும்போது…
“நாங்க மலையை விட்டுக் கீழ வரவே மாட்டோம். வந்தாலும் சத்தியமங்கலத்துக்குத்தான் வருவோம். முதல் தடவையா சத்தி தாண்டி சென்னை மாதிரியான பெரிய ஊருக்கு வந்திருக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு. ஐ.ஐ.டி-ல பெருங்கடல் தொழில்நுட்பத்தைப் பத்தி அவங்க விளக்கி சொன்னதைக் கேட்டப்புறம் எனக்கும் அதைப் படிக்கணும்னு தோணுச்சு. பன்னிரெண்டாம் வகுப்புல நல்ல மார்க் வாங்கி, ஜே.ஈ.ஈ எக்ஸாம் நல்லா பண்ணி இது மாதிரியான பெரிய இடங்கள்ல படிக்கணும்” என்கிறார் மைதிலி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

