ஜெயிச்சாலும் தோத்தாலும் கரை வேட்டியைக் கட்டிக்கிட்டு கெத்தா நடப்போம் - விஜய்யை விமர்சித்த ஸ்டாலின்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய இருக்கும் நிலையில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (அக். 3) பிரசாரம் செய்தார். பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், "பல்வேறு குதிரை பேரங்கள் நடந்திருக்கின்றன. சில நாள் முன்பு கூட, “உதயசூரியன் சின்னத்தில் களம் கண்ட இரண்டு எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பண்ணிட்டு வந்தால் மந்திரி ஆகியிருக்கலாம்” என்று, ஒரு அமைச்சரே கூச்சமில்லாமல் இங்கே மேடையில் பேசுகிறார். ஆனால், பெரிய உத்தமர் போல, முதலமைச்சர் என்ன சொல்கிறார்? “குதிரை பேரம், கழுதை பேரம் எல்லாம் இல்லை” என்கிறார். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே செலக்ட் பண்ணிக்கொள்ளட்டும்!
தினந்தோறும் கொத்துக் கொத்தாகக் கொலைகள், கத்திக் குத்துகள், அரிவாள் வெட்டுகள் என்று ஆரம்பித்துவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதைப் பற்றித் துப்புக் கொடுக்கிறவர்களைக் காப்பாற்றக் கூடத் துப்பில்லை! பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கிற குற்றங்களில் பாதிக்குப் பாதி த.வெ.க.காரர்கள்தான் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தப்பு செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, புகார் கொடுத்த பெண்மணியைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ.வுக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இதுதான் தூய சக்தி ஆட்சியா? இல்லை, இது துயர சக்தி!
இன்னும் பெரிய லிஸ்ட்டே இருக்கிறது! மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு காண முடிந்ததா? பச்சைக் குழந்தை குடிக்க ஆவின் பாலைக் கூட, ஒழுங்காக சப்ளை பண்ண வக்கில்லாத ஒரு ஆட்சி நடக்கிறது. ஆவின் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு, தனியார் பால் கம்பெனிகள் விலையை ஏற்றிவிட்டார்கள். விலைவாசி கன்னாபின்னாவென்று ஏறியிருக்கிறது.
நேற்று முதலமைச்சர் இங்கே ஷூட்டிங் எடுக்க வந்தாரே, அப்போது ஒரு சீனில் டீ குடிக்கிற ஷாட்! அந்த டீயைக் குடித்துவிட்டு, 500 ரூபாய் கொடுத்துவிட்டுப் பந்தா பண்ணிட்டுப் போய்விட்டார்! ஆனால் மக்கள் தினமும் ஒரு டீக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று இவருக்குத் தெரியுமா? இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, ஒரு டீ 10 ரூபாய்! இப்போது 15 ரூபாய்! மளிகைக் கடையில், விலைவாசி பற்றிப் போய்க் கேளுங்கள் ப்ரோ, சி.எம். சார்! அரிசி, சர்க்கரை, காய்கறி எல்லா விலையும் ஏறிவிட்டது!
இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அமைச்சரவை - இப்போது இங்கே வந்து மொத்தமாக டேரா போட்டு ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! தோல்வி பயத்தில் மொத்தமாக இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். தன்னுடைய சொந்தத் தொகுதியான பெரம்பூருக்கே ஜெயித்த பிறகு ஒருமுறைதான் முதலமைச்சர் போயிருப்பார். ஆனால், மதுராந்தகத்திற்கு இரண்டு முறை வந்து தெருத் தெருவாகப் போகிறார்!
எப்பவுமே முதலமைச்சராக இருக்கிறவர்கள் இடைத்தேர்தலுக்காகப் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள். பிரசாரம் பண்ணுவதே அரிதுதான். ஏனென்றால், அவர்கள் ஆட்சி மேலயும் அவர்கள் திட்டங்கள் மேலயும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களிப்பார்கள் என்பதால் நம்பிக்கையாக இருப்பார்கள்! இப்போது நம்ம முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? அவருக்கே அவர் ஆட்சி மேல் நம்பிக்கை இல்லை.
2026 பொதுத் தேர்தலில் பிரசாரத்திற்கு மொத்தமே பத்துக் கூட்டம் கூடப் போட்டிருக்க மாட்டார். அதுவும் வண்டியை விட்டுக் கீழேயே இறங்கவில்லை. அப்படிப்பட்டவருக்கு இப்போது என்ன நிலைமை பார்த்தீர்களா? மதுராந்தகம் தொகுதியில் மனித நடமாட்டமே இல்லாத சந்துபொந்தைக் கூட விடாமல் முதலமைச்சர் ஊர்வலம் போகிறார். டீக்கடை, வயல் என்று இப்போதான் தோல்வி பயத்தில் அவர் கால் கீழே இறங்கியிருக்கிறது. உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது CM சார்!
அடிக்கடி பேசினார்களே! 5 நிமிடம் பேசினாலே அகிலமே ஆடிப் போய்விடும் என்று பேசிக்கொண்டு இருந்தார்! இன்றைக்கு, ஒரு தொகுதியில் வாக்கு வாங்கவே குட்டிக்கரணம் அடிக்கிறார். நாளைக்குத் தாராபுரம் தொகுதிக்கும் திரும்பச் சந்து சந்தாக ஷோ காட்டப் போகிறாராம். நேற்று நான் போய்விட்டு வந்தேன். கூட்டமென்றால் அப்படி ஒரு கூட்டம். இதேபோலதான், மேடையேற, மேடையைவிட்டு இறங்க முடியவில்லை. அவர் ஒரு பஞ்ச் டயலாக் இப்போது சமீபமாக அரசியல் மேடையில் பேசினார், என்ன தெரியுமா? “வாழ்க்கை ஒரு வட்டம்டா!” ஆம், அது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இப்போது அவருக்குத்தான் அது சூப்பராகப் பொருந்துகிறது.
ஆனால், ஒன்று சொல்கிறேன்! நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... எலக்ஷன் முடிந்துவிட்டால் உங்களை அவர் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார். சந்தேகம் இருந்தால் பெரம்பூர் மக்களிடம் போய்க் கேளுங்கள், நன்றாகச் சொல்வார்கள்.
இங்கே மதுராந்தகம் வந்தபோது, இன்னொரு டயலாக்கும் பேசினார். “ஏன் நாங்கள் ஆட்சிக்கு வரக் கூடாதா? நாங்கள் எல்லாம் முதலமைச்சர் ஆகக் கூடாதா?” என்று கேட்டிருக்கிறார். நீங்கள்தான் முதலமைச்சர் ஆகிவிட்டீர்களே, அதையே இன்னும் நீங்கள் நம்பவில்லையா? நீங்கள் முதலமைச்சர் இல்லை, உங்கள் ஜோசியர் சொல்கிற மாதிரி பிரதமர், ஏன் அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகுங்கள்! உலக நாடுகளின் பிரச்னையைப் பேசித் தீர்த்து வையுங்கள்! ஆனால் அதற்கு முன்னால் முதலில் உள்ளூரில் கரண்ட் கட் பிரச்னையைக் கொஞ்சம் தீர்த்து வையுங்கள் சி.எம்.சார்... தினமும் மக்கள் அவதிப்படுகிறார்கள் சி.எம்.சார்! உங்கள் அமைச்சர்கள் பேசும்போதே கரண்ட் கட் ஆகிறது, அதை முதலில் கவனியுங்கள் சார்...

முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு, இந்த நான்கு மாத காலத்தில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? தி.மு.க. உருவாக்கிய திட்டங்களை ஆய்வு பண்ணுகிற மாதிரி தினமும் ஒரு ரீல்ஸ் போடுகிறீர்கள்! இதைச் சொன்னால் மட்டும் உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். “சொந்தக் காசிலா பண்ணினீர்கள்? மக்கள் பணம்தானே?” என்று கேட்கிறார்.
நான் கேட்கிறேன்... கரிகாலன் கல்லணை கட்டினார் என்று சொல்கிறோம். ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயில் கட்டினார் என்று படிக்கிறோம். பெருந்தலைவர் காமராசர் அணைகளை, பள்ளிக்கூடங்களைக் கட்டினார் என்று சொல்கிறோம்! இவர்கள் எல்லாம் சொந்தப் பணத்திலா பண்ணினார்கள் சி.எம்.சார்? இவர்களையும் இதே கேள்வி கேட்பீர்களா? இவர்களையும் சேர்த்துத்தான் நீங்கள் அவமானப்படுத்துகிறீர்களா? இப்போது தங்க மோதிரம் போட்டீர்களே, அது என்ன உங்கள் பணமா? சில தற்குறிகள் அதையும் நம்புகிறார்களே. இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் கொட்டத்தை அடக்க மதுராந்தகம் மக்கள் படுதோல்வியைப் பரிசாகத் தர வேண்டும். அப்போதுதான் இவர்கள் திருந்துவார்கள். இந்த ரீல்ஸ் வெறியர்களுக்கு ஒரு ரியாலிட்டி செக் கொடுக்க வேண்டும்.
அடுத்து இன்னொன்றும் சொல்கிறார்... “குறுக்கு வழியில் ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால் அது நடக்காது” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார் முதலமைச்சர். Cheap Minister Sir, அவரை இனி சீப் மினிஸ்டர் என்றுதான் சொல்வேன். ஏனென்றால், அவரே தரம்தாழ்ந்து வந்துவிட்டார். குறுக்கு வழியில் சென்று, MLA-க்களைத் திருடுவது, அ.ம.மு.க. உறுப்பினரைக் கடத்தி ஆதரவுக் கடிதம் வாங்குவது, இதெல்லாம் உங்கள் புத்தி! உங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எங்களுக்குக் குறுக்கு வழி தேவையில்லை. எங்கள் வரலாற்றிலேயே அது கிடையாது! மக்களே நேர்வழியில் உங்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவார்கள்!
த.வெ.க.தான் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. கூட்டணியில் வென்ற கட்சிகளை அமைச்சரவையில் இடம் கொடுத்துக் கூட வைத்திருக்கிறீர்கள். இன்னொரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியில் ஜெயித்த அ.தி.மு.க. உறுப்பினர்களைப் பர்ச்சேஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் குறுக்கு வழி! இன்னும் சொன்னால், திருட்டு வழி! தன்னைப்போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று முதலமைச்சர் நினைக்கிறார் போலிருக்கிறது...
நான் முதலமைச்சருக்குச் சொல்வது - குறுக்குப் புத்தி யோசனைகளை விட்டுவிட்டு, மக்களுக்கு நேரான வழியில் நல்லது செய்யப் பாருங்கள். எப்படியும் ஜெயிக்க மாட்டோம் என்று நினைத்துக்கொண்டு, தேர்தல் அறிக்கையில் இஷ்டத்துக்கு அடித்து விட்டீர்களே! அதில் ஒருசில வாக்குறுதிகளையாவது அரைகுறையாக இல்லாமல் முழுமையாக நிறைவேற்றி இருக்கிறீர்களா? உங்கள் ஆட்சியில் என்னென்ன தவறுகள் நடக்கிறது என்று பத்திரிகைகளில் வருகிற செய்திகளை முதலில் படியுங்கள்!
அரசு வழக்கறிஞர் பதவிக்குச் சொந்தக் கட்சி வழக்கறிஞர்களிடமே, இந்தப் பொறுப்புக்கு இத்தனை லட்சம் என்று ‘ரேட் கார்டு’ போட்டுப் பண வசூல் நடந்திருக்கிறது. த.வெ.க.வைச் சேர்ந்த பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞரே இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்தத் தூய சக்தி என்ன செய்தார் தெரியுமா? ஊழலை வெளியே கொண்டுவந்த அந்தப் பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.
ராணிப்பேட்டையில் த.வெ.க. மாவட்டச் செயலாளர் மேல், நான் இந்த மேடையில் சொல்ல முடியாத புகார்களை எல்லாம் அந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். எல்லாத்துக்கும் மேலாக, பொது இடத்திலேயே ஒரு அமைச்சர் மாத்திரையைப் பவுடர் பண்ணி, (எனக்கு தெரியாது, டி.வி.யில்தான் பார்த்து தெரிந்துகொண்டேன். நீங்கள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்) அதை ரீல்ஸ் போட்டு, அதைச் சமாளிக்கக் கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொன்னார். அவரும் இன்னும் அமைச்சரவையில்தான் இருக்கிறார். மொத்த கிரிமினல் கேங்கையும் சேர்த்து வைத்திருக்கிறீர்களே, இதுதான் தூய சக்தி ஆட்சியா?
அது போதாமல் இப்போது என்ன செய்கிறீர்கள்? ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை எல்லாம் உங்கள் வாஷிங் மெஷினில் போட்டு வெளுத்துக் கொண்டிருக்கிறீர்களே, இதற்குப் பெயர்தான் தூய சக்தியா? இல்லை, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததுதான் தூய சக்தி ஆட்சியா? சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கப் பார்க்கிறீர்களே, அதுவும் இதற்காகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தைக் கூட ரகசியமாக மூடி மறைத்தீர்களே, இதற்குப் பெயர் தூய சக்தியா? ஆந்திராவுக்கு முதலீடுகளை மடைமாற்ற, இந்த ஆட்சியைத் தங்கள் கன்ட்ரோலில் வைத்திருக்கிற ஒரு மாபியா பிளான் பண்ணி வேலை பார்க்கிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, நீங்கள் மட்டும்தான் இது மக்களாட்சி என்று சொல்கிறீர்கள். உண்மையில் இது மர்மமான ஆட்சி. யாரோ ஒருத்தரின் கன்ட்ரோலில், யாருடைய நன்மைக்கோ இங்கே கார்ப்பரேட் மாபியா ஆட்சி நடக்கிறது. எதிலுமே வெளிப்படைத்தன்மை இல்லை. எல்லாம் திரைமறைவில் நடக்கிறது.
பா.ஜ.க. மற்றும் அவங்களோட கூட்டணிக் கட்சிகள் தவிர்த்து, இந்தியாவில் எல்லாருமே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேசிவிட்டார்கள். நேற்று மும்பை, டெல்லி என இந்தியா முழுக்க மிகப்பெரிய போராட்டங்கள் நடந்தது. ஆனால், முதலமைச்சர் விஜய் இதைப் பற்றி ஒரு வார்த்தை பேசியிருப்பாரா? 13 கோடி மக்களின் வாக்குரிமையைப் பறித்திருக்கிறார்கள். மிகப்பெரிய தேசத் துரோகச் செயல் நடந்திருக்கிறது. பல மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் களவாடப்பட்டிருக்கிறது. இதற்குக் கூட வாய் திறக்காதவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவரா? அவருடைய கூட்டணியில் இருக்கிற கட்சித் தலைவர்களே இதைத்தான் கேட்கிறார்கள்.
இன்னும் போகப் போகப் பாருங்கள், இவர்களுடைய முகத்திரை முழுசாகக் கிழியும். டெல்லியில் யார் கூட ரகசியக் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியவரும். இவர்களை நம்பிப் போனவர்களும் நட்டாற்றில் நிற்கப் போகிறார்கள்.
கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மாநில உரிமைக்காகவும், ஜனநாயக உரிமைக்காகவும் யாருக்கும் பயப்படாமல் குரல் கொடுத்தோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதிலும், ஜி.எஸ்.டி. வருவாய்ப் பெருக்கத்திலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்பட்டது. இப்போது எல்லாவற்றிலும் ரிவர்ஸ் கியரில் போய்க்கொண்டு இருக்கிறோம். இப்படி ஒரு கேவலமான ஆட்சியை நடத்திவிட்டு, கூச்சமில்லாமல் வாக்கு கேட்டு வருகிறார்கள்.
மக்கள் இனிமேலாவது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஒருமுறை ஏமாந்துவிட்டீர்கள். மாற்றம் என்று சொன்னதை நம்பினீர்கள், ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான்.
இந்த மதுராந்தகம் கிராமங்கள் நிறைந்த ஒரு தொகுதி! நூறு நாள் வேலைத்திட்டம் உங்களுடைய குடும்பப் பொருளாதாரத்திற்கு எந்த அளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். நமது திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அந்தத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. ஒன்றிய அரசு ஏற்படுத்திய தடைகளை மீறி அதைச் செய்தோம். ஆனால் இன்றைக்குச் சரியாக வேலையும் கிடைக்கிறதில்லை, சம்பளமும் போடுவதில்லை. அதற்கெல்லாம் தக்க தண்டனை தர வேண்டும்!
சிந்தித்துப் பாருங்கள்! உங்களுக்காகக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான திட்டங்களைத் தந்தோம். மதுராந்தகம் ஏரியை 120 கோடி செலவில் ஆழப்படுத்தி, கொள்ளளவை உயர்த்தினோம். தொகுதியின் கிராமப்புறங்களில் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் தரமான சாலைகள் அமைத்துக் கொடுத்தோம். உதயன்குளம், வண்ணான்குளம் போன்ற நீர்நிலைகளையும் மேம்படுத்தினோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இந்தத் தொகுதியில் மட்டும் 54 ஆயிரத்து 836 பேர் இந்த மாதம் வரை பயனடைந்து வருகிறார்கள். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என இப்போது வரை நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள்தான் மக்களுக்குப் பயனளிக்கிறது.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடே உங்கள் தீர்ப்புக்குத்தான் வெயிட்டிங்! நீங்கள் கொடுக்கிற தண்டனையில்தான் இனி மற்ற தொகுதிகளில் குதிரை பேரம் நடக்குமா நடக்காதா என்று முடிவாகும்!
அதனால், உங்கள் வாக்குகளை உங்கள் தொகுதி நன்மைக்காக மட்டுமில்லை, தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்துங்கள். ஆளுங்கட்சியிடம் பெட்டி வாங்கிக்கொண்டு விலை போகிறவர்களுக்கு உங்கள் வாக்கு மீண்டும் போகக் கூடாது! சினிமா கவர்ச்சியை அரசியல் முதலீடாக்கி - குதிரை பேரங்களின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்து - மக்களைத் திசை திருப்பி காலத்தை ஓட்ட நினைக்கிற முதலமைச்சருக்கு ஒரு பெரிய ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும்.
முதலமைச்சர் விஜய் தாராபுரம் பரப்புரையில் மைண்ட்வாய்ஸ் என்று நினைத்துக்கொண்டு ஒரு விஷயத்தை வெளிப்படையாகச் சொன்னார். என்ன தெரியுமா? “ஆட்சி போனதையே மறந்துவிட்டு, இந்த தி.மு.க.காரர்கள் இன்னும் ஆளுங்கட்சி மாதிரியே பேசுகிறார்கள்” என்று புலம்பியிருக்கிறார். உண்மைதான் பிரதர்! அந்த கெத்து தி.மு.க.காரனின் பிறவிக் குணம். ஒரு பிரச்னை வந்ததும் கட்சி ஆபீஸையே பூட்டிவிட்டு, செல்போனை எல்லாம் ஆஃப் பண்ணிட்டு, மொத்தக் கட்சியும் ஒரு மாதம் தலைமறைவு ஆனீர்களே, அப்படிப்பட்ட கோழைகள் நாங்கள் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றமே இதே நாள் கடந்த வருடம் என்ன சொன்னாங்க? பலியான 41 பேரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூடச் சொல்லாமல் ஓடிப்போன விஜய் அவர்களுக்குத் தலைமைப் பண்பே இல்லை என்று சொன்னார்களே! உங்களை மாதிரியே தி.மு.க.வையும் பயந்தாங்கொள்ளிகள் என்று நினைத்துவிட்டீர்களா? ஜெயித்தாலும் தோற்றாலும், கெத்தாக எங்கள் கட்சியின் கரைவேட்டியைக் கட்டிக்கொண்டு, மக்களுக்காக மக்களோடு களத்தில் நிற்கிறவர்கள் நாங்கள்!
நீங்கள் 5 நிமிடம் பிரசாரம் பண்ணியதற்கே கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்று நக்கல் பேச்சு பேசுகிறீர்களே? நான் கேட்கிறேன்... கரூரில் பாட்டெல்லாம் பாடினீர்களே, ஏன் ஜெயிக்கவில்லை? விழுப்புரத்தில் வி.சாலை என்று பெயர் வைத்து மாநாடே போட்டீர்களே, அங்கே ஏன் ஜெயிக்கவில்லை? கன்னியாகுமரி போனீர்களே, அங்கே என்ன நிலைமை? ஒரு சீட் கூட வாங்கவில்லையே! திருவாரூர் போய்ப் பொய் பொய்யாகப் பேசினீர்களே, அங்கே என்ன ஆச்சு? உண்மை என்னவென்றால், விஜய் நீண்ட நேரம் பரப்புரை செய்த பெரும்பாலான பகுதிகளில் த.வெ.க. படுதோல்வி அடைந்திருக்கிறது. இதுதான் யதார்த்தம்! மதுராந்தகமும் அந்த லிஸ்ட்டில் சேர வேண்டும்!
மக்கள் பிரச்னையை எழுப்பினால், முதலமைச்சராக அதற்குப் பொறுப்பாகப் பதில் சொல்லுங்கள். எல்லா மேடையிலும் தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., தி.மு.க., என்று புலம்பினால் மக்கள் பிரச்னைகள் சரியாகிவிடாது. மக்களும் அதற்காக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. மக்களை நீங்கள் எந்த அளவுக்கு அலட்சியமாக நினைக்கிறீர்களோ, அந்த ஆணவத்தாலேயே நீங்கள் அழிவது உறுதி!
மதுராந்தகம் மக்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான்! இந்த இடைத்தேர்தலில் த.வெ.க.வுக்கு அளிக்கிற வாக்கு அராஜகத்திற்கும் ஆணவத்திற்கும் அளிக்கிற வாக்கு. முறைகேடுகளுக்கு அளிக்கும் வாக்கு. பணநாயகத்திற்கு அளிக்கும் வாக்கு! இதை மதுராந்தகம் மக்கள் மறந்துவிட வேண்டாம். துரோகிகளை விரட்டி அடியுங்கள்!
ஏற்ற கொள்கைக்கும் - வாக்காளர்களான உங்களுக்கும் - உண்மையாக இருக்கிற தி.மு.க. வேட்பாளர் நம் அருமைச் சகோதரர் பரந்தாமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்! அவர் உங்களோடு இருப்பார். மற்றவர்களை மாதிரி ஓடிப்போக மாட்டார். வாக்களித்த மக்களுக்குத் துரோகம் பண்ணுகிறவர்கள் சட்டமன்றத்திற்குப் போகக் கூடாது! மதுராந்தகம் மக்கள் அவர்களைப் போக விடக்கூடாது.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கண்ட வெற்றிச் சின்னமாம் உதயசூரியனுக்கு வாக்களித்து மதுராந்தகம் மக்களும், தாராபுரம் மக்களும் அதை உறுதி செய்ய வேண்டும்! அக்டோபர் 6! ஆணவத்திற்கும் துரோகத்திற்கும் முடிவு கட்டும் நாளாக அமையட்டும்! உதயசூரியன் வெல்லட்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


