ஐயப்பப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, விருப்பங்களை நிறைவேற்றுவோம் - கேரள தேவஸ்வம் அமைச்சர் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஐயப்பப் பக்தர்கள் ஓய்வு இல்லத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ள அன்னதான அரங்கின் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
ஐயப்பா சேவாசங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன் கொடியேற்றினார். தங்கபாண்டியன் சுவாமிகள் தலைமையில் ஐயப்பப் பூஜை நடைபெற்றது. மாவட்ட தலைவர் மதுசூதனப்பெருமாள் தலைமை வகித்தார்.
அன்னதான அரங்கை கேரள சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் துறை அமைச்சர் கே.முரளீதரன் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் பேசுகையில், "கேரள அமைச்சர் முரளீதரன் அவர்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சுதந்திரத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலான மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தில், 4,000 முதல் 5,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இங்கே சேவைப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாம் அன்னதானம் வழங்கி வருகிறோம். ஐயப்ப சுவாமி கோவிலிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அன்னதானத்துக்குத் தடைகளும் சிக்கல்களும் ஏற்பட்டன.
கேரள மாநிலத்தில் இப்படி நடந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. எனவே எதற்காலிக அடிப்படையிலாவது தமிழ்நாடு ஐயப்பா சேவா சங்கம் மற்றும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மூலமாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்களுக்குச் சேவை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
அன்னதானம் இறைவனின் கொடை. எங்களுக்கு அன்னதானத்தைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். குறைந்தபட்சம் தற்காலிகமாகவாவது அதனைச் செய்து கொடுக்க வேண்டும். நீங்கள் தற்போது சுகாதாரம் மற்றும் தேவஸ்வம் ஆகிய இரண்டு முக்கியத் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறீர்கள். பொதுமக்களுக்குச் சுகாதாரமும் மிக முக்கியம். அதே நேரத்தில் தேவஸ்வம் போர்டும் மிகவும் முக்கியமானது" என்றார்.
இதில் கேரள தேவஸ்வம் அமைச்சர் கே.முரளீதரன் பேசுகையில், "நான் அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு கேரளாவுக்கு வெளியே நடைபெறும் எனது முதல் நிகழ்ச்சி இதுவாகும். ஓர் ஐயப்பப் பக்தனாக இங்கு வந்து அன்னதான மண்டபத்தைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். 1975-ம் ஆண்டிலிருந்து எந்தவிதத் தடையுமின்றி நான் தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வருகிறேன்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில்கூட சுவாமியின் அருளால் எனது பயணம் தடைபடாமல் தொடர்ந்தது. சபரிமலையிலும் பம்பையிலும் உள்ள ஐயப்பா சேவா சங்கத்தின் அன்னதான மையங்களுக்குச் சென்று நாங்களும் உணவு உட்கொண்டிருக்கிறோம். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு, முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், இந்தச் சேவா சங்கத்தில் தேவையற்ற சில சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.
அதற்கு நீங்கள் காரணமல்ல. அன்றைய ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் ஆதரவோடு ஒரு போட்டி அமைப்பை உருவாக்கினார்கள். அத்துடன் அவர்கள் உயர் நீதிமன்றத்தையும் அணுகினார்கள்.
உயர் நீதிமன்றமும் தேவஸ்வம் போர்டைத் தவிர, சபரிமலையில் பிறர் அன்னதானம் வழங்குவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டது. நீங்கள் 1945-ம் ஆண்டிலிருந்து பல வருடங்களாக அங்கு சேவையாற்றி இருக்கிறீர்கள். பக்தர்களுக்கு இலவச உணவை வழங்கியுள்ளீர்கள். எண்ணற்ற சேவைகளை ஆற்றியுள்ளீர்கள். அங்கு ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதிகளையும் செய்துகொடுத்துள்ளீர்கள்.
கேரளாவில் அரசாங்கம் மாறிவிட்டது. ஆனால் தேவஸ்வம் போர்டு ஒரு சட்டரீதியான அமைப்பு என்பதால் பழைய தேவஸ்வம் போர்டே இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களை நம்மால் மாற்றவோ கலைக்கவோ முடியாது. இப்போதும் அவர்கள் தங்களது பழைய கொள்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.
மேலும் தேவஸ்வம் போர்டு தலைவர் எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரும் அல்ல, அவர் ஓய்வுபெற்ற அரசு தலைமைச் செயலாளர். அரசுத் தரப்பில் வரும் 17-ம் தேதி பம்பாவில் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தலைமையில் இந்த ஆண்டுக்கான வழிபாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக ஒரு கூட்டம் நடக்க உள்ளது. அங்கு உங்களது இந்தக் கோரிக்கையும் விவாதிக்கப்படும்.
ஆனால், அரசு உயர் நீதிமன்றத்தில் ஒரு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏனென்றால் உயர் நீதிமன்றம்தான் சபரிமலையின் அனைத்து நடவடிக்கைகளையும் எப்போதும் கட்டுப்படுத்தி வருகிறது. சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான வழக்கில் கூட, சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை. அதனால் தவறு செய்த குற்றவாளிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கால அவகாசம் கிடைத்து விடுகிறது.
அங்குதான் பிரச்னை நிலவுகிறது. இருந்தபோதிலும், நாங்கள் தேவஸ்வம் போர்டுக்குப் புதிய வழக்கறிஞரை நியமித்து, உயர் நீதிமன்றத்தை அணுகி, ஐயப்ப சேவா சங்கம் அங்கு சேவை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளோம். தேவஸ்வம் போர்டும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என்றே நான் நம்புகிறேன்.
இப்போது உங்களது சேவைகள் அங்கு இல்லாததால், தேவையின்றிப் பல கூடுதல் நிதிகள் அங்கு விரயமாகின்றன. நீங்கள் அங்கே இலவசமாக சேவை செய்தீர்கள். தேவஸ்வம் போர்டோ பணம் பெற்றுக்கொண்டு சேவை செய்ய மட்டுமே ஆட்களைப் பணியமர்த்துகிறது. அங்கேதான் சிக்கல் உள்ளது.எவ்வாறாயினும், ஐயப்பப் பக்தனாக உங்களுக்கு உதவுவதற்கு என்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் நான் நிச்சயமாகச் செய்வேன்.

இந்த ஆண்டுக்கான மண்டல காலம் வரும் நவம்பர் 17-ல் தொடங்கி ஜனவரி மூன்றாவது வாரம் வரை நடைபெற உள்ளது. சபரிமலையின் அனைத்துப் பணிகளையும் அரசு முறையாக ஆய்வு செய்து தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் என்ற வாக்குறுதியை உங்களுக்கு வழங்குகிறேன். முதலமைச்சரும் ஒரு ஐயப்பப் பக்தர்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மாநில முதலமைச்சர் ஓர் ஐயப்பப் பக்தனாக இந்த ஆண்டு சபரிமலைக்கு வருகை தருகிறார்.
அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் கூட சபரிமலைக்குத் தவறாமல் செல்லும் பக்தராகவே இருந்தார். வரும் 17-ம் தேதியும் அவர் பம்பையில் நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு சபரிமலைக்குச் செல்ல உள்ளதாகக் கூறியுள்ளார். எனவே, நிச்சயமாகப் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, உங்களது விருப்பங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலிருந்தும், ஆந்திரா, தெலங்கானா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் வரக்கூடியவர்கள்தான். தேவஸ்வம் போர்டின் வருமானமும் கூட கேரளாவிலிருந்து மட்டுமே வருவதில்லை; வெளி மாநில பக்தர்களிடமிருந்தும் அதிகளவில் வருகிறது.
இந்த மண்டல மற்றும் மகரவிளக்குக் காலத்தில், பக்தர்களுக்கு நாம் அளப்பரிய மனநிறைவை ஏற்படுத்தித் தர முடியும்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

