“மருத்துவம் என் Profession.. அதை Service ஆக செய்கிறேன் - Trust Floor மூலம் உதவும் டாக்டர் குமரேசன்
பணம் இல்லாதவர்களுக்கு முதலில் சிகிச்சை.. பணம் பிறகு – Global Mission Hospital டாக்டர் குமரேசன்
மருத்துவம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல, ஒருவருடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சேவை. அந்த எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார் காரைக்குடி Global Mission Hospital-ன் நிறுவனர் மற்றும் பொது மருத்துவர் டாக்டர் வி. குமரேசன்.
புதுக்கோட்டை மாவட்டம்,புதுப்பட்டி அருகே உள்ள அம்புராணி கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் குமரேசன். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், மருத்துவத் துறைக்குள் வருவதற்குப் பின்னால் தன்னுடைய தாயின் கனவு இருப்பதாகக் கூறுகிறார்.
“நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது என் அம்மாவுக்கு புற்றுநோய் வந்தது. நாங்கள் கிராமத்தில் இருந்ததால், அவரை சிகிச்சைக்காக அடிக்கடி பேருந்தில் சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலகட்டம் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் 11-ம் வகுப்பு படிக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார். ஆனால், அதற்கு முன்பு ‘நீ நன்றாகப் படித்து டாக்டராகி, என்னைப் போல கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவ வேண்டும்’ என்று அவர் ஆசைப்பட்டார். அந்த வார்த்தைகள்தான் என்னை மருத்துவம் படிக்க வைத்தது என்று கூறினார்.
‘மருத்துவமனை கட்டணும், ஆனால் பணம் இல்லை
டாக்டராக வேண்டும் என்ற ஆசை மட்டுமல்லாமல், சொந்தமாக ஒரு மருத்துவமனை தொடங்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கிறது. தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய காலத்திலிருந்தே, தன்னுடைய சொந்த ஊருக்கு அருகிலேயே ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என நினைத்துள்ளார்.
ஆனால், மருத்துவமனை தொடங்குவதற்கு மிகப்பெரிய தடையாக இருந்தது பணம்.
“நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன். பெரிய அளவில் பணம் இல்லை. இருந்தாலும் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்போது கட்டட உரிமையாளர் சேவன் அண்ணாமலை செட்டியாரை சந்தித்து, என்னுடைய நிலைமையைச் சொன்னேன். என்னால் பெரிய தொகை கொடுக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினேன். அவர் வாடகையும் அட்வான்ஸும் வேண்டாம் என்று சொல்லி உதவி செய்தார். அவருடைய குடும்பமும் எனக்கு இந்த மருத்துவமனையை உருவாக்க ஆதரவாக இருந்தது என்று கூறினார்.
அந்த உதவிதான் இன்று Global Mission Hospital உருவாகுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
பணம் இல்லையென்றால் சிகிச்சை கிடையாதா?
மருத்துவச் செலவு காரணமாக சிகிச்சை பெற முடியாமல் போகும் மக்களைப் பார்த்த அனுபவம், மருத்துவமனையின் கட்டண முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
எங்களிடம் ஒரு rigid fee structure கிடையாது. பணம் இல்லாதவர்களுக்காக Trust Floor என்று ஒரு பொதுவார்டு இருக்கிறது. ஒருவருக்கு ஒரு சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்பட்டாலும், அவரிடம் அதில் ஒரு பகுதி மட்டுமே இருந்தால், அவரால் முடிந்த அளவு கொடுக்கச் சொல்வோம். சில நேரங்களில் பணமே இல்லாமல் வருவார்கள். முதலில் சிகிச்சை கொடுப்போம். பணத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடுவோம்" என்கிறார்.

``ஒருமுறை இரவு 11 மணியளவில் அறுவை சிகிச்சை தேவைப்பட்ட ஒருவர் பணம் இல்லாமல் வந்ததாகவும், முதலில் சிகிச்சை செய்யுங்கள், பணத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
காசு கொடுத்து வாங்க முடியாத ஒன்று மக்களுடைய அன்பு. காய்கறி கடையில் இருந்த பெண்கள் என்னை டாக்டர் குமரேசன் என்று அடையாளம் கண்டு, நீங்க எங்களுக்கு சிகிச்சை கொடுத்திருக்கீங்கஎன்று சொல்லி காய்கறிக்குப் பணம் வாங்க மறுத்திருக்கிறார்கள். இன்னொரு அம்மா என் குழந்தைகளுக்காக நாவல் பழம் கொடுத்தார். இப்படிப்பட்ட அன்பு கிடைக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியை வேறு எதனாலும் வாங்க முடியாது" என்று கூறினார்.
என் குடும்பம்தான் என்னுடைய பலம்!
தன்னுடைய வளர்ச்சிக்குப் பின்னால் பெற்றோர்களின் உழைப்பும், மனைவியின் புரிதலும் முக்கியமான காரணங்கள் என்று கூறினார் டாக்டர் குமரேசன்.
என் அப்பா சுமார் 20 வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார். என் அம்மா இப்போது இல்லை. ஆனால், அவர் கடவுளுடன் இருந்து என்னை வழிநடத்துகிறார் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
மனைவியின் ஆதரவைப் பற்றிப் பேசும்போது, அவருடைய குரலில் நெகிழ்ச்சி தெரிந்தது.

``எனக்குத் திருமணமாகி சுமார் ஆறு வருடங்கள் ஆகிறது. என் மனைவிக்கு நான் பெரிய அளவில் எதுவுமே செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகு அவருக்கு ஒரு புடவை மட்டுமே வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்று கூட சொல்லலாம். குழந்தைகளுடன் வெளியே செல்ல முடியவில்லை. ஒரு முறை வெளியே சென்றாலும் மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வந்துவிடும். இருந்தாலும் அவர் என்னைப் புரிந்துகொள்கிறார். தீபாவளிக்கு எனக்கும் குழந்தைகளுக்கும் உடைகள் வாங்கித் தருகிறார். நான் வீட்டில் இல்லாததற்காக குறை சொல்ல மாட்டார்.
ஒரு மனிதனுக்கு வீட்டில் நிம்மதியான வாழ்க்கை அமைந்துவிட்டால், அவன் வெளியுலகில் வெற்றியாளனாக உருவாக முடியும்" என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
Research-க்கு முக்கியத்துவம் கொடுக்கணும்!
மருத்துவத் துறையில் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதும் அவருடைய எண்ணமாக உள்ளது.
“மருத்துவம் எப்போதுமே research சார்ந்த துறையாகத்தான் இருந்திருக்கிறது. நம்முடைய சித்தர்கள் காலத்திலிருந்தே மருத்துவத்தில் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஒரு நோயைக் கண்டறிவதில்கூட research இருக்கிறது. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் என தொடர்ந்து ஆராய்ச்சி தேவை என்கிறார்.
எதிர்காலத்தில் பட்டமங்கலம் பகுதியில் ‘Global AYUSH Research Centre’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற திட்டமும் இருப்பதாகக் கூறினார்.

குழந்தைகளுக்கு எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்கணும்!
இன்றைய குழந்தைகளின் உணவுப் பழக்கத்திலும் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
முன்பு குழந்தைகள் வீட்டில் சாப்பிடும் பாரம்பரிய உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டார்கள். இப்போது noodles, pizza, burger போன்ற உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். Media மூலமாகவும் மேற்கத்திய உணவுப் பழக்கங்கள், உடை, வாழ்க்கை முறை போன்றவை குழந்தைகளிடம் வேகமாகச் சென்றுவிட்டன
குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது..
பெற்றோர்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் ஜெயிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லக்கூடாது. எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெரியவர்களை மதிப்பது, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, குடும்பத்துடன் இணைந்து வாழ்வது போன்றவற்றையும் சொல்லித் தர வேண்டும்.
மருத்துவத்தில் AI பெரிய மாற்றத்தை கொண்டு வரும்!
மருத்துவத் துறையில் Artificial Intelligence ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்தும் அவர் தனது பார்வையைப் பகிர்ந்தார்.
``இப்போது நோயாளி வருகிறார், consultation நடக்கிறது, tests எடுக்கிறோம், reports பார்க்கிறோம், diagnosis செய்து treatment கொடுக்கிறோம். எதிர்காலத்தில் AI மூலம் இந்த செயல்முறைகளில் பல விஷயங்கள் வேகமாக நடக்கலாம். இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவத் துறையில் பெரிய மாற்றங்களைப் பார்க்கலாம் .

ஆனால், மருத்துவத்தில் மனிதர்களின் உணர்வைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
ஒரு நோயாளி உடல்நலப் பிரச்னையுடன் வரும்போது, அவரிடம் பேசினால் அவருடைய குடும்பப் பிரச்னைகள், மனநிலை போன்றவை தெரியவரும். ஒரு நோயாளியிடம் குறைந்தது 15 நிமிடமாவது பேச வேண்டும். இந்த டாக்டர் என்னைப் புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கை வந்துவிட்டாலே சிகிச்சையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் .
AI எதிர்காலத்தில் சில மருத்துவப் பணிகளை மாற்றினாலும், தொழில்நுட்பத்தை முழுமையாக மறுப்பது சரியல்ல.
மாற்றம் ஒன்றுதான் மாறாது. ஒரு புதிய technology மக்களுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால், அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் robotic surgery போன்றவை சாதாரணமாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
Doctor என்பது Profession… Service-ம் கூட!
ஒரு நோயாளி மிகவும் மோசமான நிலையில் வந்து, சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீட்டுக்குச் செல்லும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை பணத்தால் அளவிட முடியாது.
ஒரு நோயாளி கண்ணீர் மல்க நீங்க என்னைக் காப்பாத்திட்டீங்க என்று சொல்லும்போது கிடைக்கும் திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. நோயாளிகளின் வாழ்த்துகள் மனதுக்கு ஒரு நல்ல அமைதியைத் தருகிறது. அதனால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது . என்றார்.
மருத்துவம் உங்களுக்கு Profession-ஆ? Service-ஆ? என்று கேட்டபோது, அவர் அளித்த பதில் அவரது முழு பயணத்தையும் சுருக்கமாகச் சொல்கிறது.
``Doctor என்பது நான் விரும்பிச் செய்யும் Profession. ஆனால், அதை Service-ஆக செய்கிறேன். முடிந்தவரை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்."
ஒரு தாயின் கனவில் தொடங்கிய இந்த மருத்துவப் பயணம், இன்று பலரின் நம்பிக்கையாகத் தொடர்கிறது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

