தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உ.பி. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் - காங்கிரஸ் முயற்சி பலனளிக்குமா?

பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறது. இத்தேர்தலில் தங்களுக்கு 150 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறிக்கொண்டிருக்கிறது. இத்தேர்தலை எதிர்கொள்ள முதல் கட்டமாக காங்கிரஸ் தலைமை இரு மாநிலங்களுக்கும் புதிய தலைவர்களை நியமித்து இருக்கிறது. பஞ்சாபில், ஹாக்கி ஜாம்பவான் பர்கத் சிங்கும், உத்தரப் பிரதேசத்தில், ஆராதனா மிஸ்ரா மோனாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டு பேரும்தான் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கட்சியை வழிநடத்த இருக்கின்றனர்.

அகிலேஷ் யாதவுடம் நட்பு.!

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் காஸ் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மோனா, ராஜ்யசபா எம்.பி பிரமோத் திவாரியின் மகள் ஆவார். 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸின் உத்தரப்பிரதேச தலைவராக இருந்த அஜய் ராய்க்கு பதிலாக மோனா நியமிக்கப்பட்டுள்ளார். மோனாவும் அவரது தந்தையும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மோனா

காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றத்தை சமாஜ்வாடி கட்சி தலைமை வரவேற்றுள்ளது. இது குறித்து மோனா அளித்த பேட்டியில்,எஸ்ஐஆர் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு அல்லது பணவீக்கம் என பாஜகவின் தோல்விகளை மையமாக வைத்து நாங்கள் அரசாங்கத்தை எதிர்கொள்வோம். 2027-ல் பா.ஜ.க ஆட்சி அகற்றப்பட்டு உத்தரபிரதேசத்தில் இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்," என்று கூறினார். மக்களவை எம்.பி இம்ரான் மசூத் உத்தரப்பிரதேச செயல் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் தேவேந்திர நிஷாத் மற்றும் அலோக் பிரசாத் மாநில பிரிவின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் ராஜா சிங் வாரிங், முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடனான கடுமையான மோதலுக்கு பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு சிரோமணி அகாலி தளத்தில் இருந்த ஜாட் சீக்கிய முகமான பர்கத் சிங் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பர்கத் சிங் ஹாக்கி வீரர் ஆவார். 1992 மற்றும் 1996ம் ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பங்கேற்ற போது அதில் பர்கத் சிங் பங்கேற்றார். அகாலி தளம் தலைமையுடன் பர்கத் சிங் 2016ம் ஆண்டு மோதிக்கொண்டார். இதையடுத்து அதே ஆண்டு ஷிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் செயல்பாட்டை நேரடியாகத் தாக்கி, பாதலுக்கு கடிதம் எழுதினார். அதன் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். 2020ம் ஆண்டு பர்கத் சிங் அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு காங்கிரஸ் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், ஊழல் வழக்குகளின் சரிவு, போதைப்பொருள் அச்சுறுத்தல், வருவாய் கசிவு, மணல் மற்றும் மதுபான நடவடிக்கைகள் மற்றும் பாதல் குடும்பத்தின் போக்குவரத்து வணிகத்தின் தொடர்ச்சியான செல்வாக்கு ஆகியவை குறித்து அவர் கவலைகளை தெரிவித்து இருந்தார். தற்போது பஞ்சாப்பில் உள்கட்சி மோதல் அதிகரித்து வந்த நிலையில் தலைமையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பர்கத் சிங்

2022ம் ஆண்டு முதல் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அமரீந்தர் சிங் கட்சியின் தலைவராக தொடர்வதில் மூத்த தலைவர் சன்னி உட்பட பல மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

இது குறித்து ஆய்வு செய்த பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சச்சின் பைலட் மற்றும் பூபேஷ் பாகல் ஆகியோர் கட்சி தலைமைக்கு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தலைமை மாற்றம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்கனவே டெல்லியில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பஞ்சாப் மாநிலத்தை தக்கவைத்துக்கொள்ள அக்கட்சி போராடும். எனவே அதனை எதிர்த்து போராட நடுநிலையான ஒரு தலைவர் தேவை என்பதை உணர்ந்து பர்கத் சிங் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.