Asian Games: பிறந்தநாளில் தங்கம் வென்ற தங்க மகள்; வெள்ளியிலிருந்து வாழ்நாள் சாதனை- லவ்லினாவின் பயணம்
5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் சீன வீராங்கனை பாவோ ஸீயியை வீழ்த்தி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றார், லவ்லினா. மேரி கோமுக்குப் பிறகு இந்தச் சாதனையைப் படைத்த இரண்டாவது இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனை
ஒரு போட்டியில் வெற்றி பெறுவது சாதனை என்றால், முந்தைய தோல்வியின் நிறத்தை மாற்றி அதே மேடையில் தங்கத்தை வெல்வது அதைவிடப் பெரிய பயணம்.
அப்படியொரு பயணத்தை முடித்திருக்கிறார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன். 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அவர், 2026 ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று தனது ஆசிய விளையாட்டு கனவை நிறைவேற்றியுள்ளார்.
அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் பாவோ ஸீயியை எதிர்கொண்ட லவ்லினா, 5-0 என்ற ஒருமித்த தீர்ப்பில் வெற்றி பெற்றார். குறிப்பாக, போட்டியின் தொடக்கத்தில் இருந்தே எதிராளியின் தாக்குதல்களை எதிர்கொண்டு, சரியான நேரத்தில் எதிர்த்தாக்குதல் நடத்துவதில் கவனம் செலுத்திய அவரது ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அவசரமில்லாத ஆட்டம்… துல்லியமான குத்துக்கள்!
இறுதிப் போட்டி தொடங்கியபோது பாவோ ஸீயி தாக்குதல் பாணியை கையில் எடுத்தார். தொடர்ந்து குத்துக்களை வீசி லவ்லினாவுக்கு அழுத்தம் கொடுக்க அவர் முயன்றார். ஆனால், லவ்லினா அதற்கு அவசரமாகப் பதிலளிக்கவில்லை. எதிராளியின் நகர்வுகளை கவனித்த அவர், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்து குத்துக்களை வீசினார். குறிப்பாக, ஜாப் மற்றும் எதிர்த்தாக்குதல் குத்துகள் மூலம் புள்ளிகளைச் சேர்த்தார். தொடக்கச் சுற்று மிகவும் நெருக்கமாக இருந்தாலும், லவ்லினா 3-2 என்ற அளவில் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்த சுற்றுகளில் அவரது கட்டுப்பாடும் துல்லியமும் வெற்றியை நோக்கி அவரை நகர்த்தின.

பாவோ தொடர்ந்து தாக்குதலை அதிகரித்தபோதும், லவ்லினா தனது ஆட்டத்தின் வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டார். எதிராளியின் குத்துக்களில் சிக்காமல், தேவையான நேரத்தில் எதிர்த்தாக்குதல் நடத்தினார். இறுதியில் ஐந்து நடுவர்களும் லவ்லினாவுக்கே ஆதரவாகத் தீர்ப்பளித்தனர். இதன் மூலம் 5-0 என்ற ஒருமித்த வெற்றியுடன் தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார்.
தங்கமாக மாறிய வெள்ளி!
லவ்லினாவின் இந்த வெற்றி அவரது முந்தைய ஆசிய விளையாட்டுப் பயணத்தையும் நினைவுபடுத்துகிறது. முந்தைய பதிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சீனாவின் லி கியானிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் திரும்பினார். இந்த முறை அதே வெள்ளியைத் தங்கமாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கினார். அதற்கான பாதையும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. காலிறுதியில் தென் கொரியாவின் சியோங் சுயோனை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திய லவ்லினா, அரையிறுதியில் கஜகஸ்தானின் நடப்பு உலக சாம்பியன் நடால்யா போக்டனோவாவை 3-2 என்ற கணக்கில் போராடி வென்றார். இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் குத்துச்சண்டை வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
மேரி கோமுக்குப் பிறகு லவ்லினா
இந்தத் தங்கம் லவ்லினாவின் தனிப்பட்ட சாதனையாக மட்டும் இல்லாமல், இந்திய மகளிர் குத்துச்சண்டை வரலாற்றிலும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மேரி கோம் தங்கம் வென்ற பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை வேறு யாரும் பெறவில்லை. 2026-ல் அந்தப் பட்டியலில் லவ்லினா இணைந்துள்ளார். இதன் மூலம் மேரி கோமுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை தங்கம் வென்ற இரண்டாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆண்கள் பிரிவில் இந்தியாவுக்காக 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அமித் பங்கால் தங்கம் வென்றிருந்தார்.
பிறந்தநாளில் கிடைத்த தங்கப் பரிசு!!
இந்த வெற்றியின் மற்றொரு சிறப்பு, லவ்லினாவின் பிறந்தநாளிலேயே தங்கப் பதக்கம் கிடைத்தது. 29-வது பிறந்தநாளை கொண்டாடிய நாளில், 75 கிலோ எடைப் பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாம்பியனாக மாறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவின் பதக்கப் பட்டியலில் தற்போது ஆசிய விளையாட்டுத் தங்கமும் இணைந்துள்ளது. முந்தைய ஆசிய விளையாட்டில் வெள்ளி, ஒலிம்பிக் வெண்கலம் என இருந்த அவரது சர்வதேசப் பயணத்தில், இந்த தங்கம் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.
வெள்ளியைத் தங்கமாக மாற்றிய லவ்லினா, தனது பிறந்தநாளில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய குத்துச்சண்டை வரலாற்றிலும் புதிய பக்கத்தைத் திறந்துள்ளார்.

வளையத்துக்குள் எதிராளியின் ஒவ்வொரு நகர்வையும் நிதானமாக எதிர்கொண்டு, சரியான நேரத்தில் துல்லியமான குத்துகளைப் பதிவு செய்த அவரது ஆட்டம், இறுதியில் ஒருமித்த வெற்றியாக மாறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


