பத்தா விமர்சனம்: 80ஸ் டானை அலறவிடும் பள்ளிச் சிறுவன்; விஜய் சேதுபதி தரும் ஃபீல் குட் சினிமா!
இரக்கமில்லாத, மூர்க்க குணம் கொண்ட கேங்ஸ்டராக இருக்கிறார் பத்தா (விஜய் சேதுபதி). அவரைக் கண்டால் ஏரியாவில் அத்தனை வயதினரும் பயப்படுகிறார்கள். அதே ஊரில் வசிக்கும் சபரி (சாய் ப்ரித்வி ராஜ்) என்ற பள்ளிச் சிறுவனுக்கும் பத்தா என்றால் பயம். ஒருநாள் கோடை விடுமுறையில் தனக்குச் சொந்தமான விளையாட்டுப் பொருளை எடுக்க, யாருக்கும் தெரியாமல் பள்ளிக்குச் செல்கிறான் சபரி.
அங்கே கழிவறையில் பத்தாவும் இருக்க, அது தெரியாமல் கதவைப் பூட்டி விடுகிறான். மீண்டும் சென்று கதவைத் திறந்தால் எங்கே பத்தா தன்னைக் கொன்றுவிடுவாரோ என அச்சம் கொள்கிறான். அதன் பிறகு என்னவானது, பத்தா வெளியே வந்தாரா, சபரி என்னவெல்லாம் செய்தான் என்பதே இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இந்த பத்தா.
சேட்டையான உடல்மொழி, படபடவெனப் பேசும் வசனம், சீரியஸான நேரத்தில் அடிக்கும் ஜோக்குகள் என நமக்கு பழக்கமான, நெருக்கமான விஜய் சேதுபதி அட்டி போட்டு வலம் வருகிறார். அதில் நடுவுல கொஞ்சம் எமோஷன், ஆக்ஷன் பக்கங்கள் சேர்த்து, பத்தாவதாரம் எடுத்துப் பெயர் வாங்குகிறார். கணவனின் வன்முறை செயல்களால் மனைவிக்கு எப்படி அழுத்தமும், பதற்றமும் ஏற்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் லிஜோமோல் ஜோஸ். அக்கறை நிறைந்த கோபம், காதல் என இவரின் கதாபாத்திரம் பயணிப்பது இனிமை!

நடுக்கத்தையும் அப்பாவித்தனத்தையும் தனது கதாபாத்திரத்திற்குள் கவனமாக அடைத்துக் கைதட்டல் வாங்குகிறார் சபரியாக வரும் சாய் ப்ரித்வி ராஜ். விசும்பலோடு தனது பயத்தை பத்தாவிடம் வெளிப்படுத்தும் காட்சியில் நெகிழவும் வைக்கிறார். சூப்பர் சாய்! இவர்களைத் தாண்டி, மற்ற துணை கதாபாத்திரங்களில் ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலசந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் ஆகியோர் பாராட்டுக்குரிய பணியைச் செய்திருக்கிறார்கள். மகளாக வரும் சஹஸ்ரா ஸ்ரீ, அர்ஜுன் சிதம்பரம், இஸ்மத் பானு ஆகியோரும் குறைவில்லாத பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
தன்னுடைய நேர்த்தியான பணியால் 80ஸ் சினிமா உணர்வை லைட்டிங்கிலும், ஃப்ரேம்களிலும் கடத்துகிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே. முதல் பாதியை காமெடி, பரிதவிப்பு, ஏக்கம் எனப் பாடங்களாகப் பிரித்து வைத்துக் கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன். இரண்டாம் பாதியில், பரபரப்பையும், ஆங்காங்கே தேவையான நிதானத்தையும், தனது கட்களில் வழங்கியிருக்கிறார்.

இந்த பீரியட் சினிமாவுக்கு ஏற்ற அட்டைகளையும், பலகைகளையும் அடுக்கியிருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். அது சில இடங்களில் மட்டும் செயற்கையாகத் தெரிகிறது. மென்மையான பின்னணி இசையில் எமோஷனல் காட்சிகளின் மதிப்பைக் கொஞ்சம் ஏற்றியிருக்கிறார் பத்தாவோட ஒத்த டான் சாய் அபயங்கர். கானா பாடலில் தாளம் தட்ட வைப்பதோடு, மகளே, மொழியே என எமோஷனல் ஏரியாவிலும் அட்டகாசம் செய்திருக்கிறார்.
ஒரு ரவுடி தன் தவறுகளை உணர்ந்து திருந்துகிறார் என்கிற ஒன்லைனை சுவாரஸ்யமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். பத்தா நிகழ்த்தும் ஏடாகூடங்கள், அவரின் பின்னணி எனப் படம் மெதுவாக நகரத் தொடங்குகிறது. பத்தாவைப் பற்றி குழந்தைகளிடையே பரப்பப்படும் ஃபேண்டஸி பொய்கள், அதனால் பயம் கொள்ளும் சிறுவன் போன்றவை க்யூட்டான கவிதைகள். அதுவே பத்தா கழிவறையில் சிக்கிக் கொண்ட பின்னர் கலகல காமெடி தோரணம் கட்டத் தொடங்கிவிடுகிறது திரைக்கதை! தண்ணீர் நிரம்பிய தொட்டி, வாலிகள், பாம்பு, நொறுக்கப்பட்ட பொறை, பெயருடன் கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாள் உள்ளிட்ட விஷயங்களை நகைச்சுவைக்கும், எமோஷனுக்கும், ட்விஸ்ட்டுக்கும் பயன்படுத்தியது இயக்குநரின் சாமர்த்தியம்!

அதிர்ச்சி தரும் இடைவேளையை எட்டும் படம், ட்விஸ்ட்டோடு இரண்டாம் பாதியை எதிர்நோக்க வைக்கிறது. சிறுவனின் பயம் ஒருபுறம் என்றால் அதற்கு பத்தா கொடுக்கும் ரியாக்ஷன்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. சிறுவன் ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற பதைபதைப்பும் படம் முழுக்கவே இருப்பது ப்ளஸ்! மூடியிருக்கும் பள்ளிக்கு பத்தா ஏன் சென்றார் என்று கேள்வியோடு நம்மைக் கடைசி வரை கூட்டிச் சென்றதும், அதனை க்ளைமாக்ஸில் இணைத்த விதம் நல்லதொரு சிறுகதை டச்! ஆனால், சிறுவன் தப்பிப்பதற்காக நிகழ்த்தும் போராட்டத்தைத் தேவைக்கு அதிகமாக நீட்டிச் சொல்லியிருப்பதும் லேசாக சோம்பலூட்டுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

