`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? - நயினார் கண்டனம்!
"ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்தமாக ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புதிய ஆட்சி, சிறந்த நிர்வாகம் என வாய்ஜாலம் காட்டிய தவெக அரசால் அரசால், மின் பற்றாக்குறையைக்கூடச் சமாளிக்க முடியவில்லை. முன்கூட்டிய திட்டமிடல் துளியும் இன்றி, தமிழகத்தைத் தொழில் முடக்கத்திற்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கும் தள்ளிவிட்டதே திரு. விஜய் அவர்களது அரசின் நிர்வாகத் தோல்விக்கு அப்பட்டமான சான்றாகும்.
மின்சார வாரியத்தின் மின்சாரம் யூனிட்டுக்கு ₹7 ஆக உள்ள நிலையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதால் உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ₹16 முதல் ₹30 வரை உயர்ந்து, தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கியத் தொழில் நகரங்களில் இயங்கும் வார்ப்பகங்கள் மற்றும் பஞ்சாலைகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. தொழில்முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது.

எனவே, தவெக அரசு மெத்தனப் போக்கைக் கைவிட்டு, மாற்று வழிகளில் மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து, தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


