தலைக்கேறிய மது போதை... சொந்த வீட்டையே எரித்த இளைஞர்! - குளித்தலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சி, குப்பாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சிறும்பாயி. இவர்கள், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நந்தகுமார் (வயது: 22) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், நந்தகுமார் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி வீடு மற்றும் ஊரில் பலத்தரப்பட்ட மக்களிடமும் வீண் தகறாரில் ஈடுபட்டு வீண்சண்டைகளும் செய்து வந்துள்ளார்.

மேலும், இவர் மீது பெட்டவாய்த்தலை, லாலாப்பேட்டை, குளித்தலை, முசிறி உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளிலும் 20 -க்கும் மேற்பட்ட பல்வேறு திருட்டு, குற்ற சம்பவ வழக்குகளும் நிலுவையிலும் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கஞ்சா, மது போதையில் வந்த நந்தகுமார் தனது குடும்பத்தினரிடம் வீண் தகராறில் ஈடுபட்டு வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் இணைப்பை பிடுங்கி தீ வைத்துள்ளார்.

இதில், சமையல் எரிவாயு தீப்பிடித்து பற்றி எரிந்ததில் குடிசை வீடு தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. குறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அருகில் இருந்த வீட்டினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயினை அணைத்தனர்.

kulithalai

பின்னர், குளித்தலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். மேலும், நந்தகுமாரினால் தினமும் ஊர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல் படுவதாகவும் குற்றவாளியை இன்னும் கைது செய்யவில்லை. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குளித்தலை இன்ஸ்பெக்டர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டையே எரித்து சாம்பலாக்கிய சம்பவம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.