Fly Dubai: பிளம்பர், பல் மருத்துவர் ஸ்மித் மிச்சாருடன் இவர்களும் உண்மையான வீரர்களே!
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்த FZ1073 ஃபிளைதுபாய் விமானம் நூலிழையில் பெரும் அசம்பாவிதத்திலிருந்து தப்பித்திருக்கிறது.
குறிப்பிட்ட இந்த விமானத்தின் இரண்டு விமானிகளில் ஒருவர் (இவர் ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது) விமானத்தைத் தகர்க்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
இவரைத் தடுக்க முயன்ற இந்திய விமானியான ஸ்மித் மச்சாரை அந்த விமானி கத்தியால் குத்தியிருக்கிறார்.
கத்தியால் குத்தப்பட்டும், விமானத்தைக் காப்பாற்றுவதற்காக ஸ்மித் மச்சார் தொடர்ந்து முயற்சித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தீவிர காயம்... ரத்தப்போக்கினால் போராட முடியாத ஸ்மித் மச்சார், காக்பிட்டின் கதவைத் திறந்துள்ளார்.
கதவு திறந்ததும் நிலைமையை உணர்ந்த பயணிகளில் சிலர், தங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளாலும் விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்க உதவியிருக்கின்றனர்.
அதில் ஒருவர் யானிவ் ஹாயூன். இவர் பிளம்பர் ஆவார்.
விமானத்தில் என்ன நடந்தது... அவர் என்ன செய்தார் என்பதை விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் விளக்கியிருந்தார். அது அவரது வார்த்தைகளிலேயே...
“காக்பிட்டிற்குள் இரு விமானிகளும், தற்செயலாகப் பயணிகளில் இரு விமானிகளும் இருந்தனர். காக்பிட்டிற்குள் சத்தம்... விமானத்தின் நகர்வு காரணமாக காக்பிட்டைத் திறக்க முயன்றோம்.
கத்திக்குத்தப்பட்ட விமானி காக்பிட்டின் கதவு அருகேயே விழுந்திருந்ததால், அதைத் திறக்கச் சிரமமாக இருந்தது.
காக்பிட் கதவைக் காயம்பட்ட விமானிதான் திறந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
காக்பிட்டிற்குள் நுழைந்ததும், தாக்குதலுக்குக் காரணமான விமானி இருக்கைகளுக்கும் இடையே இருந்த கட்டுப்பாட்டுக் கருவிகளின் மீது அமர்ந்திருந்து, இயக்கக் கருவிகளைச் சேதப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.
உடனே, அவரின் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்தேன். அடுத்த சில நொடிகளிலே, விமானம் தலைகீழாகச் சாய்ந்துகொண்டிருந்தது.
நான் ‘ஏர் க்ராஷ் இன்வெஸ்டிகேஷன்’ நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். அதனால், விமானத்தை நிலைக்குக் கொண்டுவர விமானத்தின் கட்டுப்பாட்டு யோக்கை இழுத்தேன்.

அதன்பின், பயணிகளில் இருந்த விமானி ஒருவர் வந்து விமானத்தை இயக்குவதைப் பார்த்துக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.
யானிவ் ஹாயூன் பேசும்போது இரு விமானிகள் என்று கூறியிருக்கிறார். இந்த இருவர் குறித்து இஸ்ரேலின் ‘ஜெருசலேம் போஸ்ட்’ கூறியுள்ளதாவது...
“குவைத் வான்வெளியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்படும். அப்போது ஃபிளைட் டைம் கூடுதலாக ஓரிரு மணிநேரம் ஆகும்.
இதனால், பணிநேர வரம்பைத் தாண்டி விமானிகள் வேலை செய்வதாக இருக்கும். இதைத் தடுக்கத்தான் கூடுதலாக இரு விமானிகள் அந்த விமானத்தில் இருந்திருக்கின்றனர்” என்று சொல்கிறது.
குவைத் வான்வெளிப் பிரச்னை என்பது மத்திய கிழக்கில் தற்போது நடந்து வரும் தாக்குதல்களைக் குறிக்கிறது.
இரு விமானிகள் இருந்தும், சம்பவத்திற்குப் பின், ஒரு விமானி மட்டும் உதவச் சென்றது குறித்து, “ஒரு விமானி அதிர்ச்சியில் இருந்தார்” என்று ஜெருசலேம் போஸ்ட் கூறுகிறது.
இந்தச் சம்பவத்தில் உதவிய இன்னொருவர் பல் மருத்துவர் ஒருவர். இவர் ஷோடா முசாயேவ். இவர் ஸ்மித் மச்சாரைப் பார்க்கும் போது, மிக மோசமான நிலையில் இருந்திருக்கிறார்.

ஆனால், சுயநினைவுடனே இருந்திருக்கிறார். ஸ்மித் மச்சார் இவர்கள் அருகில் சென்றதும் கொஞ்சம் பேசியிருக்கிறார். ஷோடா முசாயேவ் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, “விமானத்தில் இருந்த ஒரே மருத்துவர் நான் மட்டுமே. விமானியின் காயங்களிலிருந்து வெளியேறிய ரத்தப்போக்கை என்னால் முடிந்தவரை கட்டுப்படுத்தினேன்.
விமானம் தரையிறங்குவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு வரை அவரது உடல்நிலை ஓரளவு சீராகவே இருந்தது. ஆனால், தரையிறங்கும் தருணத்தில் நிலைமை சற்று மோசமடைந்தது.
அவரது தலையிலும் கைகளிலும் கடுமையான வெட்டுக் காயங்கள் இருந்தன... அவை கிட்டத்தட்ட இரண்டாகப் பிளந்திருந்தன. அதிக அளவு ரத்தத்தை இழந்திருந்ததால், அவரது நிலைமை மிகவும் தீவிரமாக இருந்தது.
உடனடியாக உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றாலும், கடுமையான ரத்தப்போக்கின் காரணமாக அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது.
சவூதியில் தரையிறங்கிய பின், மச்சாரைச் சவூதி மருத்துவக் குழு பார்த்துக்கொண்டது” என்று சொல்லியிருக்கிறார்.
டெல் அவிவ் நோக்கித் தொடங்கிய யானிவ் ஹாயூன், ஷோடா முசாயேவின் ‘வழக்கமான’ விமானப் பயணம், இப்போது அசம்பாவிதத்தைத் தடுத்த ‘ஹீரோயிக்’ பயணமாக மாறியிருக்கிறது.
இவர்களும் உண்மையான வீரர்களே!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


