“பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக.!- திருமா கூறியதென்ன?

தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர இருக்கிறது என தகவல்கள் வெளியான நிலையில், நேற்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, “அது வதந்தி” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்க நேரலையில் பாமக - தவெக குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

ஃபேஸ்புக் நேரலையில் பேசிய திருமாவளவன், “பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக பின்வாங்குவார்கள். தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டமாட்டார்கள், தவெக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிக்க மாட்டார்கள்.

விஜய், அன்புமணி, சௌமியா

இதன் மூலம், தவெகவுக்கு விசிகவின் ஆதரவு முழுமையாக போய்ச் சேராமல் தடுக்க வேண்டும். விசிகவின் வாக்குகளை தவெகவுக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும் என பரப்புகிறார்கள். இயக்கத் தோழர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

பாமக, பாஜக இருக்கும் அணியில் விசிக இடம் பெறாது என கடந்த 15 வருடங்களாக சொல்லிவருகிறோம். அந்த நிலைப்பாட்டை ஒரு வாய்ப்பாகக் கருதி, தவெக கூட்டணியில் பாமக இடம் பெறப்போகிறது எனும் வதந்தியை திட்டமிட்டு பரப்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் அதிமுகவுக்கு வழங்க வேண்டிய ஆதரவை வழங்காமல் நடுநிலைபாட்டை எடுத்திருக்கிறார்கள்.

இடைத் தேர்தல் முடிந்த பிறகு பாமக, தவெகவுடன் கைகோர்க்கும், அமைச்சரவையில் இடம் பெறும், துணை முதலமைச்சர் பதவி என்றெல்லாம் செய்திகளை பரப்புகிறார்கள்.

ஆட்சி அமைப்பதற்கு முன்பே தவெக – பாமக பேச்சுவார்த்தை என பரப்பினார்கள். ஆனால், விசிக, ஐ.யு.எம்.எல், இடதுசாரிகளின் ஆதரவைத்தான் தவெக திரட்டியது என்பதை யாரும் மறுக்க முடியாது. விசிகவை, தவெக மற்றும் திமுக என இரண்டில் சேரவிடாமல் தனித்துவிடப்பட வேண்டும் எனும் உள்நோக்கத்துடனே வதந்திகளை திட்டமிட்டு பரப்புகிறார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

தவெக – பாமக இடையேயான உறவு எத்தகையது என்பது நமக்கு தெரியாது. அதை பற்றி ஒருபோதும் நாம் சிந்தித்ததும், ஆய்வையும் மேற்கொண்டதில்லை. ஆகவே நமக்கு எந்த ஊசலாட்டமும் இல்லை.

இதுபோன்ற வதந்திகளை எப்போது வந்தாலும் அதனை நாம் பொருட்படுத்த தேவையில்லை. தவெகவுடன் நாம் கொண்டிருக்கும் இந்த அரசியல் உறவு திடுமென ஏற்பட்ட உறவு என்றாலும், வரலாற்று, காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட உறவு என்பதை மறுக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.